இரவில் நான் தூங்குவதே இளையராஜாவால் தான் என சொல்பவர்கள் பலர் உண்டு. இசை ஒருவரை ஆசுவாசப்படுத்தும், இசை ஒருவருக்கு ஆறுதல் அளிக்கும், இசை ஒருவருக்கு அமைதி கொடுக்கும். மனிதர்களை இசை அடக்கி ஆளும் என்பார்கள். அப்படி இசை குறித்து பேசும்போதெல்லாம் இளையராஜாவும் கூடவே வருவார். தலைமுறைகள் தாண்டி காற்றில் இன்றும் வீசிக்கொண்டு தான் இருக்கிறது இளையராஜாவின் இசை.
இசையை உருவாக்கும் இசையமைப்பாளர் தான் இளையராஜா என ஒற்றை வரியில் முடித்துவிடும் கதை அல்ல அவரது கதை. பலரது வாழ்க்கையைக் கூட தன் இசையால் மீட்டுத்தந்து இருக்கிறார் இந்த இளையராஜா. உங்களுக்கு எங்க அப்பா கடை தெரியுமா?
சென்னை கோடம்பாக்கம் பிரதான சாலையில் இருக்கிறது. எங்க அப்பா கடை டீக்கடை. அந்தக்கடைக்கு விசிட் அடிப்பவர்கள் குறைந்தது இரண்டு நிமிடங்களாவது கடையின் சுவரரைப் பார்த்து நிற்பார்கள். கடையின் சுவர் முழுவதும் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படங்கள் இருக்கும். இளையராஜா மட்டுமல்ல, அவரது இசைக்கு பாடல்பாடிய எஸ்பிபி, ஜானகி, மலேசியா வாசுதேவன், சித்ரா என பல பாடகர்களின் புகைப்படங்களும் இடம் பெற்று இருக்கும். வித்தியாசமான கடையின் பெயர், இசை நிரம்பி இருக்கும் கடையின் சுவர் இது குறித்தெல்லாம் பேசினார் எங்க அப்பா கடை உரிமையாளர் ஹரி,
நான் இளையராஜாவின் மிகத்தீவிர ரசிகர். அவர் என்றுமே என்னுடன் இருக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம். அதற்காகத்தான் கடை முழுவதையும் அவர் புகைப்படத்தால் நிரப்பி இருக்கிறேன். கடின உழைப்பால் இசையை உருவாக்கி நம்மை இன்றும் ஆறுதல் படுத்துகிறார். என்னால் முடிந்த செயலால் நான் அவரை பெருமைப்படுத்துகிறேன். இளையராஜா இசை உலகில் கால் பதிக்கும் பொழுது எனக்கு 10 வயது. அப்போதே ஒரு வித புதுமையை அவர் இசையில் உணர்ந்தேன். அன்று முதல் நான் அவருடன் தான் பயணிக்கிறேன். அவர் என்றுமே என்னுடன் இருக்க வேண்டுமென விரும்புகிறேன். கடையில் இருந்தாலும், வீட்டில் இருந்தாலும் நான் இளையராஜாவின் இசையோடு தான் இருக்கிறேன். இளையராஜாவின் இசை ஒவ்வொருவருக்கும் தனித்தனி உணர்வைக் கொடுக்கும்.
எனக்கு ஒரு உணர்வு என்றாலும், அதே பாடல் உங்களுக்கு ஒரு உணர்வைத் தரும். இன்றும் அவரது எந்த பாடலைக் கேட்டாலும் அந்தக் காலத்திற்கே சென்றுவிடுகிறேன். இசை மட்டுமே நம்மை காலங்கடந்து அழைத்துச் செல்லும் சக்தி படைத்தது. குறிப்பாக 8 வருடங்கள் எனக்கு குழந்தை இல்லை. பல வழிகளில் மனச்சங்கடங்களை எதிர்கொண்ட நேரம் அது. அந்தக் காலத்தை நான் கடந்து வந்ததே இளையராஜாவின் இசையால் தான். என்னை மீட்டுக்கொண்டு வந்தது இளையராஜாவின் இசை தான். என் கடைக்கு யார் வந்தாலும், இளையராஜாவின் புகைப்படங்களை பார்த்து ஒரு நிமிடம் பிரமித்து நிற்பார்கள். அதுதான் என் மகிழ்ச்சி எனத் தெரிவித்தார்.
(ஹரி)
8 வருடம் காத்திருந்து தனக்கு பிறந்த மகள் சொல்வதை போலவே ''எங்க அப்பா கடை -ஐஸ்வர்யா'' எனக் கடையின் பெயரையும் வைத்திருக்கிறார் ஹரி. தொடக்கத்தில் குறிப்பிட்டது போல, பலரது வாழ்க்கையைக் கூட தன் இசையால் மீட்டுத்தந்து இருக்கிறார் இந்த இளையராஜா. அதில் ஒருவர் தான் 'எங்க அப்பா கடை' ஹரியும்.
இவ்வளவு தீவிர ரசிகரான நீங்கள் அவரை நேரில் சந்தித்து இருக்கிறீர்களா? என்று ஹரியிடம் கேட்டோம். ''ஒருமுறை பார்த்திருக்கிறேன். சந்திக்க ஆசையெல்லாம் இல்லை. நான் அவர் இசையோடுதான் இருக்கிறேன். அவர் என்றுமே என்னோடு தான் இருக்கிறார். பிறகு ஏன் சந்திக்க வேண்டுமென்கிறார் ஹரி''.