கண்ணீரில் தொடங்கி ஆஸ்கரில் முடிந்த நகைச்சுவை சரித்திரம்! சார்லி சாப்ளின் வாழ்வும் வரலாறும்

கண்ணீரில் தொடங்கி ஆஸ்கரில் முடிந்த நகைச்சுவை சரித்திரம்! சார்லி சாப்ளின் வாழ்வும் வரலாறும்
கண்ணீரில் தொடங்கி ஆஸ்கரில் முடிந்த நகைச்சுவை சரித்திரம்! சார்லி சாப்ளின் வாழ்வும் வரலாறும்
Published on

‘வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்’ என்பது பழமொழி. சிரிப்பு என்பது நமது மகிழ்சியான நேரங்களில் வெளிப்படும் ஒரு உணர்வு. பிறரை சிரிக்க வைப்பதென்பது அனைவராலும் முடியாத ஒன்று. அது ஒரு வித கலை. ஒரு திரைப்படத்தில் கதை இல்லாமல் இருந்தாலும் அதில் காமெடி இருந்தால் அப்படம் வெற்றி பெற்றுவிடும்.

இப்படி படம் மட்டும் அல்ல, வாழ்க்கையிலும் நமக்கு நகைச்சுவை மிக அவசியம். அப்படி தங்களின் பேச்சால், செய்கையால், உடல்மொழியால் எழுத்தால், நடிப்பால் என்று விதவிதமாக நம்மை இன்னமும் சிரிக்க வைத்துக்கொண்டிருப்பவர்கள் இவ்வுலகத்தில் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் நம்முடன் வாழ்ந்து மறைந்த ஒருவரின் வாழ்க்கை வரலாறைதான் நாம் காணப்போகிறோம்.

ஆம் அவர் வேறு யாரும் இல்லை. உலகின் நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் பற்றிதான். இவரைப்பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் சொல்லிக்கொண்டே போகலாம். ஒரே வரியில் சொல்லவேண்டுமென்றால், சாப்ளின் தன் நகைச்சுவை உணர்வால் உலகத்தை கட்டிப்போட்டவர். ஆனால் அவரின் சிறுவயது வாழ்க்கை அவ்வளவு இனிமையானதாக இல்லை.

அவரின் பிறப்பு:

சார்லி சாப்ளின் தாய் வழி தாத்தா “சார்லஸ் ஹில்” என்பவர் லண்டனில் செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்தார். அவருக்கு இரு பெண்கள். அதில் ஹன்னா (லில்லி) என்ற பெண் பாடகி, தியேட்டர்கள் மேடை நாடகங்களில் பாடி வந்தார். அவருக்கு நடிப்பின் மீதும் நல்ல ஈடுபாடு இருந்தது. நடிப்பையும் பாட்டையும் ஒரு சேர வெளிப்படுத்தி தனது திறமையால் புகழ் பெறத் துவங்கினாள். அச்சமயம் அவர் ஒருவர் மேல் காதல்கொண்டு திருமணமும் செய்துக்கொண்டார். அவர்களின் காதலின் அடையாளமாக சிட்னி என்ற ஆண் குழந்தை பிறந்தது. சிட்னி பிறந்து சில நாட்களில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தனர்.

ஹன்னா குழந்தையுடன் மறுபடி தன் தாய்வீடான லண்டன் திரும்பினார். பழைய நாட்களை மறக்க மறுபடியும் பாட அரம்பித்தார். அச்சமயம் அவருடன் மேடை நாடகங்களில் பாடி வந்த சார்லஸ் என்பவர் அவர் மேல் விருப்பம் கொண்டு மறுமணம் செய்துக்கொண்டு வாழ்க்கையை நடத்தினார். ஆனால் இம்முறையும் அவள் எதிர்பார்த்தப்படி மகிழ்ச்சி அவளுக்கு கிடைக்கவில்லை. 1889ஆம் ஆண்டு, ஏப்ரல் 16-ம் நாள் சார்லி சாப்ளின் பிறந்த சில நாட்களிலேயே, சார்லஸ் அவரை விட்டு பிரிந்து விட்டார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஹன்னா தான் நடிப்பதையும் பாடுவதையும் நிறுத்திக்கொண்டார்.

