கொண்டு செல்வதற்கு கடினமான இடங்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை விரைவாக எடுத்துச் செல்ல ஆளில்லா சிறிய வகை பறக்கும் வாகனங்களை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
கொரோனா தடுப்பூசிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயது பூர்த்தியான அனைத்து இந்தியர்களுக்கும் செலுத்திவிட வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து மத்திய அரசு வேகமாக செயல்பட்டு வருகிறது. தடுப்பூசி உற்பத்தி அதிகரிப்பு ஒருபுறம் முடுக்கி விடப்பட்டுள்ள சூழலில், அதனை இந்தியா முழுமைக்கும் தங்கு தடையில்லாமல் எடுத்துச் செல்வது என்பது ஒரு சவாலான விஷயமாக இருக்கின்றது.
இதனை சரிசெய்ய கான்பூரில் உள்ள ஐஐடி நிறுவனம் சில அரசு மற்றும் தனியார் அமைப்புகளுடன் இணைந்து சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி தரைவழியாக எடுத்துச் செல்ல சிரமம் மிகவும் மிகுந்த பகுதிகளுக்கு ஆளில்லா சிறிய வகை பறக்கும் வாகனங்களில் தடுப்பூசிகளை எடுத்து செல்ல ஆய்வு பணிகளை மேற்கொண்டது.
அதன்படி, தரையிலிருந்து குறைந்தபட்சம் 100 மீட்டர் உயரம் அளவிற்கு 35 கிலோ மீட்டர் தூரம் பறக்கக்கடிய ஆளில்லா சிறிய ரக பறக்கும் வாகனங்களில் தடுப்பூசிகளை எடுத்துச் செல்ல தெலங்கானாவில் உள்ள சில இடங்களில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு திருப்திகரமாக இருந்ததை அடுத்து, இதற்கான ஒப்புதலை பெற ஐசிஎம்ஆர் அமைப்பிடம் அனுமதிக்காக விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது, இதனை ஆய்வு செய்த அமைப்பு, இதற்கான அடிப்படை வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, இந்த திட்டத்தினை மேலும் விரிவுபடுத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதன்மூலம் இந்தியாவின் மிகக் கடுமையான பகுதிகளில் இந்த சிறிய ரக ஆளில்லா பறக்கும் வாகனங்களை பயன்படுத்தி தடுப்பூசிகளை எடுத்துச் சல்லும் முன்னெடுப்புகளை மேற்கொள்ள திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சம் நான்கு கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட இடத்தில் அதனை தரை இறக்கிவிட்டு மீண்டும் பத்திரமாக அனுப்பப்பட்ட இடத்திற்கே வரும் வகையிலும் கேட் ஆப் மற்றும் லேண்டிங் ஆகியவை மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வரும் வகையிலும் இருக்கும் வகையில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
ஆளில்லா பறக்கும் வாகனம் எங்கு செல்கிறது, அதனுடைய பாதை என்ன மற்றும் அதனுடன் தொடர்புகொள்வது உள்ளிட்ட அனைத்தும் சரியாக இருக்கும் வகையிலும் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக, இந்த சிறிய ரக ஆளில்லா பறக்கும் வாகனம் முழுக்க முழுக்க தானாக இயங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட உள்ளது. ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள ஜிபிஎஸ் பாதையில் பயணிக்கும் வகையிலும் தயாரிக்கப்பட உள்ளது.
கடுமையான மலைப் பகுதிகளிலும் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் சிறு சிறு தீவு பகுதிகளுக்கும் கரடுமுரடான கிராம பகுதிகளுக்கும் தடுப்பூசிகள் தங்கு தடையில்லாமல் செல்வதற்காக இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. ஏற்கெனவே இத்தகைய இடங்களுக்கும் தடுப்பூசிகளை எடுத்துச் செல்ல யோசனைகளை வழங்குமாறு ஆய்வு நிறுவனங்களிடம் கேட்டுக் கொண்டிருந்தது.
இந்தத் திட்டம் விரைவாக ஆய்வுகள் முடிந்து செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் இந்தியாவின் கடைகோடிகளில் இருப்பவர்களுக்கும் தடுப்பூசி முழுமையாக கிடைப்பது உறுதி செய்யப்படும் என மத்திய அரசு நம்புகிறது.
- நிரஞ்சன் குமார்