“கையேந்த அல்ல.. கைகொடுக்கவே இலவசங்கள் - புரிந்து கொள்ளுமா நீதிமன்றம்”

“கையேந்த அல்ல.. கைகொடுக்கவே இலவசங்கள் - புரிந்து கொள்ளுமா நீதிமன்றம்”
“கையேந்த அல்ல.. கைகொடுக்கவே இலவசங்கள் - புரிந்து கொள்ளுமா நீதிமன்றம்”
Published on

தமிழகத்தை ஆளும் அரசுகள் தேர்தல் லாபத்திற்காக இலவசங்களை வாரி வழங்கி, மக்களை கையேந்தும் நிலைக்கு தள்ளிவிட்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச ரேஷன் அரிசி இனிவரும் காலங்களில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள ஏழை மக்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டு, அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமர்நாத் என்பவரை சிறையிலடைக்க வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆகஸ்ட் 31 உத்தரவு பிறப்பித்தார். இதனை ரத்து செய்யக்கோரி அமர்நாத் மனைவி சவ்ஜன்யா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், பொங்கியப்பன் அமர்வு ஏழைகளுக்கு வழங்கப்படும் ரேசன் அரிசியை கடத்தி விற்பனை செய்வது மன்னிக்க முடியாத குற்றச்செயல் என கருத்து தெரிவித்தது.

மேலும், எத்தனை குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படுகிறது? ஒரு ஆண்டுக்கு கொடுக்கப்படும் இலவச அரிசியின் மதிப்பு எவ்வளவு? பொதுமக்களுக்கு அனுப்பப்படும் இலவச அரிசியில் முறைகேடு செய்ததாக எத்தனை அரசு ஊழியர்கள்/அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது? ரேசன் அரிசி முறையாக விநியோகிக்கபடுகிறதா அல்லது கையாடல் செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க ஏதேனும் நடைமுறைகள் உள்ளதா? போன்ற கேள்விகளை எழுப்பி தமிழக அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். 

தேர்தல் லாபத்திற்காக இலவசங்களை வாரி வழங்கி மக்களை கையேந்தும் நிலைக்கு தமிழகத்தை ஆளும் அரசுகள் தள்ளிவிட்டுள்ளதாக குற்றம்சாட்டினர். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச ரேஷன் அரிசி இனி வரும் காலங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள ஏழை மக்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் தொகை குறித்தும், அவர்களுக்கு மட்டுமே இலவச அரிசி வழங்கப்பட்டால் ஆகும் செலவு குறித்தும் நவம்பர் 30ல் அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். 

நீதிமன்றத்தின் இந்த கருத்தை நடைமுறைப்படுத்த முடியுமா? அப்படி செய்தால் விளைவு என்ன ? உண்மை நிலவரம் என்ன ? என்பது போன்ற பல கேள்விகள் குறித்து புதிய தலைமுறை இணையதளம் சார்பில் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் கருத்து தொடர்பாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன் பேசிய போது, “அரசாங்கம் என ஒன்று உருவானது முதலே இலவசங்கள் இருந்து வருகின்றன. இலவசங்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும், மானியங்கள் என்பது ஏழைகளுக்கு மிக முக்கியம். அரசு சார்பில் வழங்கப்படும் உதவிகள் இலவசங்கள் அல்லாமல் மானியங்கள் என பார்க்க வேண்டும். ஒரு காலகட்டத்தில் 90% ஏழைகள் மற்றும் 10% மட்டுமே வசதி படைத்தவர்கள் நாட்டில் இருந்தனர். அப்போது ஏழைகளுக்கு வழங்கப்பட்ட இலவசங்கள் அவர்களுக்கு வாழ்வளித்தது. காமராஜர் கூட இலவசக் கல்வித்திட்டத்தை கொண்டுவந்தார். அதனால் தான் நிறைய மாணவர்கள் கல்வி கற்றனர். 

