“எனக்கு ரொம்ப பயமாயிருக்கு. எங்களுக்கு பயமாயிருக்கு. எனக்கும், எங்க குடும்பத்துக்கும், எங்க ஊருக்குமே பாதுகாப்பு வேணும்...”
- என நாங்குநேரியில் சா’தீ’ய கொடுமையால் நிகழ்ந்த வன்முறையில் சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட பள்ளி மாணவி, நா தழுக்க தழுக்க நம்மிடம் பேசிய வார்த்தைகள் இவை.
‘ரொம்ப பயமாருக்கு’ என்ற அந்தக் குழந்தையின் குரல் இன்னும் எங்கள் காதுகளுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஒருபக்கம் ‘வைக்கம் போராட்டம் நடந்து 100-வது ஆண்டு’, ‘கலைஞர் நூற்றாண்டு’ என எண்ணற்ற நூற்றாண்டுகளை கொண்டாடி வருகிறது தமிழ்நாடு அரசு.
ஆனால் இன்னொருபக்கம் இதே தமிழ்நாட்டில், திருநெல்வேலி நாங்குநேரியில் ‘நீ அந்த சாதிக்காரன் தானே... என்னைப்பற்றி புகார் கொடுப்பியா’ என தங்களுடன் படித்த சக மாணவனையும் அவனது தங்கையையும் வெட்டியுள்ளனர் சில மாணவர்கள்.
இந்நிகழ்வு, நம் எதிர்கால பிள்ளைகளையும் சாதீயத்துக்கு நாம் இழக்கிறோம் என்பதை நமக்கு மீண்டும் ஒருமுறை நினைவூட்டியிருக்கிறது. இதை எப்படித்தான் களைவது? அரசு என்னதான் செய்யவேண்டும்? நாம் கோட்டைவிட்டது எங்கே?
“இது முதல் சம்பவம் இல்லை. இதற்கு முன்னும் சாதிக்கயிறு, சாதி பனியன், ஆசிரியரே சாதிய அடையாளத்தோடு மாணவர்களை அழைப்பது என்றெல்லாம் மிக மோசமான, அருவருப்பான நிகழ்வுகள் நடந்துள்ளன. ஆக பள்ளிக்கூடங்களிலே சாதியம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. அதனால் பள்ளிக்கூடங்களில் சாதிய வன்முறை அதிகரித்துள்ளன, சாதிய அத்துமீறல்கள் நிகழ்ந்துள்ளன. இதற்கெல்லாம் அரசாங்கம் என்ன செய்தது என்பதுதான் இங்கு கேள்வியே.
உண்மையில் இந்நிகழ்வுகளின்போதெல்லாம் அரசு அந்நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்ததே தவிர, அவை மேற்கொண்டு ஏற்படாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுத்தது? பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள், பள்ளித்தலைமையாசிரியர் அமைப்புகள் என யாரிடமாவது பேசினீர்களா? கல்வித்துறையில் ஏதேனும் மாற்றத்தை கொண்டுவந்தீர்களா? அல்லது ஏதேனுமொரு குழு அமைத்து அதன்மூலம் மாற்றத்தை கொண்டுவந்தீர்களா?
அரசு தரப்பில் திறனாய்வு, விளையாட்டு போட்டி, கலை நிகழ்ச்சி போன்றவையாவும் கவனப்படுத்தியுள்ளதுதான். ஆனால் அதற்கிடையே இந்த விஷயத்தை (சாதிய கட்டமைப்புகளை உடைப்பது) மறந்துவிட்டதோ அரசு என்றே நினைக்கத்தோன்றுகிறது. தொடக்கத்திலேயே கடுமையான நடவடிக்கைகளும், கல்வித்துறையில் மாற்றங்களையும் கொண்டுவந்திருந்தால் இன்று இப்பிரச்னையை தடுத்திருக்கலாம். ஒவ்வொருமுறையும் ஒரு குழந்தை மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட பின்னர்தான் நடவடிக்கை எடுப்பேன், அதற்கு ஆலோசனை செய்வேன் என சொல்வது எப்படி சரியாகும்?