கொஞ்சம் கொஞ்சமாக அவரது குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டது. சாப்ளின் தனது சிறு வயதில் வீடுகளில் கிடைத்த வேலைகளைச் செய்துக்கொண்டும், மிக வறுமையில் காலத்தை கழித்தும் வந்தார். இச் சமயத்தில் ஹன்னா முற்றிலும் மனநோயாளியாக மாறவே, அவர் மனநோயாளி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

தாய், தந்தை இருவரும் இல்லாமல் வளார்ந்த சாப்ளின் மேடை

நாடகத்தில் சிறு சிறு வேடங்களில் தோன்றினார். சாப்ளினுக்கு பத்து வயதாக இருந்த போது சிட்னி லண்டன் ஹிப்போட்ரோமில் சின்ட்ரெல்லா பாண்டோமைமில் ஒரு பூனையாக, நகைச்சுவையான பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பினை வழங்கியது. அதன் பின் 1903ம் ஆண்டில் "ஜிம், எ ரொமான்ஸ் ஆஃப் காக்கைய்ன்" (Jim, A Romance of Cockayne) நாடகத்தில் நடித்தார்.

ஏழ்மையில் இவரது ஆடைகளையும், தோற்றப் பொலிவையும் கண்ட மக்கள் இவரைக் கண்டவுடன் சிரிக்க ஆரம்பித்தனர். அதை அவர் தனது பாஸிட்டிவாக மாற்றிக்கொண்டு, மக்களை தன்பால் ஈர்க்கத்தொடங்கினார். இதற்குப் பிறகு இதையே தனது நிரந்தர வேலையாக மாற்றிக்கொண்டார்.

வளர்ச்சி பயணம்

அதன் பிறகு, செர்லாக் ஹோம்ஸ் நாடகத்தில் செய்தித்தாள் விற்கும் சிறுவன் பில்லி வேடம். இதனைத் தொடர்ந்து கேசீஸ் கோர்ட் சர்க்கஸ் (Casey's Court Circus) நடத்திய பல்சுவை நிகழ்ச்சியிலும், ஃப்ரெட் கர்னோவின் Fun Factory slapstick நகைச்சுவை நிறுவனத்தில் கோமாளி வேடத்தில் நடித்தார்.
இவரின் அபாரத்திறமையைப்பார்த்த தயாரிப்பாளர் மாக் செனட் தனது நிறுவனமான கீஸ்டோன் திரைப்பட நிறுவனத்தில் (Keystone Film Company) அவரை சேர்த்துக் கொண்டார். அதிலிருந்து தான் அவரின் பயணம் ஆரம்பித்தது.

ஆரம்பத்தில் வீதிகளில் கலை நிகழ்ச்சிகளில் விடுதிகளில் என்று தன் தாயைப்போல நடித்த சாப்ளினுக்கு திரைப்பட நிறுவனம் அவருக்கு புது புது சேலஞ்சை அளித்தது. ஆரம்பத்தில் சாப்ளினுக்கு கீஸ்டோன் நடிப்பு முறைக்கு தன்னை மாற்றிக் கொள்வது சற்று கடினமாக இருந்தாலும், அவருக்கு நடிப்பின் மேல் இருந்த ஆர்வத்தால் விரைவில் அதில் தன்னைப் பழக்கிக் கொண்டு கீஸ்டோனின் சிறந்த கலைஞராக வளர்ந்தார்.

இவரது அதீத வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது அவர் தனக்கென்று உருவாக்கிக் கொண்ட நாடோடி வேடமும், அவரின் எளிமையான தோற்றமும். இவரின் நடிப்பார்வத்தை பார்த்த அந் நிறுவனம் இவருக்கு இயக்கவும் புது படைப்புகள் படைக்கவும் அனுமதி வழங்கியது. அதனால், அவர் மிக விரைவாக உச்சத்தை நோக்கி செல்லத்துவங்கினார்.

