நடைபெற உள்ள சத்தீஷ்கர் சட்டசபைத் தேர்தலை மிக முக்கியமான 5 காரணிகள் தீர்மானிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
சத்தீஷ்கர் சட்டசபைத் தேர்தல் இந்த மாதம் 12 மற்றும் 20 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும்தான் நேரடியான மோதல் இருக்கப் போகிறது. பாஜக முதல்வர் ராமன் சிங் சக்தி வாய்ந்த தலைவராக அம்மாநிலத்தில் திகழ்கிறார். அம்மாநிலத்தில் நடைபெற்ற கடந்த முன்று சட்டசபைத் தேர்தலிலும் ராமன் சிங் பல பொருந்திய தலைவராக தன்னை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த முறையும் தனக்கான எதிர்ப்புக்களை அவர் சமாளித்து முன்னேறி வந்தால் அவர் நான்காவது முறையாக முதல்வராக பதவி ஏற்கும் வாய்ப்பை பெறுவார். ஆனால் அந்த வாய்ப்பை இந்த முறை அவர் அவ்வளவு எளிதாக பெற்றுவிட முடியாது என்பதாக கள நிலவரங்கள் கூறுகின்றன.
மொத்தம் 90 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட இந்தத் தேர்தலை தீர்மானிக்கப் போகும் மிக முக்கியமான 5 காரணிகள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
1) ஆதிவாசிகளின் வாக்கு வங்கி
கடந்த 2013 தேர்தலில் காங்கிரசுக்கு சாதமான இருந்த வாக்கு வங்கி இதுதான். ஆசிவாசிகள் அதிகம் உள்ள பாஸ்டர் மாவட்டத்தில் மொத்தம் 12 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் காங்கிரஸ் 8 இடங்களை கைப்பற்றியிருந்தது. இந்தப் பகுதியில் பாஜக வெறும் 4 சீட்டுகளை மட்டுமே வென்றிருந்தது.
இந்தப் பகுதியில் உள்ள ஆதிவாசிகள் மற்றும் பட்டியல் இன மக்களின் வாக்கு வங்கி காங்கிரசுக்கு பெரும் பலமாக இருப்பதால் பாஜகவால் பெரிய வெற்றியை ஈட்ட முடியாமல் போனது. மாநிலத்தில் ஆதிவாசி மற்றும் பழங்குடி இன மக்களின் மொத்த வாக்கு வங்கி 32 சதவீதமாகும். இதில் அதிமான மக்கள் இந்தப் பகுதியை மையமாக வைத்தே வசித்து வருகின்றனர். இவர்கள் எல்லோருமே காலங்கலமாக காங்கிரஸ் ஆதரவாலர்களாக இருப்பது அக்கட்சிக்கு கூடுதல் இடங்களை இதுவரை பெற்று தருவதற்கு காரணமாக அமைந்தது. இந்தளவுக்கு இல்லை என்றாலும் பாஜகவும் தனது பலத்தை இத்தனை வருட ஆட்சியில் கூடிய வரை வளர்த்தே வந்துள்ளது. இந்தக் கட்சியும் மிக தீவிரமான பற்றாளர்களை சம்பாதித்துள்ளது. மேலும் நகர்புறங்களில் உள்ள உயர்வகுப்பினர்களின் 30 முதல் 40 சதவீத வாக்குகளை பாஜக தன் கட்டுப்பாட்டில் வைத்தே வந்துள்ளது.
2) மாயாவதி- அஜித் ஜோகி கூட்டணி
இந்த மாநிலத்தில் முன்னாள் முதல்வராக இருந்தவர் அஜித் ஜோகி. ஆகவே அவரது செல்வாக்கும் மாநிலத்தின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாகவே இருக்கிறது. அவர் மாயாவதியுடன் இணைந்திருப்பதை பல அரசியல் விமர்சகர்கள் பலமாகவே கருதுகிறார்கள். மாயாவதியின் கூட்டணி அதிகமான பட்டியல் இன மக்களின் வாக்கு வங்கியை ஈர்க்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த மாநிலத்தில் பட்டியலின மக்களின் வாக்கு வங்கி மட்டும் 11.6 சதவீதமான உள்ளது. இவ்வளவு பெரிய பலம் வாய்ந்த சக்தியாக கருதப்படும் மாயாவதியின் கூட்டணி நிச்சயம் பாஜகவுக்கும் பாதகமாக அமையும் என்கிறார்கள். இவரால் காங்கிரசுக்கு போக இருக்கும் பட்டியலின மக்களின் வாக்குகள் பிரியும் நிலை உருவாகி உள்ளது.
3) ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை
கடந்த 15 வருடங்களாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார் ராமன் சிங். அம்மாநில முதல்வராக அவருக்கு எந்தளவுக்கு செல்வாக்கு உள்ளதோ அதில் சிறு பகுதி அவருக்கு எதிரான மனநிலை மாநில மக்களிடம் இருக்கவே செய்கிறது என்கிறது கள நிலவரம். பொதுவாக ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையாகவே இதனை பலரும் கணிக்கிறார்கள். இந்த நிலை இந்தத் தேர்தலில் ராமன் சிங்கிற்கு எதிராக வெளிப்படலாம் என்கிறனர். 66 வயதான இவர் இந்த முறையும் பாஜக பலமான வெற்றியை பெறும் எனக் கூறி வருகிறார். இவரது ஆட்சியில் விவசாயத்திற்கும் பொது விநியோகத்திற்கும் அதிகம் முக்கியத்துவம் கொடுத்துள்ளதால் ஆட்சியை எப்படியாவது மக்கள் செல்வாக்குடன் மீட்டு விடலாம் என்று நம்பிக்கை தெரிவித்து வருகிறார்.
மேலும் ஆந்திர பிரசேத எல்லை மற்றும் ஒடிசா எல்லை பகுதிகளில் சாலை மேம்பாடு மற்றும் பாலங்கள் கட்டியது போன்ற வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியதை பாஜக முன் வைத்து மக்களை சந்தித்து வருகிறது. அதுவும் மாவோயிஸ்ட் பகுதியான தாண்டேவடா, சுக்மா பகுதிகளின் வளர்ச்சி குறித்து அதிகம் கவனம் செலுத்தி வருவதை வாக்களர்களின் கவனத்திற்கு இக்கட்சி கொண்டு சென்று பிரச்சாரத்தை முன் வைத்து வருகிறது.
ஆயினும் காங்கிரசும் இவர்களுடன் சமமாக போட்டியிட தயாராகி வருகிறது. காங். தலைவராக ராகுல் பதியேற்ற பிறகு இந்தப் பகுதிகளில் உள்ள விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதை குறித்து அதிகம் வாக்குறுதிகளை வழங்கி வருகிறார். இந்தப் பகுதி வாக்குகளை இந்த இரு கட்சிகளும் சிறிய அளவிலான வேறுபாடுகளுடன் கடந்த தேர்தலின் பகிர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த முறை இளம் வாக்காளர்களை காங் கட்சி அதிகம் ஈர்த்துள்ளதாக சில புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இதனை டைம்ஸ்நவ் உறுதி செய்துள்ளது.
4) நக்சலைட்ஸ் வன்முறை
இந்தத் தேர்தலில் நக்சலைட்டுகளின் வன்முறை மிக பெரிய அளவில் பாதிக்கதக்கதாக இருக்கும் என்கிறார்கள். ராமன் சிங்கிற்கு இந்தத் தேர்தலில் நக்சலைட்டுகளை சமாளிப்பது பெரும் சவாலாக அமைந்துள்ளது. இவருக்கு எதிராக அவர்கள் பல உள்வேலைகளை செய்து வருகிறார்கள் என்பதால் ராமன் தரப்பு கொஞ்சம் பலவீனம் அடையலாம் என்கிறார்கள். அவர்கள் மக்களை தேர்தலை புறக்கணிக்க சொல்லி வற்புறுத்தி வருகிறார்கள். ஆட்சிக்கு எதிராக பல இடங்களில் அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டும் வருகின்றனர். துண்டறிக்கைகள், போஸ்டர்கள் மூலம் ஆட்சி எதிர்ப்பு கோஷத்தை நக்சலைட்டுகள் வலுவாக முன் வைத்தும் வருகிறார்கள். இவர்களை சமாளிக்க 65 ஆயிரம் காவலர்கள் வரை முதற்கட்ட தேர்தலின் போது பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
5) பிரதமர் மோடியின் செல்வாக்கு
பிரதமர் நரேந்திர மோடியின் இறுதிக் கட்ட பிரச்சாரம் பெரிய அளவில் வாக்குகளை கலைக்கும் என கூறப்படுகிறது. மத்தியில் ஆளும் கட்சியாக பாஜக இருப்பதால் ராமன் சிங் ஆட்சிக்கும் அது பலமாக அமையும் என்கிறார்கள். 2017 குஜராத் தேர்தலின் போது மோடியின் பிரச்சாரம் பெரும் சக்தியாக இருந்ததை போல சத்தீஷ்கரிலும் இருக்கும் என மாநிலத்தை ஆளும் பாஜக நம்புவதோடு படித்த வகுப்பினரும் நம்புகிறார்கள். ஒருவேளை ராமன் சிங்கிற்கு இந்தத் தேர்தல் வேறு மாதிரி அமைந்தால் அவர் கட்சியை பலப்படுத்த இதை ஒரு வாய்ப்பாக்கிக் கொள்வார் என்றும் சிலர் கூறுகிறார்கள். என்ன இருந்தாலும் பிரதமர் மோடியின் செல்வாக்கு இந்த மாநிலத்தில் ராமன் சிங்கிற்கு கூடுதல் பலத்தை அளிக்கும் என்றே ஊடகங்கள் கணித்து வருகின்றன.