ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு 10 கோடி? ஆனால் செம்மொழி நிறுவனத்திற்கு இயக்குநரே இல்லை?

ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு 10 கோடி? ஆனால் செம்மொழி நிறுவனத்திற்கு இயக்குநரே இல்லை?
ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு 10 கோடி? ஆனால் செம்மொழி நிறுவனத்திற்கு இயக்குநரே இல்லை?
Published on

சில மாதங்கள் முன்பு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட வேண்டும் என்று ஒரு அறிவிப்பு வெளியானது. அந்த இருக்கை அமைக்கப்பட்டால் தமிழ் இனி உலக அரங்கில் உயரும் என்பதால் பலரும் கிள்ளிக் கொடுக்கவில்லை. அள்ளிக் கொடுத்தனர். இறுதியாக தமிழக அரசின் கவனத்திற்கு இந்தச் செய்தி போக ரூபாய் 10 கோடி அளித்தது அரசு. உலக அளவில் தமிழ் இருக்கை என்பது தேவைதான். ஆனால் உள்ளூர் அளவில் இருக்கு தமிழ் ஆய்வு புலங்கள் சிறப்பாக செயல்படுகின்றனவா? அரசு சார்ந்த தமிழ் வளர்ச்சிகள் சரிவர நடைபெறுகின்றனவா? என பல அறிஞர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு சரியான சாட்சியம் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம். 

தமிழை செம்மொழிப் பட்டியலில் இணைப்பதற்காக கடுமையாக போராடியதன் பலனாக தமிழகத்திற்கு வந்து சேர்ந்தது இந்த நிறுவனம். முதலில் அதன் பொறுப்பில் அன்றைய முதல்வர் கருணாநிதி இருந்தார். அவரது காலத்தில் பல திட்டங்கள் தீட்டப்பட்டன. பழந்தமிழ் இலக்கியங்களை பண் அமைத்து இசைத்தட்டுகளாக வெளியிட்டது உள்ளட்ட சில நடவடிக்கைகளை அந்நிறுவனம் மேற்கொண்டது. ஆனால் அது முழுமை பெறவில்லை. குறிப்பிட்ட அளவிலான இசைத்தட்டுகளை வெளியிட்டனர். அதன் பின் சில ஆய்வுகளை செய்ய பலருக்கும் நிதி ஒதுக்கியது அந்நிறுவனம். அதன்படி பல தமிழறிஞர்கள் நல்கையை பெற்றனர். முனைவர் பட்டம் வாங்கியவர்களுக்கு மட்டுமே நல்கை என்ற விதியோடு இயங்கிய இந்த அமைப்பில் வழக்கப்பட்ட பல ஆய்வுகள் இன்னும் முடிக்கப்படவே இல்லை என்பது வேதனை.

பல தமிழ்ப் பேராசிரியர்கள் லட்சக்கணக்கில் நல்கையை பெற்றுக் கொண்டு அதனை முடிக்காமலே கிடப்பில் போட்டுவிட்டனர். கொடுத்த நிதியும் வரவில்லை. ஆய்வு நடத்தப்படவில்லை என அந்த நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பலர் குமுறுகிறார்கள். இதைத் தாண்டி ‘பைபிளையும் வள்ளுவரையும்’ இணைத்து ஒப்பீட்டு அளவில் ஆய்வு செய்வதாக சில லட்சங்களை பெற்ற ஒரு மூத்த எழுத்தாளர் ஆய்வுக்காக ஒரு பிள்ளையார் சுழியைக் கூட போடவில்லையாம். அவரை அணுகி நிறுவனம் கேட்டதற்கு எப்போதோ வாங்கிய புத்தகங்களுக்கு எல்லாம் ரசீது கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். அது குறித்து விசாரித்த அதிகாரிகள் இதற்கு என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்துள்ளனர். இறுதியில் அந்த நல்கைக்காக கொடுத்த பணத்தை ‘காந்திக் கணக்கில்’ சேர்த்துவிட்டனர். இப்படி பல ஆய்வுகள் பணத்தை பெற்றுக் கொண்டு நடத்தப்படாமலே முடங்கிப்போய்விட்டது என்கிறார் அங்கே பணி புரிந்துவிட்டு தற்போது அந்நிறுவனத்தை விட்டு வெளியேறிய இளம் ஆய்வாளர் ஒருவர். 