கல்வித்துறையில் இருக்கும் மிகமுக்கியமான பிரச்னை, சாதிய ஆசிரியர்கள். பல ஆசிரியர்கள் தங்கள் சாதிக்காரர்கள் இருக்கும் தங்கள் ஊருக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிக்கொண்டு சென்றுவிடுகின்றனர். அங்கு சென்றபின், சுயசாதி மாணவர்களுக்கு மட்டும் தனிக்கவனம் கொடுக்கின்றனர். இதெல்லாம் ஒவ்வொன்றாக வளர்ந்து வளர்ந்துதான் இன்று இப்படி மோசமாக ஒரு மாணவன் பாதிக்கப்பட்டுள்ளான். முதலில் இப்படி சொந்த ஊருக்கு கொடுக்கப்படும் ட்ரான்ஸ்ஃபர்களை களைய வேண்டும்.
இந்த நாங்குநேரி சம்பவத்திலேயே கூட, சம்பந்தப்பட்ட பள்ளி தரப்பில் ‘3 நாட்களுக்கு முன்பே எங்கள் கவனத்துக்கு பிரச்னை வந்தது. அப்போதே விசாரித்து எழுதிவாங்கினோம்’ என்கிறார்கள். இவர்கள் மாவட்ட கல்வித்துறையை அணுகினார்களா, குழந்தை பாதுகாப்பு அமைப்பிடம் சொல்லி ஆலோசனை பெற்றார்களா, அல்லது மாவட்ட நிர்வாகத்திடமாவது சென்றார்ளா? என எதுவுமே தெரியவில்லை. இது எதையுமே செய்யாமல் இத்தனை நாட்களாக பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
சம்பந்தப்பட்ட குழந்தை, தான் பல நாட்களாக இந்த இன்னல்களுக்கு உள்ளானதாக சொல்கிறார். அப்படியெனில் அவர் துன்புற்று, விடுப்பெடுத்து, பள்ளியை விட்டே நீங்கும் அளவுக்கு ஆகும்பட்சத்தில்தான் உங்கள் கவனத்துக்கே அது வந்ததா? எனில் வகுப்புகளில் என்ன கவனிக்கின்றீர்கள் ஆசிரியர்களே? இப்போதும்கூட, சம்பவம் நடந்தபிறகு மாவட்ட ஆட்சியர் ‘கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம்’ என்கிறார். எனில் இவ்வளவு நாள் என்ன செய்தீர்கள்? மீண்டும் கேட்கிறேன். ஒவ்வொருமுறையும் ஒரு குழந்தை மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட பின்னர்தான் நடவடிக்கை எடுப்பேன், அதற்கு ஆலோசனை செய்வேன் என சொல்வது எப்படி சரியாகும்?
எனக்குத் தெரிந்து இப்போதெல்லாம் பல பள்ளிகளில் இன்ஸ்பெக்ஷன்கள் நடப்பதே இல்லை. காரணம் ஒவ்வொரு கல்வி அதிகாரிக்கும் கீழ் 125 - 150 பள்ளிகள் வருகின்றன. அவர்களாலும் ஆய்வு செய்யமுடியவில்லை. இதனால் பள்ளிக்கூடங்களை யாரும் கண்காணிப்பதில்லை. எந்தக் கண்காணிப்புக்கும், கட்டுப்பாட்டுக்கும் கீழ் வராமல் மாணவ விரோத போக்குடன் உருவாகின்றன கல்வி நிலையங்கள். கொரோனா காலத்தில் வீட்டுக்குள் வாழ்க்கை முடங்கியபோது பல மாணவர்கள் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகினர்.
