எடுத்த எடுப்பில் ஏபிசிடியைக் கற்றுக்கொடுக்கலாமா ?

எழுத்தாளர் , கவிஞர் மகுடேசுவரன் எழுதும் புதிய தொடர் - இளையோர் மொழிக்களம் பாகம் 9
மழலையர் பள்ளி
மழலையர் பள்ளிகோப்புப்படம் | Freepik
Published on

ஓர் ஒலிக்குறிப்பினைப் பொருள் பற்றி வழங்கத் தொடங்கிவிட்டால் அதனைச் சொல் என்கிறோம். சொல் என்பது ஒரு பொருளைக் குறிக்கவேண்டும். வெற்று ஒலிக்குறிப்பு சொல் ஆகாது. சொல் என்பதற்கு வழங்கப்படும் இன்னொரு சொல்தான் மொழி என்பது. அதனை அப்படியே திருப்பிப் போட்டால் என்னாகும் ? மொழி என்பதே சொல்தான். சொல் தவிர வேறில்லை.

இன்றைக்கு மூன்றாம் அகவை நிரம்பியவுடனேயே ஒரு குழந்தையைப் பள்ளியில் சேர்த்துவிடுகிறோம். அல்லது பள்ளிபோன்ற ஓரிடத்தில் சேர்த்துவிடுகிறோம். தாய் தந்தை உற்றார் உறவினரோடு பழகி வாழும் குழந்தைக்குக் கிடைக்கும் மொழியறிவு இத்தகைய மழலையர் பள்ளிகளில் கிடைக்கின்றதா? இல்லையென்றே சொல்லவேண்டும். ஒரு தாய் குழந்தையை வளர்க்கும்போது ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கிறார். குழந்தையைக் கொஞ்சுவது மிகச்சிறந்த மொழியூட்டல் ஆகும். யார்க்குமே ஒன்றைச் சொல்லும்போது அன்பில் குழைத்த சொற்களையும் முறைகளையும் பயன்படுத்தினால் அதன் விளைவே வேறு.

குழந்தை
குழந்தைpt desk

குழந்தை மறுமொழி கூறாதுதான். ஆனால், தாயார் விடுவதில்லை. குழந்தையிடமிருந்து ஒலிக்குழறலே மறுமொழியாக வந்தாலும் பொருள்படப் பேசுவதுதான் தாயின் வேலை. குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு எந்தத் தாயும் 'உம்'மென்று இருப்பதில்லை. அவர்கட்கிடையே உரையாடல் நடக்கிறது. 'என்ன தங்கம் பார்க்கற? அம்மாவைப் பார்க்கிறயா? அங்கே என்ன தெரியுது? வாய்க்குள்ள விரலை வைக்காத. பாலை மிச்சம் வைக்காமல் குடிச்சிரு. பாட்டி வீட்டுக்குப் போகலாமா? நாளைக்கு மாமா வருவாரே. உனக்குப் பொம்மை வாங்கிட்டு வரப்போறாரே. என்ன எந்நேரம் பார்த்தாலும் அழுதுகிட்டே இருக்கிற? அடி வாங்கப்போற' என்று பலவாறு பேசிக்கோண்டே இருக்கிறார்.

தாயாரின் சொற்களுக்கெல்லாம் குழந்தையிடமிருந்து எந்தச் சொல்லும் மறுமொழியாக வராதுதான். ஆனால், தாயார் பேசுகிறார். குழந்தை கேட்டுக்கொள்கிறது. ஒலித்தொடர்களை மிழற்றுகிறது. இவ்வாறு அதற்குள் மொழிவிதைப்பு நடக்கிறது. இந்த வினைத் தொடர்களால்தான் ஒரு மொழி தாய் மொழி ஆகிறது. தாயால் புகட்டப்பட்ட மொழி. இந்தக் குழந்தைதான் பள்ளியில் சேர்க்கப்படுகிறது. அழுதபடியே தாய் தந்தையரைப் பிரிய முடியாமல் தேம்பித் துவண்டபடி கண்ணீர் ததும்ப வகுப்பறையை அடைகிறது. அடுத்த இருபதாண்டுகட்கு அடைக்கப்படுகிறது.