இந்தநிலையில்தான் கடந்த 11 ஆண்டுகளாக இந்த நிறுவனத்திற்கு இயக்குநரே நியமிக்கப்படாமல் உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆகவே முடங்கிப் போய் கிடப்பதாக பல நாளிதழ்கள் இன்றைக்கு செய்தி வெளியிட்டுள்ளன. அதோடு இன்னொரு குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது. ஆய்வுக்காக பெறப்படும் நிதியை ஆய்வுக்கு பயன்படுத்துவதே முறை. அதைக் கொண்டுதானே தமிழை வளர்க்க முடியும்? ஆனால் இந்நிறுவனத்தின் அதிகாரிகள் ஆய்வுக்கு ஒதுக்கப்படும் நிதியை வைத்து என்ன செய்கிறார்கள் என்றால் அதை வைத்து கட்டடம் கட்டிக் கொள்கிறார்கள். அல்லது ஏசி உள்ளிட்ட ஆடம்பர வசதிகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் தமிழ் வளர்ந்துவிடுமா என்கிறார் இங்கேயே இன்னும் பணிப் புரிந்துவரும் அதிகாரி ஒருவர்.  இவர்கள் எல்லோரும் நேரடியாக பேசுவதற்கு அஞ்சுகிறார்கள். பேசினால் பணி பாதிக்கப்பட்டுவிடும் என்பதால் முகத்தை மறைத்துக் கொண்டு கருத்தை மட்டும் தருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆய்வுக்காக ஒதுக்கப்பட்ட 9 கோடி ரூபாய் கட்டிட செலவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக பல ஊடகங்கள் செய்தியை வெளியிட்டன.

பல ஆய்வுகள் அரங்கேறுவதன் மூலம் மொழியின் வளம் மேம்படும் என நினைத்து நிறுவப்பட்ட தமிழ் செம்மொழி நிறுவனத்தில் 11 ஆண்டுகளாக இயக்குநர் இல்லாமல் இருந்தால் அந்த நிறுவனம் எவ்வாறு செயல்படும் ? 2004 ஆண்டு தமிழ் மொழி செம்மொழி பட்டியலில் இணைக்கப்பட்டது. 2007 இல் இந்நிறுவனம் தரமணியில் தொடங்கப்பட்டது. முதலில் அதற்கு என தனி அலுவலகம் கூட இல்லாமல் இருந்த வந்த நிறுவனம் பின் விசாலமான இடத்தில் நல்ல கட்டட வசதியுடன் இயங்க தொடங்கியது. ஆனால் கட்டடம் அதிகாரி இல்லாமல் காலியாக உள்ளது. ஏன் இதற்கு இயக்குநர் நியமிக்கப்படவில்லை என மனிதவள அதிகாரியை ஒரு பத்திரிகை கருத்து கேட்டதற்கு அவர், “குறிப்பிட்ட ஒரு கட்சியின் பிரதிநிதிகள் கிடைக்காததால் பணி நியமனம் தாமதமாகி வருவதாக கூறியுள்ளார். மத்திய அரசு சார்ந்து இயங்கும் இந்த நிறுவனம் பெங்களூருவில் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் முடங்கிப் போய்க் கிடக்கிறது. அதை கவனிக்க வேண்டியது மாநில அரசா? இல்லை மத்திய அரசா? என எதிர்க் கேள்வி எழுப்பி இருக்கிறார் இன்னொரு அதிகாரி. 

தமிழ் மொழி வளர்க்கும் எந்தத் திட்டத்திற்கும் செயல்வடிவம் கொடுக்காமல் வெறுமனே அவ்வையாருக்கு சிலை, கவிஞருக்கு சிலை என காலத்தை கடத்துவதால் பயன் ஒன்றும் இல்லை என்கிறார் மெரினா வளாகத்தில் பணிபுரியும் பேராசிரியர் ஒருவர். செம்மொழி ஆய்வு நிறுவனத்தில் மொத்தம் 150 பணி இடங்கள் நிரப்பப்பட வேண்டியுள்ளது. ஆனால் அதில் சிலர் மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தப்பட்டுள்ளார்கள் என்கிறது தமிழ் இந்து செய்தி. தமிழை வாழ வைக்கும் இதைபோன்ற பணிகள் முடங்கிக் கிடப்பதை குறித்து எந்த அரசியல் கட்சிகளுக்கும் அக்கறை இல்லை. கடந்த சில வருடங்களாகவே நூலகங்களுக்கு நூல்கள் கொள்முதல் நடைபெறவே இல்லை. பல நூலகங்கள் அடிப்படை வசதியில்லாமல் திண்டாடி வருகின்றன. இப்படி தமிழ் சார்ந்த ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்தப்படாமல் இருந்தால் உலக அளவில் அல்ல; உள்ளூர் அளவில் கூட தமிழ் செழித்து வளராது. அப்புறம் செம்மொழியாக அது இருந்தால் என்ன? இல்லை என்றால் என்ன?  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com