இன்றைய சமூக ஊடகங்கள்கூட சாதியைத்தான் சொல்லித்தருகிறது. தவறான வகையில், தவறான விஷயத்துக்கு கொம்புசீவப்படுகிறது நம் மாணவர்களுக்கு! இதெல்லாம் தவறென பள்ளியளவில் எங்கே நாம் சொல்லிக்கொடுத்தோம்? நீதி வகுப்புகள் எங்கே நடந்தன?
தேவநேயன், குழந்தைகள் நல செயற்பாட்டாளர்
குறைந்தபட்சம் இங்கே பள்ளிகளில் குழந்தைகள் ஒன்றிணைந்து பணியாற்றும் ஆண்டு விழாக்கள் நடந்தனவா? விளையாட்டு போட்டியாவது நடந்ததா? இப்படியான பிரச்னைகளை கடந்த காலத்திலிருந்தே எதிர்கொள்கிறோமே.. இதை தடுக்க இதுவரை என்னதான் அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது? அதற்கு ஏதும் ஆய்வு உள்ளதா? கள நிலவர அறிக்கையாவது உள்ளதா?
சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தவுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீடியோவொன்றை வெளியிட்டார். அதில் அவர், ‘அண்ணனாக இருந்து நான் அந்த மாணவரின் கல்வி உதவித்தொகையை ஏற்கிறேன்’ என்கிறார். அவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியதால் மட்டுமே வந்த பிரச்னையா இது? மட்டுமன்றி அப்படியே உதவித்தொகை செய்ய நினைத்தாலும், அதற்கென்று தனித்தனி சட்டங்கள் உள்ளனவே... பிறகு ஏன் இவர் தனிப்பட்டு செய்ய வேண்டும்? முழுக்க முழுக்க எமோஷனலாக மட்டுமே ஒவ்வொரு பிரச்னையையும் அணுகுகின்றனர். இது ஆபத்தான போக்கு.
அறிவுப்பூர்வமாகத்தான் எதையும் அணுகவேண்டும். அப்போதுதான் இப்பிரச்னையும் களையப்படும்; மேற்கொண்டு பிரச்னை எழுவதும் தடுக்கப்படும். இவ்விவகாரத்தில், ‘கல்விநிலையங்களில் சாதிய வன்முறையை நிகழ்த்தியவர்கள், கட்டவிழ்த்துவிட்டவர்கள், ஊக்குவித்தவர்கள், வேடிக்கை பார்த்தவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவர்’ என்று சொல்லவேண்டும். அதைவிட்டுவிட்டு, படிக்க வைக்கிறேன் என்கிறார். அதை செய்ய அரசு திட்டங்கள் உள்ளன. எஸ்.சி எஸ்.டி சட்டப்பிரிவின் கீழ் அதை செய்துவிடலாம். இப்போது பிரச்னை வர்க்க வேறுபாடு மட்டுமல்ல. தயவுசெய்து அப்படி மடைமாற்றம் செய்யாதீர்கள். அதை அமைச்சரும் முதல்வரும் அரசு இயக்கமும் கல்வி கட்டமைப்பும் உணரவேண்டும்.
இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்டது வெட்டுப்பட்ட இரு குழந்தைகள் மட்டுமல்ல. கைதான பிற குழந்தைகளும்தான். அவர்களுக்கு தாங்கள் செய்தது தவறென்றே தெரியவில்லையென்று சொன்னதாக களத்தகவல்கள் சொல்கின்றன. அவர்களுக்கு நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள்?
அவர்களைப்போல நெஞ்சில் நஞ்சை கொண்டுள்ள பள்ளிக்குழந்தைகளுக்கு எப்போது பாடத்திட்டத்தில் தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என்பதை அரசியலமைப்பு சட்டத்தின் வழியாக சொல்லிக்கொடுக்கப்போகின்றீர்கள்? இங்கு புத்தகங்களில் அரசியலமைப்பு பாடங்கள் தேவைப்படுகிறது. வகுப்புகளில் நீதி வகுப்புகள் (Value Education) தேவைப்படுகிறது. சமத்துவத்தையும், சமூக நீதியையும் விட்டுவிட்டு அறிவியலையும் கணிதத்தையும் மட்டும் சொல்லிக்கொடுப்பது நிச்சயமாக எதிர்காலத்தில் உதவாது.
