தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது மேலாண்மை வாரியமே..ஆதாரங்களுடன் கூடிய கட்டுரை

தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது மேலாண்மை வாரியமே..ஆதாரங்களுடன் கூடிய கட்டுரை
தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது மேலாண்மை வாரியமே..ஆதாரங்களுடன் கூடிய கட்டுரை
Published on

காவிரி ஆற்றுநீர் சிக்கல் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பும் வந்துவிட்டது. தீர்ப்பில் மேலாண்மை வாரியம் என்று சொல்லப்படவில்லை, ஸ்கீம் என்றே சொல்லப்பட்டுள்ளது என்ற வாதங்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில் தீர்ப்பு குறித்தும் எழும் சில அடிப்படைக் கேள்விகளும் அதற்கான பதில்களும் ஆதாரங்களோடு கொடுக்கப்படுகின்றன.  

1. தீர்ப்பில் காவிரிமேலாண்மை வாரியம்தான் என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளதா? ஆம் எனில் ஆதாரம் என்ன?  

பதில்:- தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது.  

முன்னதாக இந்த வழக்கு குறித்து ஒரு சிறிய புரிதல் வேண்டும்.  காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக எழுந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பாயம் 2007 பிப்ரவரி 5 ம் தேதி அதன் தீர்ப்பை வழங்கியது. அதில், அத்தியாயம் 5ல் பகுதி 8 ல் (Chapter 5 volume 8) தெளிவாகக் கூறப்பட்டுள்ளது என்னவெனில்,  

அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவாக்கள் சட்டத் திருத்தம் 1980ன் படி, இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் அமைப்பு குறித்து எதுவும் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. எனவே, இந்தத் தீர்ப்பாயம் காவிரி விவாகரத்திற்கு தீர்வு காணும் வகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரைக்கிறது. இந்த ஆணையம் அமைக்கப்பட வேண்டியது மிகமிக அவசியமான ஒன்று. இல்லையெனில் தீர்ப்பாயத்தின் தீர்ப்பானது வெற்றுக் காகிதமாக மட்டுமே இருக்கும் என்று தீர்ப்பாயம் அச்சம் கொள்கிறது.  

இந்த ஆணையமானது தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஓர் அமைப்பாக இருத்தல் அவசியம் என்றும், இது பக்ரா பியஸ் மேலாண்மை வாரியத்தை போன்றதாக இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. ( பக்ரா பியஸ் வாரியத்தைப் போல் இருக்க வேண்டும் என்று சொன்னதற்கான காரணம் இந்தத் திட்டத்தில்தான் அனைத்து அதிகாரங்களும் அணையை நிர்வகிக்கும் மாநில அரசிடம் இல்லாமல் அந்த வாரியத்திடம் உள்ளது).  

இந்தத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாத நிலையிலேயே உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது.  அந்த வழக்கில் 2018 பிப்ரவரி 16ம் தேதி தீர்ப்பளித்த  உச்சநீதிமன்றம் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு என்பது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு இணையானது என்றும், அதை அமல்படுத்த வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது என்றும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பிலும் இந்தப் பிரச்னைக்கான தீர்வாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. 

தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் இருந்து உச்சநீதிமன்றம் மாறுபட்ட ஒரே இடமானது கர்நாடகம் தமிழகத்திற்கு தர வேண்டிய 192 டி.எம்.சி என்ற தண்ணீரின் அளவை 177.25 டி.எம்.சி ஆக குறைத்தது மட்டுமே. மற்றபடி தீர்ப்பாயத்தின் தீர்ப்பை அவ்வாறே ஏற்றுக் கொண்டுள்ளது உச்சநீதிமன்றம். மேலும் உச்சநீதிமன்றத் தீர்ப்பிலும் காவிரி மேலாண்மை வாரியம் என்பது மீண்டும் சொல்லப்பட்டுள்ளது. மேலும், தீர்ப்பயத்தின் தீர்ப்பில் “Cauvery management board may be constituted by the central government” என்று சொல்லப்பட்டிருப்பதால் உறுதியாக அமைக்க வேண்டிய அவசியமில்லை என்ற பொருளில் மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் வைத்த வாதத்தையும் உச்சநீதி மன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. உறுதியாக அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இவையனைத்திற்குமான ஆதாரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.  