மழலையர் பள்ளிகளில் உள்ள குழந்தைகளைப் பார்த்திருக்கிறீர்களா? உதிர்ந்த பூவின் வாடலோடு அமர்ந்திருக்கும் அந்தக் காட்சியை. அந்த அகவையில் பள்ளியில் சேர்த்து அப்படி என்ன கற்றுக்கொடுத்துவிடப் போகிறோம்? அப்போதிருந்தே கற்கத் தொடங்கினால்தான் அந்தக் குழந்தை வானத்தைக் கைப்பற்ற முடியுமா?

மழலை
மழலை

மழலையர் பள்ளியால் ஒரு குழந்தை எதனை முதற்கண் இழக்கிறது தெரியுமா? தான் இயல்பாகக் கற்றுக்கொள்ள வேண்டிய மொழியைத்தான் இழக்கிறது. தன் வாழ்நிலைச் சூழல் வழங்க வேண்டிய சொற்களை இழக்கிறது. குழந்தையின் இயல்பிற்கு முற்றிலும் பொருந்தாத அடைபாட்டுக்குள் போகிறது. இவ்வுலகினைத் தன் கண்களால் கண்டு கண்டு அறிய வேண்டிய எண்ணற்ற எளிய காட்சிகளின் வியப்பை இழக்கிறது.

ஆப்பிரிக்கப் பழங்குடி இனத்தவர்களின் வாழ்க்கைக் காணொளிகளைப் பாருங்கள். அவர்கள் குழந்தைகளை மண்ணில் விட்டுவிடுவார்கள். மண்ணிலிருந்து குழந்தையைப் பிரிக்கமாட்டார்கள். குழந்தையை மண்ணிலேயே விட்டுவிடுவதால் அது தன் உடல் முழுவதும் மண்புழுதிபடத் தோன்றும். பெற்றோருக்கும் மண்ணைப் பூசிக்கொள்கின்ற வழக்கம் உண்டு. அது மண்ணை உண்பதில்லை. எஞ்ஞான்றும் தோல் நோய்களை அண்டவிடாத வருமுன்காப்பு அது.

அம்மா - மகள்
அம்மா - மகள்pt desk

எந்நேரமும் விளையாடப் பார்க்கும் குழந்தையைத்தான் மழலையர் பள்ளிகள் அடைத்து வைக்கின்றன. இதற்குப் பெற்றோரின் கூட்டும் உதவுகிறது. பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லவேண்டும் என்பது நம் பெற்றோர்கட்குக் கனவு. கடந்த தலைமுறை வரைக்கும் பிள்ளைகள் பள்ளிக்குப் போகின்றனவா, இல்லையா என்பது ஒரு நலக் கேள்வியாகத்தான் இருந்தது. இற்றைக் காலத்தில் இரண்டாம் வாய்ப்புக்கு இடமில்லை. பள்ளிக்குச் சென்றுதான் ஆகவேண்டும். தம் மக்கள் இன்ன வகுப்பில் படிக்கிறார்கள் என்று சொல்வது பெற்றோர்க்குப் பெருமை. அண்மையில் இரு பெண்டிரிடையே நடந்த உரையாடலைத் தற்செயலாகச் செவிமடுத்தேன்.

'ரித்து இப்பத்தான் எல்கேஜி பண்றாளுங்.' எல்லாம் பெருமை உரையாடல்கள்! எல்.கே.ஜி.யில் அந்தக் குழந்தை என்னதான் பண்ணிவிடும்? அந்தக் குழந்தையை அதன் இயல்பிற்கேற்ப எதனையுமே பண்ணவிடவில்லை என்பதுதான் அங்கே கூறப்பட வேண்டியது. குழந்தைப் பள்ளி அடைப்பினால்தான் ஒரு குழந்தை தன் தாய்மொழியைப் பழுதறக் கற்றுத் தேரும் முதல் வாய்ப்பினை இழக்கிறது. அங்கே தாய்மொழியைத்தான் கற்பிக்கிறார்களா? அதனை மருந்துக்குக்கூட கற்பிப்பதில்லையா? களநிலவரம் எப்படி வேண்டுமானாலும் இருக்கும்.

தமிழ் உயிர் எழுத்துகள்
தமிழ் உயிர் எழுத்துகள்

அவர்கள் எடுத்த எடுப்பில் ஏபிசிடி கற்றுக் கொடுப்பார்கள். பிறகுதான் அஆஇஈ கற்றுக் கொடுக்க வரக்கூடும். அந்தக் குழந்தைக்கு என்ன புரியும்? எல்லாம் மிரட்சியாகத்தான் இருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com