அதுவரை ஒலி வடிவம் பெறாமல் திரைப்படம் வந்துக்கொண்டிருந்த காலம் அது. சாப்ளின் தன் உடல் அசைவாலும், ஆடை வடிவமைப்பாலும் மக்களிடையே தனி மதிப்பை பெற்றிருந்தார். 1919-ஆம் ஆண்டில் தனியாக ஒரு ஸ்டுடியோவைத்துவக்க எண்ணி, அதற்கான முயற்சியில் இறங்கினார். அதன் பலனாக, மேரி பிக்போர்ட், டக்லஸ் ஃபேர்பேங்க்ஸ், கிரிபிர்ட்டுடன் இணைந்து யுனைட்டடு ஆர்டிஸ்ட்ஸ் என்ற ஸ்டுடியோவைத் துவங்கினார்.

1927-ஆம் ஆண்டில் ஒலி,ஒளி வடிவில் திரைப்படங்கள் வெளிவரத் துவங்கி இருந்தது. இருப்பினும் அவர் அச்சமயங்களில் தனது நடனத்திறமையையும், இசை அமைப்பதிலும் கவனம் செலுத்தி வந்தார். 1952-ஆம் ஆண்டில் வெளிவந்த லைம்லைட் திரைப்படத்தில் நடன அமைப்பையும் 1928-ஆம் ஆண்டுத் திரைப்படம் "தி சர்க்கஸ்" படத்தின் தலைப்பு இசை அமைப்பையும் இவரே செய்தார். இவர் இசையமைத்த பாடல்களில் பெரும் புகழ் பெற்றது ஸ்மைல் என்ற திரைப்படம்.

அரசியல் தாக்கம்:

1940-ஆம் ஆண்டில் இவரது நடிப்பில் வெளியான "தி கிரேட் டிக்டேடர்" (The Great Dictator). இது அடால்ஃப் ஹிட்லரையும் அவரது பாசிச கொள்கையையும் எதிர்த்து குரல் கொடுத்த படம். இதில் இவர் ஹிட்லராக, முடிவெட்டும் யூதராக என்று இரு வேடம் ஏற்று நடித்திருப்பார்.
சினிமா மீது மோகம் கொண்ட ஹிட்லர் இப்படத்தை இரு முறை பார்த்தார். இவரது கடைசி திரைப்படங்கள் "தி கிங் இன் நியூ யார்க்" (1957), "தி சாப்லின் ரெவ்யூ" (1959) மற்றும் சோஃபியா லாரென், மார்லன் ப்ராண்டோ நடித்த "அ கௌண்டஸ் ஃப்ரம் ஹாங்காங்".

திருமணம்:

இவருக்கும் தனது தாயைப்போல திருமண வாழ்க்கை திருப்திகரமாக அமையவில்லை. திரையுலகத்தில் பல வெற்றிகளையும் புகழையும் பெற்றிருந்தாலும், தனது தனிப்பட்ட வாழ்க்கை அவருக்கு நிம்மதியை தரவில்லை.

அக்டோபர் 23 1918-இல் இருபத்தியெட்டு வயது சாப்ளின் பதினாறு வயது நிரம்பிய மில்ட்ரெட் ஹாரிசை மணந்தார். இவர்களது திருமண வாழ்க்கை 1920-ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. அதன் பிறகு தனது 35ம் வயதில் "தி கோல்ட் ரஷ்" திரைப்படத்திற்கு தயார் செய்து கொண்டிருந்த பொழுது, லீடா க்ரே என்ற பெண்ணை காதல் திருமணம் புரிந்துக்கொண்டார்.

இவர்களுக்கு இரு மகன்கள் பிறந்தனர். சில ஆண்டுகளில் இவர்களது மண வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததது. இந்த கசப்பான விவாகரத்தினாலும் வருமான வரி சிக்கல்களாலும் சாப்ளின் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தார். இவரைப்பற்றிய சர்சைகளும் வதந்திகளும் எழுந்தது. நீதிமன்றம் இவரைப்பற்றிய பல அந்தரங்க செய்திகளை வெளியிட்டதன் விளைவாக இவரை எதிர்த்து பிரச்சாரங்கள் நடைபெற்றன.

