கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக எல்லையில் அமைந்துள்ளது பேடரப்பள்ளி கிராமம். இப்பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியொன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மொத்தம் 950 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இதில் சுமார் 180 மாணவர்கள் உத்தரப்பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம், பீகார், அசாம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த குழந்தைகள். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பொன் நகேஷ் என்பவர் பணியாற்ற, 10 பட்டதாரி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் மாணவர்களின் வருகை விகிதம் அதிக அளவில் இருந்தது. ஆனால் தற்போது தனியார் பள்ளிகள் மீதான மோகத்தின் காரணமாக பெரும்பாலான மக்கள் தங்களது பிள்ளைகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்த்து விட்டனர்.
உள்ளூர் மாணவர்கள் மிக குறைந்த அளவிலே இந்த அரசு பள்ளிக்கு கல்வி கற்க வருகை தரும் நிலையில், வடமாநில தொழிலாளர்களின் பிள்ளைகள் அதிக அளவில் பேடரப்பள்ளி மாநகராட்சியில் நடுநிலை அரசுப்பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். அதிலும் இந்த மாணவர்கள் தமிழ் பாடத்தை விரும்பி ஆசையோடு படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழி பாடங்கள் கற்று கொடுக்கப்படுகிறது. பேடரப்பள்ளி அருகே சிப்காட் உள்ள நிலையில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு சிறிய - பெரிய தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் வட மாநில தொழிலாளர்கள் தங்களது பிள்ளைகளை இந்த பள்ளிக்கு கல்வி கற்க தினமும் அனுப்பி வருகின்றனர்.
மிகக்குறைந்த ஊதியத்தில் குடும்பம் நடத்தி வரும் அவர்கள், தங்களது பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமல் இருப்பதை அறிந்த இப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் தாங்களே முன்சென்று வட மாநில தொழிலாளர்களை அணுகி அவர்களின் குழந்தைகள் கல்வி கற்பதற்காக அரசு பள்ளிக்கு தினந்தோறும் அனுப்பிவைக்க ஏற்பாடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமும் பள்ளிக்கு வரும் வட மாநில குழந்தைகள் பள்ளி தொடங்கும் முன் தமிழ் தாய் வாழ்த்து, திருக்குறள் ஆகியவற்றை கூறிய பின்புதான் வகுப்பறைக்கு செல்கின்றனர்.
வகுப்பறையிலும் மற்ற உள்ளூர் மாணவர்களோடு சேர்ந்து தமிழ் மொழியை ஆசையோடு கற்று வருகின்றனர் இக்குழந்தைகள். இங்குள்ள ஆசிரியர்களும் வட மாநில குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள், உயிர் மெய் எழுத்துக்கள், ஓர் எழுத்துக்கள், இரு எழுத்துக்கள், சொற்கள் மற்றும் நாளிதழ்களை வாசிப்பு பழக்கம் என அனைத்தையும் சொல்லி கொடுத்து வருகின்றனர். தமிழ் மொழியில் எழுதியும் வாசித்தும் வரும் இக்குழந்தைகள், தினந்தோறும் ஆசையோடு பள்ளி வந்து தமிழ் பாடத்தை அதன் நயம் மாறாமல் வாசிப்பது வியப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுதவிர இந்த மாணவர்களுக்கு ஆங்கில மொழி புலமையையும் பாடம் வழியாக ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர். அதனையும் மாணவர்கள் ஆர்வத்தோடு படித்து வருகின்றனர்.
ஓசூர் பகுதிகளில் ஓசூர் சிப்காட், பாகலூர், உளிவீரணப்பள்ளி, கொத்த கொண்டப்பள்ளி உள்ளிட்ட பல இடங்களில் வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வாழ்கின்றனர். மிக குறைந்த ஊதியத்தில் குடும்பத்துடன் வாழும் இவர்களின் பிள்ளைகள் வறுமை காரணமாக கல்வி கற்காமல் வீட்டிலேயே முடங்கும் நிலை இருந்தது. ஆனால் தற்போது ஏராளமானோர் தங்களது பிள்ளைகளை கல்வி கற்க அருகிலுள்ள அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.
தங்களை போல தங்களது பிள்ளைகளும் வாழக்கூடாது, அவர்கள் படித்து சாதிக்க வேண்டும் என்ற ஆசையோடு கல்வியின் அவசியத்தை உணர்ந்து பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர் அத்தொழிலாளர்கள்.