9 மாதங்களிலே உச்சம் அடைந்த உலக கார்பன் உமிழ்வு.. சீனாதான் காரணமா?-வெளியானது புதிய ஆய்வுகள்

9 மாதங்களிலே உச்சம் அடைந்த உலக கார்பன் உமிழ்வு.. சீனாதான் காரணமா?-வெளியானது புதிய ஆய்வுகள்
9 மாதங்களிலே உச்சம் அடைந்த உலக கார்பன் உமிழ்வு.. சீனாதான் காரணமா?-வெளியானது புதிய ஆய்வுகள்
Published on

2021 இன் முதல் ஒன்பது மாதங்களில் ஏற்பட்டுள்ள கார்பன் உமிழ்வு, 2019-ன் முழு ஆண்டிற்கான அளவை நெருங்கும் அளவுக்கு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் வெப்ப உமிழ்வு வாயுக்களைக் கண்காணிக்கும் விஞ்ஞானிகள் குழு, 2019 ஆம் ஆண்டில் 36.7 பில்லியன் மெட்ரிக் டன்களாக கரியமில வாயுவின் அளவு இருந்தது. அதேபோல 2021 ஆம் ஆண்டிலும் 36.4 பில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு உலகம் கரியமில வாயுவை வெளியேற்றும் என்று அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு 2020இல் பொதுமுடக்கம் அமலில் இருந்தபோது, உலகில் கார்பன் உமிழ்வுகள் 34.8 பில்லியன் மெட்ரிக் டன்களாகக் குறைந்தன, எனவே உலக கார்பன் திட்டத்தின் புதுப்பிக்கப்பட்ட கணக்கீடுகளின்படி, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 4.9% அளவுக்கு கார்பன் உமிழ்வு அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு சீனாவின் மாசு அதிகரிப்பு உலகளாவிய புள்ளிவிவரங்கள் 2019 ஆம் ஆண்டிற்குத் திரும்புவதற்குப் பெரும்பாலும் காரணமாகும். 2019 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 2021 ஆம் ஆண்டில் சீனாவில் உமிழ்வு 7% அதிகமாக இருந்தது என்று இந்த ஆய்வு கூறுகிறது. இந்தியாவின் உமிழ்வு 3% அதிகமாக இருந்தது. இதற்கு நேர்மாறாக, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் உலகின் பிற நாடுகளில் 2019 விட இந்த ஆண்டு குறைவாகவே மாசுபாட்டின் அளவு பதிவாகியுள்ளது என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

உலகின் மாசுபாடு குறித்த புள்ளிவிபரங்கள் அதிகரிப்பதற்கு, சீனாவின் மாசு அதிகரிப்புதான் "பெரும்பாலும் காரணம்" என்று கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழக விஞ்ஞானி கொரின் லிக்கொய்ர்  தெரிவித்திருக்கிறார். மின் பயன்பாடு, பயணம், தொழில்துறை உற்பத்தி மற்றும் பிற காரணிகள் பற்றிய அரசாங்கங்களின் தரவுகளின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்கள் கிளாஸ்கோ பருவநிலை மாற்ற மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள. இந்த ஆண்டு சராசரியாக 115 மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்சைடு ஒவ்வொரு நொடியும் காற்றில் கலக்கிறது என்றும் இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

பிரேக்த்ரூ இன்ஸ்டிடியூட்டின் காலநிலை இயக்குனர் ஜூகே ஹவுஸ்ஃபாதர், " இந்த ஆய்வு முடிவுகள் மூலமாக வரும் 2022ஆம் ஆண்டில் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து வெளிவரும் கார்பன் உமிழ்வுகள் உலகளாவிய அளவில் ஒரு புதிய உச்சத்தை தொடுவதற்கு வாய்ப்பு உள்ளது" என்று கணித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com