ஆதாரம் ஒன்று: 2007ல் கொடுக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பின் பக்கங்கள்.  

ஆதாரம் இரண்டு: 2018ல் கொடுக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்  முதல் பக்கம் ( உள்ளடக்கம் ) பக்கம் 4ல் Mechanism (Cauvery Management Board ) for implementation of tribunal's decisions  

ஆதாரம் முன்று:  2018ல் வழங்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் பக்கம் 335ல் இதை செயல்படுத்துவதற்கான திட்டம் காவிரி மேலாண்மை வாரியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.   

ஆதாரம் நான்கு: 2018 ல் வழங்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் 456 பக்கத்தில் நடுவர் மன்றத்தின் தீர்ப்பானது உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பாகவே கருதப்பட வேண்டும்.  

இத்தனைக்குப் பிறகும் ஏன் தாமதம் என்ற கேள்வி முன் வைக்கப்படும் போது, காவிரி மேலாண்மை வாரியமாகவே கூட இருக்கட்டும்.ஆனால், அதில் யார் யாரெல்லாம் இடம் பெற வேண்டும் என்பதை பற்றி தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்ற வாதங்களும் வைக்கப்படுகின்றன. இதுவும் ஏற்புடையதல்ல; ஏனெனில், நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தில் இடம்பெற வேண்டியவர்களையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. 

அதாவது, வாரியத்தின் தலைவராக ஒருவரும் உறுப்பினர்களாக இருவரும் நியமிக்கப்பட வேண்டும். இவர்கள் முழு நேர ஊழியர்களாக இருத்தல் வேண்டும். இதன் தலைவர் நீர்ப்பாசனத்துறையின் வல்லுநராகவும், நீர்வளத்துறை மேலாண்மையில் 20 வருடங்களுக்குக் குறையாத அனுபவம் கொண்டவராகவும் தலைமைப் பொறியாளர் தகுதியில் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.  

இரண்டு உறுப்பினர்களில் ஒருவர், நீர்த்தேக்கத்துறையில் மேலாண்மை, பராமரிப்பு, இயக்கம் ஆகியவற்றில்  மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டங்களில் 15 வருடத்திற்குக் குறையாத கள அனுபவம் கொண்டவராகவும் தலைமைப் பொறியாளர் தகுதியில் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும். 

இரண்டாவது உறுப்பினர் விவசாயம் மற்றும் உழவியலில் 15 வருடத்திற்கு குறையாத அனுபவம் பெற்ற வல்லுநராக இருத்தல் வேண்டும். 

இன்னபிற உறுப்பினர்கள் குறித்தும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றிற்கான ஆதாரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.  

இதில் மிகமிக முக்கியமான ஒன்று, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் மட்டுமே கர்நாடகத்தில் உள்ள அணைக்கட்டுகளை நிர்வகிக்கும் பொறுப்பு மேலாண்மை வாரியத்திடம் கொடுக்கப்படும் தீர்ப்பின் படி. 

வேறு ஏதேனும்  ஸ்கீம் கொண்டு வரப்பட்டால் அணைக்கட்டுகளை நிர்வகிக்கும் பொறுப்பும், தண்ணீரைத் திறக்கும் அதிகாரமும் மீண்டும் கர்நாடக அரசிடமே இருக்கும்.  அதனால், மீண்டும் தமிழகம் வஞ்சிக்கப்படும் நிலையே ஏற்படும். 

இதனாலேயே , ஒட்டு மொத்த தமிழகமும் காவிரி மேலாண்மை வாரியத்தைக் கேட்கிறது. அதே சமயம் ஒட்டு மொத்த கர்நாடகமும் காவிரி மேலாண்மை வாரியத்தை எதிர்க்கிறது. இதில் மத்திய அரசு தமிழகத்திற்கோ அல்லது கர்நாடகத்திற்கோ சாதகமாக செயல்பட வேண்டாம். ஆனால், நீதிமன்றத் தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதை செய்தால் மட்டுமே போதும். நீதிமன்றத் தீர்ப்பின்படி செய்ய வேண்டும் எனில், அவர்களுக்கான ஒரே வாய்ப்பு காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமே. 

அமைக்கப்படுமா மேலாண்மை வாரியம்....? நிலைநாட்டப்படுமா நீதி..?

செந்தில்.தி, மூத்த செய்தி ஆசிரியர்  

திலகவதி.ச, செய்தியாளர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com