"நடிகர்கள் ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. சமூக நீதிக்குப் பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள், வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள இயலாது" என்று இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்த தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு சுங்கவரி செலுத்திய நிலையில், நுழைவு வரி வசூலிக்க விலக்கு கோரியிருந்த நடிகர் விஜய்யின் மனு மீதான விசாரணையின்போது நீதிபதி கூறிய கருத்துகள் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றன.
பொதுவாக வழக்கு விசாரணைகளின்போது நீதிபதிகள் குறிப்பிடும் கருத்துக்கள் பலவிதமான தாக்கத்தை உருவாக்கும். 'ஒரு சொல் கொல்லும், ஒரு சொல் வெல்லும்' என்பார்கள். அந்த வகையில் நீதிபதிகளின் கருத்துக்கள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது அந்த வழக்கின் முடிவில்தான் தெரியும். பல வழக்குகளில் நீதிபதி கருத்து கூறிய பின்னர், அதனைக் கருத்தில் கொண்டு, நல்ல முடிவு எட்டப்படுவதும் உண்டு. சில வழக்குகளில் அந்த கருத்துக்கள் விவாதத்துக்கு உள்ளாகி, திசை மாறிச் செல்வதும் உண்டு.
அந்த வகையில் கடந்த மாதங்களில், வழக்கு விசாரணைகளின்போது உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டு, பெருமளவில் கவனம் ஈர்த்த கருத்துக்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
01. வாசுதேவநல்லூர் தொகுதியை, பொதுத் தொகுதியாக அறிவிக்கக் கோரிய வழக்கு விசாரணையின்போது, "பிரியாணி, குவாட்டர் பாட்டிலுக்காகவும், சில ஆயிரங்களுக்காகவும் தங்களது வாக்குகளை விற்பனை செய்துவிட்டு, நல்ல அரசியல் தலைவர்களை மக்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்?" என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
02. பல்துறை உயர்கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துவக்க முகாம்கள் மற்றும் இணையவழியிலான ஒருங்கிணைப்புகளை மேற்கொள்ளக் கோரிய வழக்கு விசாரணையின்போது, "தமிழக அரசின் வேலை வாய்ப்புகளுக்கு, தமிழகத்தைச் சேர்ந்தவர்களே விண்ணப்பிப்பது இல்லை. பள்ளியிலேயே மாணவர்கள் கஞ்சாவிற்கும் மதுவிற்கும் அடிமையாகும் சூழல் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது" என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
03. அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் தான் அரசு ஊழியர் என்பதை மறைத்து இலவச பட்டா பெற்ற வழக்கில், "அரசு ஊழியர்களுக்கு ஏன் சங்கங்கள்? பெரும்பாலான சங்கங்கள் அதிகார அடிப்படையில், சாதி, மதங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. அந்த சங்கங்களை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது?" என்ற கருத்து பதிவு செய்யப்பட்டது.
04. சட்ட விரோத மணல் திருட்டு தொடர்பாக வழக்கு தொடர்ந்தவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில், "பணம் இருப்பவர்களுக்குத்தான் காவல்துறை என்றால், ஏழை மக்கள் எங்கே செல்வார்கள்?" என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
05. தமிழகத்தில் போதுமான நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்கக் கோரிய வழக்கு விசாரணையின்போது, "ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால்தான், லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் சரி செய்யப்படும். அனைத்து அதிகாரிகளையும் குறிப்பிட்டு நீதிமன்றம் இந்த கருத்தை பதிவு செய்யவில்லை. லஞ்சம்பெற்று ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கே இது பொருந்தும்" என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது.
இவை பெரும் விவாதங்களுக்கு வித்திட்ட கருத்துகள் என்றாலும், பல வழக்குகளில் நீதிபதிகளின் கருத்துகள்தான் பெரும் திருப்பத்தையோ அல்லது சிறு மாற்றத்தையோ ஏற்படுத்தின என்பதையும் மறுப்பதற்கில்லை. உதாரணங்கள்:
01. அமராவதி ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கக் கோரிய வழக்கு விசாரணையின்போது "நீர் ஆதாரங்களை பாதுகாப்பது அவசியமானது. ஏற்கெனவே நொய்யல் ஆறு காணாமல் போய்விட்டது. நீர் ஆதாரங்களை அழிப்பதால், நாமே நம் தற்கொலைக்கு வழிவகுக்கிறோம்" என்ற கருத்து.
02. தொலைநிலை கல்வி வாயிலாக பயின்றவர்களுக்கு குரூப்-1 தேர்வில் முன்னுரிமை வழங்கக் கூடாது என தொடரப்பட்ட வழக்கில், "ஆங்கிலம் படிப்பவர்களுக்கு உலகம் முழுவதும் வாய்ப்புள்ளது, தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு தமிழ்நாட்டில் வாய்ப்பு வழங்கவேண்டும்" என்ற கருத்து.
03. தமிழக நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோருவது தொடர்பான வழக்கு விசாரணைகளின்போது, "இப்போதாவது நீர்நிலைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையெனில் வருங்கால தலைமுறையினர் குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும் அல்லாடும் நிலை உருவாகும்" என்ற கருத்து.
04. மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் ஒருவர் அதற்கான இடஒதுக்கீட்டு அடிப்படையில் தனக்கு வேலைவாய்ப்பு வழங்க கோரிய வழக்கு விசாரணையின்போது, "அனைத்து வகையான விளையாட்டு வீரர்களுக்கும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்" என்ற கருத்து.
05. தேசிய நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க கோரிய வழக்கில், ’’உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி, சாலை விரிவாக்கத்திற்காக ஒரு மரம் வெட்டினால், 10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். அவ்வாறு பராமரிக்கவில்லை எனில் சாலை விரிவாக்கத்திற்காக, மரங்களை வெட்ட வேண்டாம்’’ என்ற கருத்து.
06. குளம் ஒன்றை ஏலம் எடுப்பது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, "தமிழக அரசு இனிவரும் காலங்களில் கண்மாய், குளங்களில் மீன் வளர்க்க ஏலம் விடும்போது, மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் குளத்தில் தண்ணீர் அருந்த அனுமதி வழங்கும் வகையில் விதிகளில் மாற்றம் கொணர வேண்டும்" என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு, பெரும் வரவேற்பையும் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
"விளைவுகளை ஏற்படுத்தாத வார்த்தைகள் வீணானவை" என்றார் சேகுவேரா. ஆனால், ஏற்படும் விளைவு அனைவருக்கும் பொதுவானதாயும், நன்மை பயப்பதாயும் இருப்பது மிகவும் சிறப்பானது.
- சகாய பிரதீபா