டெல்லிதான் இன்ஸ்பிரேஷன்... - எப்படி இருக்கிறது அம்மா மினி கிளினிக்? - ஒரு விரைவுப் பார்வை

டெல்லிதான் இன்ஸ்பிரேஷன்... - எப்படி இருக்கிறது அம்மா மினி கிளினிக்? - ஒரு விரைவுப் பார்வை
டெல்லிதான் இன்ஸ்பிரேஷன்... - எப்படி இருக்கிறது அம்மா மினி கிளினிக்? - ஒரு விரைவுப் பார்வை
Published on

நாட்டின் பல திட்டங்களுக்கு தமிழகம் முன்னுதாரணமாக இருந்தாலும், தமிழகத்தின் 'மினி கிளினிக்' திட்டத்திற்கு முன்னுதாரணம் டெல்லியில் செயல்பட்டு வரும் 'முகல்லா கிளினிக்'. கடந்த 2015ஆம் ஆண்டு டெல்லியில் 'முகல்லா கிளினிக்' எனப்படும் அடிப்படை சிகிச்சைகளுக்கான சுகாதார மையங்கள் செயல்படத் தொடங்கின.


அரவிந்த் கெஜிரிவால் முதல்வராக பதவியேற்ற பிறகு தொடங்கப்பட்ட 'முகல்லா கிளினிக்'குகளின் தற்போதைய எண்ணிக்கை 450. சுமார் 1.5 கோடி மக்கள் இந்த சுகாதார மையங்கள் மூலமாக பயன்படுவதாக டெல்லி அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வருடத்திற்கு 400 கோடி ரூபாய் இந்த சுகாதார மையங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. பெரிய மருத்துவமனைகளுக்குச் சென்று நீண்ட நேரம் காத்திருக்காமல் வீட்டிற்கு அருகிலேயே உள்ள முகல்லா கிளினிக்கில் தலைவலி, வயிற்றுவலி, காய்ச்சல் போன்ற சிறிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றன.

முகல்லா கிளினிக்குகளில் மருந்துகள் இலவசமாக வழங்கப்படுவதோடு, இரத்தப் பரிசோதனை போன்ற அடிப்படை மருத்துவ சோதனைகள் இலவசமாக செய்யப்படுகின்றன. தற்போது 450 சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் அதை இரட்டிப்பாக்க டெல்லி அரசு திட்டமிட்டு வருகிறது.

டெல்லியில் முகல்லா கிளினிக் ஆரம்பிக்கப்பட்ட பிறகு மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய வட மாநிலங்களிலும் தெலங்கானா, கர்நாடகா ஆகிய தென்னிந்திய மாநிலங்களிலும் இதேபோன்ற சுகாதார மையங்களை உருவாக்க அந்த மாநில அரசுகள் திட்டமிட்டு வருகின்றன.


இந்நிலையில் தமிழகத்தில் மினி கிளினிக்குகள் செயல்படத் தொடங்கிவிட்டன. தமிழகத்தில் அம்மா உணவகம் தொடங்கப்பட்ட பிறகு அவை மிகவும் பிரபலம் அடைந்தன. அதேபோல் தற்போது தொடங்கப்பட்டுள்ள மினி கிளினிக்குகள் மக்களின் வரவேற்பை பெற வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் முதன் முறையாக மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மினி மருத்துவமனை மற்ற மருத்துவமனைகளில் இருந்து எந்த வகையில் மாறுபட்டதாக இருக்கிறது?

தமிழகத்தில் சுகாதாரத்துறையின் மருத்துவமனை கட்டமைப்பை பொருத்தவரை நகரங்களில் 50 ஆயிரம் நபர்களுக்கு ஒரு ஆரம்ப சுகாதார மையமும், கிராமப் புறங்களில் 30 ஆயிரம் நபர்களுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும் செயல்பட்டு வருகின்றன.


இந்நிலையில் 5,000 முதல் 10,000 நபர்கள் வரை வசிக்கும் பகுதிக்கும் மருத்துவ சேவை அளிக்கும் திட்டம் தமிழகத்தில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு பெயர்தான் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திட்டம். முதற்கட்டமாக சென்னையில் 47 மினி கிளினிக் உட்பட தமிழகத்தில் 630 மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

சென்னையில் ராயபுரம், வியாசர்பாடி, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மினி கிளினிக்குகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கிவைத்தார். இந்த மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் பணி புரிவார்கள். ஆரம்ப கட்ட நோய்கள் என சொல்லப்படும் அனைத்து நோய்களுக்கும் இங்கே சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துகள் தரப்படும்.

தொற்று மற்றும் தொற்று இல்லாத அனைத்து நோய்களுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொற்று நோய்களான காய்ச்சல், இருமல், சளி, மற்றும் வயிற்றுப்போக்கு, தொற்று இல்லாத நோய்களான டீபி மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கும் மருத்துவம் அளிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருந்துகள் கொடுக்கப்படுகிறது.

அதேபோல கர்ப்பமாக இருக்கக் கூடிய பெண்களுக்குத் தேவையான தடுப்பூசி, சத்து மாத்திரைகள் கொடுப்பதோடு குழந்தைகளுக்குத் தேவையான மருத்துவமும் இங்கே பார்க்கப்படுகிறது. சிறிய காயங்களுக்கான முதலுதவி சிகிச்சையும் இங்கு அளிக்கப்படுகிறது.

இந்த மினி கிளினிக்குகள் காலை 8 மணி முதல் 12மணி வரையிலும், மாலை 4மணி முதல் இரவு 8மணி வரையிலும் என நாள்தோறும் எட்டுமணி நேரம் செயல்பட உள்ளது. சாதாரண நோய்களுக்குக் கூட, அதிக தூரம் பயணம் செய்து, பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை மாறும் என்று பொதுமக்கள் வரவேற்பு தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com