இனி விதைகளே பேராயுதம்...
மனிதர்கள் பிறக்கும் போதே இறப்பு என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் அந்த இறப்பு என்பது எவ்வாறு நேர்கிறது என்பதை பொறுத்துதான் ஒருவரின் வாழ்வியல் கணிக்கப்படுகிறது. தற்போது உலகில் 10-ல் 7 பேர் பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருவதற்கு அவர்களின் வாழ்க்கை முறை காரணமாக இருந்தாலும், முக்கிய காரணமாக கருதப்படுவது உணவுமுறை தான்.
கொழுப்பை கொழுப்பால் குறைக்கும் பேலியோ என்ற ஆதிமனிதனின் உணவுமுறை உலகம் முழுவதும் வேகமாக பிரபலமடைந்து வரும் நிலையில், நமது மண்சார்ந்த தானியங்கள் மற்றும் நெற்பயிர்கள் மூலமாகவே உடலை ஆரோக்கியமாகவும், உத்வேகமாகவும் வைத்திருக்கலாம் என்று கூறுகின்றனர் ஆஷா (ASHA - Alliance for Sustainable & Holistic Agriculture) அமைப்பைச் சேர்ந்தவர்கள். இந்த அமைப்பைச் சார்பாக இந்தியாவின் உயரிய வேளாண்மை கலாச்சாரத்தை பறைசாற்றும் கண்காட்சி சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. பாரம்பர்ய விதைக் காப்பாளர்கள் ஏராளமானோர் சங்கமித்த இந்த மாபெரும் விதைப் பெருவிழாவில் சுமார் 4ஆயிரத்து 130 வகையான விதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த கண்காட்சியில் 18 மாநிலங்களைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள் மற்றும் 160-க்கும் மேற்பட்ட விதை காப்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.
நம்முடைய நலனுக்காக முன்னோர்கள் பாதுகாத்து வந்த உணவுமுறைகளை சுவைக்காகவும், போலி அந்தஸ்துக்காகவும் நாம் மறந்துபோனது, முகத்தில் அறையும் உண்மையாக உணர்த்துக்கிறது இந்த கண்காட்சி. இவ்வாறான கண்காட்சிக்கு வருகை தருவதை தவிர்ப்பது மக்களின் வழக்கம். ஆனால் விதிவிலக்காக இம்முறை இந்த கண்காட்சிக்கு ஏராளமானோர் வருகை தந்திருந்தனர்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டு, பல நூறு வகையான நெற்பயிர்கள் குறித்தும், பழம் மற்றும் காய்கறி வகைகள் குறித்து அறிந்துக்கொண்டனர். இதில் கலந்துக்கொண்ட ஏராளமான குழந்தைகளுக்கு மேற்கத்திய மற்றும் நம் மண்சாரா உணவு வகைகளின் தீமைகள் குறித்தும், பாரம்பரிய உணவுகளின் நன்மை குறித்தும் ஆஷா அமைப்பினர் எடுத்துரைத்தனர். 2016ம் ஆண்டு ஆஸ்கார் விருது பெற்ற மேட்மேக்ஸ் என்ற படத்தின் இறுதிக்காட்சியில் தாய் பாலும், ஒரு மூதாட்டி பத்திரப்படுத்தி வைத்திருக்கும் கைப்பையும் உலகத்தின் மிக உயர்ந்த பொருளாகவும் திரைக்கதை இயற்றப்பட்டிருக்கும். படம் முழுக்க அந்த பையை பத்திரப்படுத்தி வரும் அந்த மூதாட்டி இறுதியில் அதனை காப்பதற்காக உயிரைக்கூட தியாகம் செய்வார். அந்த பையில் இருப்பது என்ன என்பதை இறுதியில் படத்தின் இயக்குனர் பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்துவார். அந்த கைப்பையில் அணுஆயுதமாக இருக்குமோ, ரசாயன வெடிப்பொருளாக இருக்குமோ என பார்வையாளர்கள் யூகித்து நின்ற நிலையில், அந்த பையில் இருப்பது பல வகையான பாரம்பரிய விதைகள் என்று படத்தை முடித்திருப்பார் இயக்குனர். இந்த கண்காட்சியை பொருத்தவரை இதில் கலந்துக்கொண்ட விதைக்காப்பாளர்கள் அனைவரும் ஒருவகையில் அந்த மூதாட்டியை போன்றவர்கள் தான்.
கண்காட்சி குறித்த எக்ஸ்பிரஸ் வியூ......
1. புழங்கல் அரிசி, பச்சரிசி, இட்லி அரிசி என்ற வகைகள் மட்டுமே தெரிந்த இல்லத்தரசிகள், பல நூறு வகையான நெற்பயிர்கள் கண்டு அதிசயித்தனர்.
2. ஆஷா (ASHA), இந்திய விதை விடுதலை இயக்கம் (Bharat Beej Swaraj Manch), சஹஜா சம்ருத்தா (Sahaja Samruddha) மற்றும் பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு
சார்பாக இக்கண்காட்சி நடத்தப்பட்டன.
3. பத்திரிக்கையாளர் ஞானி, சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ், இயற்கை விஞ்ஞானி இஸ்மாயில், இயற்கை விவசாயிகள் உள்ளிட்டோரும் இதில் கலந்துக்கொண்டனர்.
4. கண்காட்சி நுழைவாயிலில் இடம்பெற்றிருந்த மரக்கிளைகளில் பல மாநிலத்தைச் சேர்ந்த விதைகளும், நெற்பயிர்களும் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தன. அந்த மரம் நம் முன்னோராக சித்தரிக்கப்பட்டிருந்தது.
5. ஸ்டால்களிலிருந்த இயற்கை விவசாயிகளிடம் நெற்பயிர்கள் மற்றும் விதைகள் குறித்தும், அதன் நன்மைகள் மற்றும் அவர்களின் அனுபவம் குறித்தும் மக்கள் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.
6. மண்சார்ந்த மரங்கள், மண்பாண்டங்கள், விதைகள் ஆகியவை இந்த கண்காட்சியில் விற்பனை செய்யப்பட்டன.
7. நாம் மறந்துப்போன, நம்மிடமிருந்து மறைக்கப்பட்ட பாரம்பரிய உணவுகளின் திருவிழாவும் ஒருபகுதியாக இதில் நடைபெற்றது.
8. நாம் சாப்பிடுவது உண்பது காய்கறிகள், பழங்கள், பயிர்கள் அல்ல வண்ண வண்ண நிறத்திலிருக்கும் பலவகையான விஷம் என்பது இக்கண்காட்சி மூலமாக மக்கள் அறிந்து சில நிமிடம் திகைத்தனர்.
9. கண்காட்சியில் கலந்துக்கொண்ட ஏராளமான மக்கள் பாரம்பரிய விதைகள் குறித்தும், மண்சார்ந்த உணவுமுறைகள் மக்களின் சந்தேகங்களை எத்தனை முறை கேட்டாலும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு உறுப்பினர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த சுபா பரத்வாஜ் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் பொறுமையுடன் எடுத்துரைத்தனர்.