இன்றைய ஆசிரியர்கள், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் போல ஆகிவிட்டார்கள். மதிப்பெண் எடுக்க வேண்டும், ரிசல்ட் காண்பிக்க வேண்டும் என்றுதான் இருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். ஆசிரியரென்பவர் ஒழுக்கம், சமத்துவம், சரியான மற்றும் வயதுக்கேற்ற பாலியல் கல்வி ஆகியவற்றையும் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். அந்தச் சூழலை ஆசிரியர்களுக்கு இந்த அரசு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
இன்று நாங்குநேரி சம்பவத்தில்கூட, அந்த முதல் தலைமுறை மாணவர். அவர் தன் தாயிடம் ‘நான் வேற வேலைக்கு போறேன், படிக்கல’ என்றிருக்கிறார். இந்த விவகாரம் வெளியில் தெரிந்ததால் நாம் ஏதோ ரியாக்ட் செய்கிறோம். ஆனால் வெளியிலேயே வராமல் போன பல விஷயங்களில், குழந்தை தொழிலாளர்கள் அதிகம் உருவாகிறார்கள். அவர்களுக்கு அடுத்த தலைமுறையின் மொத்த கல்வியும்கூட இங்கே கேள்விக்குள்ளாகிறது. இன்னுமொரு தலைமுறை சாதிய வேதனையை சுமக்க வேண்டுமென நினைக்கிறதா அரசு?
இன்று பள்ளிக்கூட ஆசிரியர்கள், அவர்களுக்கான கழகம், கல்வித்துறை என எல்லாமே சாதியெனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது. முதல் நிலையிலேயே புற்றை வேரறுத்தால் மட்டுமே பின்னாளில் நன்றாக வாழ முடியும். அப்படியில்லாமல் அதை வளரவிட்டால், நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு!
தமிழ்நாடு அரசு உண்மையிலேயே முற்போக்கு அரசு என்றால், நாங்குநேரி சம்பவத்தில் பொதுத்தன்மை கொண்ட ஒரு குழு அமைத்து உடனடியாக களத்தில் என்ன நடக்கிறதென அறிய வேண்டும். தொடர்ந்து நீண்ட கால தீர்வுக்கு அரசு என்ன செய்ய வேண்டும் என அந்தக் குழு பரிந்துரைக்க வேண்டும். இந்த விஷயத்தில் ‘நானும் ஒரு குழு அமைக்கிறேன்’ என ஏதோ 10 பேர் கொண்ட குழுவை அரசு அமைக்கக்கூடாது.
நீதிமன்றமும் இதில் தலையிட வேண்டும். அரசின் குழுவில் நீதிபதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், குழந்தை உரிமை செயற்பாட்டாளர்கள், சங்கத்தினர் என எல்லோரும் இருக்க வேண்டும். இந்தக் குழு கொடுக்கும் பரிந்துரையை அரசு கண்டிப்பாக ஏற்கத்தான் வேண்டும். சாதி எனும் 1000 ஆண்டுகால நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து, கசக்கத்தான் செய்யும். ஆனால் அதை எடுத்துக்கொள்ளாவிட்டால், ஆபத்து உங்களுக்குத்தான் (அரசுக்கு) என்பதால், எடுத்துக்கொண்டே ஆகவேண்டும்.
இன்றைய தேதியில் சில சங்கங்களும் சாதிகளாலேயே பின்னப்பட்டுள்ளன. சங்கங்கள் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரம் இது. தங்கள் வாழ்வாதாரத்துக்கு மட்டுமன்றி, மாணவர்களுக்காகவும் சங்கங்கள் குரல் கொடுக்க வேண்டும். அரசு தரப்பும், சங்கங்களை எதிரியாக நினைக்காமல் அவர்களின் குரலுக்கு செவிமடுக்க வேண்டும்”