சீனாவைச் சேர்ந்த யானைக் கூட்டம் கடந்த சில நாள்களாக உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சீனாவின் ஷி சுவாங்பன்னா டாய் மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து கூட்டமாக வெளியேறிய 15 யானைகள் இதுவரை 500 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து, யுனான் மாகாணத் தலைநகர் கன்மிங்கிற்கு வந்தன. சீனாவில் திசைமாறி சுமார் 500 கிலோ மீட்டர் தூரம் நடந்து நகருக்குள் வந்த காட்டு யானைகள், மீண்டும் காட்டுக்குள் விரட்டப்பட்டபோது நடக்க முடியாமல் ஓய்வெடுத்து மீண்டும் தங்களுடைய வலசையை தொடர்ந்தன.
அப்போது சீனாவின் வன தீயணைப்பு படையினரால் எடுக்கப்பட்ட ட்ரோன் புகைப்படங்கள், ஜின்னிங் மாவட்டத்தில் ஒரு வனத்தின் நடுவில் யானைக் கூட்டம் தூங்குவது, உண்பது என ஒரு நாள் முழுவதும் ஓய்வு எடுத்தது பதிவானது. அந்த வீடியோ காட்சிகள், புகைப்படங்கள் எல்லாம் உலகளவில் வைரலானது. குறிப்பாக, யானைகள் ஒன்றாக தூங்கும் காட்சிகள், அதில் குட்டி யானை ஒன்று தூங்காமல் குறும்புத்தனம் செய்யும் காட்சிகள் மிகவும் பிரபலமானது. பலர் அதை குதூகலத்துடன் பார்த்தாலும், அதில் இருக்கும் சோகம் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
உலகெங்கும் யானைகள் தங்களது வாழ்விடங்களை தொலைத்துவிட்டு வாழ்வதற்காக இங்கும் அங்கும் அல்லாடுவதற்கு உதாரணமே இந்த சீன யானைகளின் பயணம். சீனாவில் மட்டும் அல்ல, இந்தியாவில் கூட யானைகள் தங்களது வலசைப் பாதை ஆக்கிரமிக்கப்பட்டதால் ஊருக்குள் வருவதும், பின்பு வனத்துறையினர் அதனை விரட்டுவதும் என தொடர்கதையாகவே இருந்து வருகிறது. அதவும் சீனா, இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமிருக்கும் நாடுகளில் நகரங்கள் பெருகி காடுகள் சுருங்கியதால் யானைகள் தங்களது மூதாதையர் பாதையில் பயணிக்க மனிதனோடு போராடிக் கொண்டே வருகின்றன.
யானைகள் - ஒரு பார்வை
உலகளவில் முன்பொரு காலத்தில் உலகில் இருந்த 24 வகை யானை இனங்களில், 22 வகைகள் அழிந்துவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சமீபத்திய கணக்கெடுப்பின்படி, ஆப்பிரிக்காவில் 4 லட்சம் யானைகளும், ஆசியாவில் 55,000 யானைகளும் இருக்கின்றன. இதில் இந்தியாவில் மொத்தம் 27,312 காட்டு யானைகள் இருப்பதாகவும், தமிழகத்தை பொறுத்தவரை 2761 காட்டு யானைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கர்நாடக மாநிலத்தில் 6049 யானைகளும், அசாம் மாநிலத்தில் 5719 யானைகளும் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு யானை சராசரியாக 60 முதல் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கிறது. யானைக்கு தினசரி 200 முதல் 250 கிலோ உணவு தேவைப்படுகிறது; ஒரு நாளைக்கு 150 முதல் 220 லிட்டர் தண்ணீர் வரை குடிக்கிறது.
யானைகளின் வலசை!
முன்பெல்லாம் வயதான யானையின் தலைமையில் ஒரே கூட்டமாக யானைகள் இடம்பெயரும். இப்போது யானைகளும், மனிதர்களைப்போல கூட்டுக் குடும்ப வழக்கத்தை விட்டுவிட்டன. வயதான யானையின் வழிகாட்டுதலில் மற்ற யானைகள் செல்லும்போது, மனிதர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் இருந்தது. இப்போது பல்வேறு சுற்றுச் சூழல் மாறுதல்களால் யானைக் குடும்பம் சிதறி, சிறு சிறு குழுக்களாக இடம் பெயருகின்றன.
ஒரு கூட்டத்தில் முன்பெல்லாம் 20 முதல் 30 யானைகள் இருக்கும். இப்போது 6 முதல் 10 யானைகள் மட்டுமே இருக்கின்றன. இப்போது வழித்தடங்கள் பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதால் ஒவ்வொரு நாளும் உலகின் ஏதோ ஒரு மூலையில் யானைகள் தொடர்ந்து நடந்துக்கொண்டேதான் இருக்கின்றன. அதற்கு தேவையான தண்ணீரும் உணவும எங்கு கிடைக்கிறதோ அங்கு யானை வந்துவிடும். அதைத்தான் நாம் யானை ஊருக்குள் புகுந்துவிட்டது என கூறுகிறோம்.
இதுகுறித்து கோவை மாவட்டத்தில் இயங்கும் 'ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாஸ் கூறும்போது "யானைகள் நன்றாக தூங்கும். ஆனால், தனக்கு உகந்த இடம் இல்லையென்றாலோ தனக்கு ஆபத்து இருக்கும் இடம் என்றால் அவை நின்றுக்கொண்டுதான் தூங்கும். அதுவே தங்களுக்கு பாதுகாப்பான இடம் என்றால், அவை படுத்து தூங்கும்.
யானை படுக்கிறபோது முன்னங்கால்களை நீட்டி படுக்க முடியாது. இப்படிதான் பக்கவாட்டில்தான் உறங்கும். வயிறு அழுந்த யானைப் படுத்தால் அவை நுரையீரல் பாதிக்கப்பட்டு இறந்துவிடும்.
இப்படி யானை படுத்து உறங்கும் காட்சி அறிதானது என்றாலும் அது இயல்பானதுதான். யானைகளுக்கு நிறைய புற்கள் தேவை; அதனால் எங்கு நல்ல புற்கள் கிடைக்கிறதோ அவற்றுக்காக தொடர்ந்து பயணிக்கும் பழக்கத்தை கொண்டது யானை. மேலும் யானையின் வலசைப் பாதைகள் அதன் ஜீன்களிலேயே இருக்கும் என்பதால் அவை வாழையடி வாழையாக தொடரும்" என்கிறார் அவர்.
- ஆர்.ஜி.ஜெகதீஷ்