அதேபோன்று மருத்துவம் இலவசமாக கொண்டுவரப்பட்டது. அதுவே ஏழை மக்களை இதுவரை காத்து வருகிறது. அரசுப்பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் இலவச படிப்பு மற்றும் மருத்துவம் கிடைக்கிறது. வசதிப்படைத்தவர்கள் அதை வேண்டாம் என தனியாருக்கு செல்கின்றனர். ஒரு ரூபாய் அரிசி என்ற திட்டத்தை கொண்டு வந்தது திமுக தான். அதுவே இலவச அரிசிக்கு முன்னோடியாக அமைந்தது. கிராமப்புற ஏழைகள் வசதியின்றி அடுத்தவர்கள் வீடுகளுக்கு சென்று டிவி பார்த்ததால் இலவச டிவி கொடுத்தோம். மாணவர்களுக்கு கொடுக்கப்படும் இலவசங்கள் அவர்களை ஊக்கப்படுத்துவதற்குதான். கையேந்த வைப்பதற்கு அல்ல. வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்பது தவறானது. ஏனென்றால் யார் வறுமைக்கோட்டு கீழ் இருப்பவர்கள் என்பதை பிரிக்க முடியாது. அப்படி பிரிக்க முயன்றால், அதில் பாகுபாடு ஏற்பட்டு முறையாக பிரிக்க முடியாத நிலை உண்டாகும். இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுவார்கள். அப்படி பிரிக்க வேண்டுமென்றால், யார் வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்கள் என்பதை நீதிமன்றமே கூறவேண்டும்” என தெரிவித்தார். 

அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறும்போது, “இலவச அரிசி வழங்கப்படுவதே வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தான். தமிழகத்தில் ரேசன் அட்டைகள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அரிசி வாங்கும் குடும்பம், சர்க்கரை வாங்கும் குடும்பம் மற்றும் ரேஷன் அட்டையை அடையாளமாக பயன்படுத்தும் குடும்பம் என வகுக்கப்பட்டுள்ளது. இதில் அரிசி வாங்கும் குடும்பத்தினர் வருமானம் மற்றும் வசதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அதுதொடர்பாக ஆய்வு செய்த பின்னரே அவர்கள் அரிசி பெரும் குடும்ப அட்டையை பெற முடியும். இதனால் வசதி படைத்தவர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படுவதில்லை. இலவசங்கள் மக்களை கையேந்த வைப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்து நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளுடையது. இலவசக் கல்வி கொடுத்து மாணவர்களை ஊக்குவிக்கிறோம். அது கையேந்த வைப்பதல்ல. இருப்பினும் இலவசங்கள் குறித்து கருத்தினை தெரிவித்திருப்பது நீதிமன்றம் என்பதால் அதனை விமர்சிக்கக்கூடாது என்பது எனது கருத்து” என்று கூறினார்.

வழக்கறிஞர் தமிழ்மணி கூறும்போது, “சமூகப் பிரச்னைகளை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதே முதலில் தவறு. சமூக ஆர்வலர்கள் சிலர் இதுபோன்ற சமூக பிரச்னைகளை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்கின்றனர். அது தவறான முறையில் சிக்கிக்கொள்கிறது. யாருக்கு இலவசம் கொடுக்க வேண்டும் என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக கஜா புயலால் உயிரிழந்த கால்நடைகளுக்கு குறிப்பிட்ட தொகையை நிவாரணமாக கொடுப்பதாக அரசு அறிவித்துள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றால், எல்லா மாடுகளுக்கும் எப்படி ஒரே விலை கொடுப்பீர்கள், யார் இந்த தொகை முடிவு செய்தது ? போன்ற பல கேள்விகள் எழும்பும். இதனால் மானியங்கள் சென்று செல்வதில் சிக்கல் ஏற்படும். தாமதம் ஆகும். எனவே யாருக்கு எதை வழங்க வேண்டும் என்பது அரசுக்குத் தான் தெரியும். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்குத் தான் ரேஷன் அரிசி வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் கருத்து தவறானது. தமிழகத்தில் பல பொருட்களில் விலை இடத்திற்கு ஏற்றாற் போல் மாறுபடும். இதனால் சமமாக வறுமைக்கோட்டு கீழ் உள்ளவர்கள் யார் என்பதை பிரிக்க முடியாது. எனவே யாருக்கு எதை வழங்க வேண்டும் என்பதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே முடிவு செய்யட்டும்” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com