“ஆண் -பெண் இடையே நடப்பதுதான் திருமணம்” - தன்பாலின திருமண வழக்கில் மத்தியஅரசு பதில்

“ஆண் -பெண் இடையே நடப்பதுதான் திருமணம்” - தன்பாலின திருமண வழக்கில் மத்தியஅரசு பதில்
“ஆண் -பெண் இடையே நடப்பதுதான் திருமணம்” - தன்பாலின திருமண வழக்கில் மத்தியஅரசு பதில்
Published on

சட்டத்தின் அடிப்படையில் உயிரியல் ஆணுக்கும் உயிரியல் பெண்ணுக்கும் இடையே மட்டுமே திருமணம் செய்ய முடியும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்து திருமணச் சட்டம், சிறப்புத் திருமணச் சட்டம் (எஸ்எம்ஏ), வெளிநாட்டுத் திருமணச் சட்டம் (எஃப்எம்ஏ) ஆகியவற்றின் கீழ் ஓரினச்சேர்க்கைத் திருமணங்களை சட்டப்பூர்வமாக்கக் கோரியும், தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் உரிமையை அறிவிக்கக் கோரியும் ஐந்து மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்திய அரசியலமைப்பின் 14, 15, 19 மற்றும் 21 வது பிரிவுகளின் கீழ், ஒரு நபரின் பாலினம் அல்லது பாலியல் நோக்குநிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பது மக்களின் அடிப்படை உரிமை என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் மத்திய அரசின் தரப்பில் பதிலளித்த இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "திருமணம் மற்றும் திருமணத்தை பதிவு செய்வது பற்றிய இந்த மனுக்கள் எழுப்பும் கேள்வியின் சமர்ப்பிப்பை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா, இது ஒரு உயிரியல் ஆணுக்கும் உயிரியல் பெண்ணுக்கும் இடையில் இருக்க வேண்டுமா என்பதைப் பொறுத்துதான் எல்லாம் இருக்கும், முழு வழக்கும் அதைப் பொறுத்தது. நவ்தேஜ் சிங் ஜோஹர் வழக்கு இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் சட்டம் உள்ளது, து ஒரு உயிரியல் ஆணுக்கும் உயிரியல் பெண்ணுக்கும் இடையேயான திருமணத்தையே அங்கீகரிக்கிறது" என்று தெரிவித்தார்.

பிப்ரவரி மாதத்தில் இது தொடர்பான மனுக்களை தள்ளுபடி செய்யக் கோரி, மத்திய அரசு டெல்லி நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “இந்தியாவில் திருமணம் என்பது பழக்கவழக்கங்கள், சடங்குகள், கலாச்சார நெறிமுறைகள் மற்றும் சமூக விழுமியங்கள் மற்றும் ஒன்றாக வாழ்வது அடிப்படையிலானது என்று வாதிட்டது. மேலும், கணவன் - மனைவி மற்றும் குழந்தைகள் அடங்கிய இந்திய குடும்ப அமைப்புடன், ஒரே பாலின நபர்களின் பாலியல் உறவை ஒப்பிட முடியாது. உயிரியல் ஆண் மற்றும் பெண் எனும் எதிர் பாலினத்தவருக்கு இடையிலான திருமணத்தை அங்கீகரிப்பதில் மட்டுமே தங்களுக்கு சட்டபூர்வமான விருப்பம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.

ஐபிசி பிரிவு 377 இன் படி ஒரு பாலின உறவு என்பது குற்றமற்றதாக மாற்றப்பட்ட போதிலும், நாட்டின் சட்டங்களின்படி 2018 ஆம் ஆண்டு வெளியான அந்த தீர்ப்பின் மூலமாக ஒரே பாலின திருமணத்திற்கான அடிப்படை உரிமையை மனுதாரர்கள் கோர முடியாது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி உயர்நீதிமன்றம், இந்த வழக்கை நவம்பர் 30ஆம் தேதி இறுதி விசாரணைக்கு ஒத்திவைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com