ஈராயிரக் குழவிகள் எனப்படும் ‘2கே கிட்சின்’ குணநலன்கள் யாவை ? நம் காலத்தில் இவர்களே புத்திளம் தலைமுறையினர். முதன்முறை வாக்களித்துள்ளவர்கள். இவர்களுக்கு என்ன தெரியும் ? என்ன தெரியாது ? இதனை வரையறைத்துக்கொண்ட பிறகுதான் இவர்கள் பயன்படுத்தும் மொழிப்புலத்தை ஆராய முடியும்.
ஈராயிரக் குழவிகள் நகர்ப்புறப் பெரும்பான்மையர். அவர்களில் பலர் அடுக்கக வாழ்வினர். ஊர்ப்புறங்களிலும் சிறுநகரங்களிலும் வாழ்பவர்கள் ஓரளவு முந்திய தலைமுறையினரோடு இணக்கம் மிக்கவர்கள். நகர்ப்புறக் குழவிகள்தாம் சிலிர்ப்பிகளாக அறியப்படுபவர்கள்.
அண்மையில் சென்னைக் குடைவூர்தியில் (மெட்ரோ) செல்ல நேர்ந்தபோது என்னருகே இரு தம்பிகள் வந்தமர்ந்தனர். அவர்களுடைய பேச்சில் விஜய் அஜித் இடம்பெற்றிருந்தால்கூட வியந்திருக்கமாட்டேன். ‘லோகேஷ் கனகராஜூம் எச் வினோத்தும்’ தொடர்ச்சியாய் இடம்பெற்றார்கள். இவர்களுடைய திரைப்படத்துறை அறிதல்கள் அனைத்தையும் பிரித்து மேய்வதாய் இருந்தன. அதே நேரத்தில் காணொளித் தளங்களில் வெளியாகும் வலைத்தொடர்களின் பெயர்களும் இடம்பெற்றன. இன்னொரு புறத்தில் ‘ஜொர்தாலயே உர்ட்டாத’ போன்ற பாடல்களை ஐந்து கோடிக்கும் அருகிலானோர் பார்த்து வைத்திருக்கின்றனர்.
இன்றைய இளைவர்களின் முதல் வலிமை சமூக ஊடகங்களைத் தம் கையில் வைத்திருப்பதுதான். அவற்றின் பெரிய தொகையளவுப் பங்காற்றுநர்கள் அவர்களே. புதிய புதிய திறன்கருவிகளை ஆளத் தெரிந்தவர்களாக இருக்கின்றார்கள். இடை அகவையர் பங்களிப்பதைவிட ஈராயிரத்தாரின் பங்களிப்பு பெரிது. அதற்கேற்றவாறு அவை அனைத்திலும் காணொளிப் படைப்பு முதன்மை பெற்றது. அவ்வழியே இன்றைய இளையோர் எங்கெங்கும் நீக்கமறப் பரவியுள்ளனர். எங்கோ செயல்படும் ஒருவர் இன்னோர் எல்லையில் உள்ளோரையும் தம்மைப்போல் ஆகச்செய்துவிடுகிறார். ஆட முயலாத இளையவர்களே இல்லை எனலாம்.
தமக்கு அறிவுரை சொல்வோரையும் பண்புகளை வலியுறுத்துவோரையும் ‘பூமர்’ என்று பெயரிட்டு நகர்கின்றனர். இந்தப் பூமர் என்பதற்கு ஒரு தமிழ்ச்சொல் ஆக்கித் தருக என்று நண்பர்கள் வேண்டினர். அவ்வாறு தமிழ்ச்சொல் ஆக்கித் தருவதன் வழியாக அச்சொல்லை நாமும் பரப்புகிறோம் என்று கருதி வாளாவிருந்தேன். இன்று அதற்கும் தமிழாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டது. பூமர் என்பவரைக் ‘குணங்கூறி’ எனலாம். அறிவுரை சொல்பவர், பண்புகளை வலியுறுத்துபவர்.
அடுக்கக வாழ்வில் உள்ள பிள்ளைகளுக்கு என்ன தெரியும் என்று நினைக்கிறீர்கள் ? இன்றைய இளையோர் பலர்க்கு ‘அரிசி மண்ணிலிருந்து விளைகிறது என்பது தெரியுமா’ என்று நண்பர் கேட்டார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘மிகவும் கடுமையாகக் கூறுகின்றாரோ’ என்று அவரை மேல்கீழாக நோக்கினேன். ‘அவ்வளவு ஏன்… அரிசி நெல்லிலிருந்து உமி நீக்கிப் பிரித்தெடுக்கப்படுவது என்றாவது தெரியுமா ?’ எனக்கேட்டார். என்னால் உறுதியாகக் கூறமுடியவில்லை. எவ்வொருவர்க்கும் தாம் உண்ணும் உணவின் தோற்றுவாய் தெரிந்திருக்கவேண்டும். ஒவ்வொருவரும் தாம் உண்ணும் உணவினை விளைவிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு செடியை நட்டு அது மரமாக வளர்வதைக் கண் நிறைந்து பார்க்க வேண்டும். அதிலிருந்து ஒரு பழத்தைப் பறித்துத் தின்னவேண்டும். எல்லாம் எளிதில் கிடைக்கின்றன. அதற்குப் பின்னாலுள்ள பெருந்திரளான உழைப்பும் இன்னொரு குமுகாயப் பிரிவினரின் பங்களிப்பும் உணர்த்தப்படுவதே இல்லை. நாம் பார்த்த தண்ணீர்ப் பஞ்சத்தையோ, நாம் பார்த்த பால் பற்றாக்குறையையோ இன்றைய பிள்ளைகள் அறிந்திருக்கமாட்டார்கள்.
‘இந்தக் காலத்துப் பசங்க நீங்க நினைக்கிறது போல இல்லைங்க’ என்று யாராயினும் கூறுகிறார்கள். நமக்கு ஒன்று வேண்டும் என்றால் பெற்றோரிடம் தயங்கியபடியே கேட்போம். அவர்கள் இட்ட பணிகளை ஒன்றுவிடாமல் முடித்துவிட்டு நல்ல பிள்ளையாக நிற்போம். அவர்கள் மனங்கனியும் பொன்வேளைக்காகக் காத்திருந்து நம் கோரிக்கையை முன்வைப்போம். இன்றைய பிள்ளைகளைப் பெற்றோர் கேள்வி கேட்டுவிட முடியாது. பிள்ளைகள் முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டால் பெற்றோரின் உயிரே போய்விடுகிறது. கேட்டவுடன் வாங்கித் தருகிறார்கள். ‘ஐயாயிரத்திற்குக் குறைச்சலான துணியெடுத்தா என் பொண்ணுக்குப் பிடிக்கறதேயில்ல’ என்று பீற்றுகின்றவர்கள் உளர். வாழ்வியல் மதிப்புகள் நுகர்வுகளால் மதிப்பிழந்து போய்விட்ட காலத்தில் வாழ்கிறோம். அதனால் ஈராயிரக் குழவிகளை மட்டும் குறைகூறுவது ஒரு தரப்பான பார்வைதான்.
மொழி மட்டும் தப்பித்துவிடுமா ? - https://bit.ly/COLE01
தமிழுக்குத் தலைப்பில்கூட இடமில்லையா? - https://bit.ly/COLE02