இதைப்பற்றி எதையும் கவலைப்படாத சாப்ளினின் தனது நாற்பத்தி ஏழாவது வயதில் பாலட் கொடார்டை ஜூன் 1936-இல் ரகசியமாக மணமுடித்தார். சில வருடங்களில் இத்திருமணமும் விவாகரத்தில் முறிந்தது. இக்காலகட்டத்தில் நடிகை ஜோன் பேரியுடன் இவருக்கு ரகசிய உறவு ஏற்பட்டது. நடிகை பேரி தனது குழந்தைக்கு சாப்ளினே தந்தை என்று வழக்கு தொடர்ந்தார்.

இரத்த பரிசோதனைகள் சாப்ளினை குற்றமற்றவர் என்று காட்டினாலும், அக்காலத்தில் இரத்த பரிசோதனைகள் நீதி மன்றங்களில் சாட்சிகளாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. குழந்தை 21 வயது வரும் வரை வாரம் $75 வழங்குமாறு உத்தரவிடப்பட்டார். சில நாட்கள் கழித்து, தனது 54 வது வயதில், ஐகன் ஓ'நீலின் மகள், ஓனா ஓ'நீலை மணந்தார். இத்திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் பல வருடங்கள் நீடித்தது. இவர்களுக்கு எட்டு குழந்தைகள் பிறந்தனர்.

சாப்ளினின் கடைசி அத்யாயம்

சாப்ளின், தனது வாழ்நாளில் பல வித சர்ச்சைகளில் ஈடுபட்டிருந்தாலும், இறந்தும் இவரின் சர்ச்சை அடங்கவில்லை. 1977 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது எண்பத்தி எட்டாவது வயதில் வேவேவில் இறந்தார். இவரது உடலை வாட் நகரில் உள்ள கார்சியர்-சுர்-வெவே கல்லறையில் அடக்கம் செய்தார்கள். ஆனால், மார்ச்சு 1, 1978-ஆம் ஆண்டு இவரது உறவினர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக இவரது உடல் கல்லறையிலிருந்து திருடப்பட்டது. விரைவில் திருடர்களும் பிடிபட்டனர். பின்நாளில் சாப்ளினின் நினைவாக வேவேவில் அவரது சிலை ஒன்றை அமைத்தனர்.

வாங்கிய விருதுகளும் மரியாதைகளும்

சாப்ளின் இருமுறை சிறப்பு ஆஸ்கார் விருது பெற்றவர். தி ஜாஸ் சிங்கர் படத்துக்காக சிறப்பு விருதை பெற்றார். இருந்தாலும் சாப்ளினின் புகழினால் சாப்ளினைப் போல் தோற்றம் அளிப்போருக்கான போட்டிகள் பலவற்றை நடத்திகொண்டிருந்த சமயம், ஒரு போட்டி ஒன்றில் சாப்ளின், சாப்ளினாக இரகசியமாகப் பங்கு பெற்றார். இதில் இவரால் மூன்றாம் பரிசையே வெல்ல முடிந்தது.

அதைத்தவிர, சாப்ளின் Monsieur Verdoux திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான விருதையும், பெற்றார். 1972-ஆம் ஆண்டில் சிறந்த இசையமைப்புக்கான விருதை கிளயர் புளூம் நடித்திருந்த லைம்லைட் (1952) திரைப்படத்திற்காக பெற்றார். மார்ச் 4, 1975 அன்று பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபத் அரசி சாப்ளினுக்கு "சர்" பட்டம் அளித்தார்.

சாப்ளின் "ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேமில்" இடம் பெற்றார். 1985-ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு, இவரது உருவத்தை அஞ்சல் தலை ஒன்றில் வெளியிட்டு பெருமை சேர்த்தது. 1994-ஆம் ஆண்டு அமெரிக்க அஞ்சல் தலை ஒன்றிலும் இடம் பெற்றார். 1992-ஆம் ஆண்டு இவரது வாழ்க்கை "சாப்ளின்" என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இவரின் நினைவாக சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இன்றுவரை சார்லி சாப்ளின் நடையும், உடையையும் பாவனையயும் பயன்படுத்தி பலர் நடித்து வந்தாலும் இன்றுவரை எவர் ஒருவராலும் அவர் இடத்தை நிரப்பமுடிவில்லை என்பது நிச்சயமான உண்மை.

- ஜெயஸ்ரீ அனந்த்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com