பள்ளி மொழிச்சூழல், வீட்டு மொழிச்சூழல் – இவ்விரண்டினையும் ஒரு குழந்தை எதிர்கொள்கிறது. அதற்கு என்ன தெரியும் ? இரண்டு மொழிகளையும் பகுத்தறியத் தெரியுமா ? தமிழ் வேறு, ஆங்கிலம் வேறு என்று பிரித்துப் பார்க்கத் தெரியுமா ? வீட்டிலிருக்கும் பாட்டி நாய் பூனை என்கிறார். ஆனால், பள்ளியில் உள்ள ஆசிரியை டாக், கேட் என்கிறார். குழந்தையின் தரப்பிலிருந்து பாருங்கள், இவ்விரண்டு மொழி வழிப்பட்ட சொற்களும் அதற்குச் சிறிது அதிர்ச்சியாகக்கூட இருக்கலாம். தாத்தாவும் பாட்டியும் கற்பித்த சொற்களைப் பள்ளியில் மாற்றிச் சொல்லித் தருகிறார்கள். இங்கே பண்பாட்டு அதிர்ச்சி என்ற பெரிய சொற்றொடரைப் பயன்படுத்த விரும்பவில்லை. ஆனால், குழந்தை தன் சொற்களை அறிந்து வந்த தொடர்பாடு நெரிபடுகின்ற ஓரிடம் இஃது என்று உறுதியாகக் கூறுவேன்.
நாயும் பூனையும் தமிழ் என்றும், டாக்கும் கேட்டும் ஆங்கிலம் என்றும் பிரித்து அறிந்தேயாகவேண்டிய அகவையா அந்தக் குழந்தைக்கு ? ஆனால், இதுதான் நம் கல்விப்புலத்தில் நடக்கிறது. தமிழை முழுமையாகக் கற்றுத் தருவதற்கு முன்பேயே ஆங்கிலத்தை இணையாகத் திணிக்கின்ற கல்வி முறை. சில நூறு சொற்களோடு தாய்மொழியில் மழலை பிதற்றும் சொல்லறிவோடு தொடக்கக்கல்விப் படிகளில் நுழையும் குழந்தைக்குச் சிறிதும் ஈவு இரக்கமில்லாமல் ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. அவ்விடத்தில் ஒரு குழந்தை எப்படியாவது தாண்டி நகர்ந்துவிட்டால் தப்பிக்கும். இல்லையேல் தமிழுக்கும் ஆங்கிலத்திற்குமிடையில் அதன் சிந்தனைப் புலம் இறுக்கிக் கட்டப்பட்டுக் கிடக்கும். அந்தத் தளையை அறுக்கத் தெரியாமல் தன் வாழ்நாள் முழுவதும் தள்ளாட வேண்டியதுதான்.
நாம் இங்கே கூறிப்பார்க்கின்ற எடுத்துக்காட்டு எவ்வளவோ மென்மையானது. பள்ளிக்குள் வந்தவுடன் தமிழில் பேசவேகூடாது என்னும் கட்டுப்பாடுடைய பள்ளிகளை நினைத்துப் பாருங்கள். ஒரு குழந்தை எதனைப் பேச வாயெடுத்தாலும் வரவேற்றுச் செவிகூர்ந்து கேட்கவேண்டும். ‘அழகாருக்கு, இன்னும் சொல்லு பாப்பா’ என்று வாய்ச்சொல் விளம்ப வாய்ப்பளிக்கவேண்டும். “நாய் பூனை என்று சொல்லாதே, டாக் கேட் என்றே சொல்” என்னும் கட்டளையின் வன்முறை விளங்குகிறதா ?
ஒரு குழந்தை ஒரு சொல்லைப் பழகுகிறது. குழந்தைக்குப் பழக்கமாகும் முதற்சொற்களில் ஒன்று பால் என்பது. குழந்தை பால் குடிக்கவேண்டும். தாயார் அதற்குப் பால் ஊட்டுகிறார். தாய்ப்பாலூட்டல் மறந்த பிறகும் பசுப்பால் புகட்டப்படுகிறது. ‘குறும்பு பண்ணாம பால் குடிச்சிடு, தங்கம்’ என்று கெஞ்சிக் கூத்தாடுகிறார்கள். குழந்தைக்குப் பால் என்பது அது விரும்பிக் குடிக்கும் இனிய உணவுப் பொருள் ஆகிறது. பிறகு விளையாடப் பழகுகிறது. பந்து வாங்கித் தரப்படுகிறது. அந்த விளையாட்டின் வழியே பந்து என்ற சொல் பழக்கமாகிறது. குழந்தைக்கு மிகவும் பிடித்த விளையாட்டுப் பொருள் பந்து.
இந்த அறிதலோடு பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைக்கு ஆங்கில வழியில் பாடமெடுக்கும் ஆசிரியர்கள் என்ன கற்பிக்கிறார்கள் ? பந்தைக் காட்டி ‘பால்’ என்கிறார்கள். பாலைக் காட்டி ‘மில்க்’ என்கிறார்கள். உலகோரே, நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் - இது அந்தக் குழந்தைக்குச் சொல்லதிர்ச்சியா இல்லையா ? இப்படித்தானே நம் குழந்தைகட்கு இரு மொழிச்சொற்களை அறிமுகப்படுத்தித் துன்புறுத்திக்கொண்டுள்ளோம் ? தாய்மொழியிலிருந்து பால் என்ற சொல்லைக் கற்று வந்த பெரியவர்கள் யாராயினும் உறுதியாய்க் கூறுகிறேன், ’பால்’ என்ற சொல்லைக் கேட்ட நொடியில் ஒருவர்க்கு ‘உண்ணும் பால்’தான் நினைவுக்கு வரும். யார்க்கும் ‘உதைக்கும் பால்’ நினைவுக்கு வராது. பந்துக்குப் பால் என்பது ஆங்கில மொழிச்சொல் என்றே நாம் புரிந்துவைத்திருக்கிறோம். அது அழுத்தமாக ஒலிக்கவேண்டிய பால், இது மென்மையாக ஒலிக்கவேண்டிய பால் என்று விளக்கினாலும் எடுபடாது.
தமிழையும் ஆங்கிலத்தையும் சேர்த்துக் கற்கும் குழந்தையின் முன்னே இரட்டைத் தடம் போட்டு வைத்திருக்கிறோம். அம்மா அப்பா - மம்மி டாடி, ஆம் இல்லை - யெஸ் நோ, வா போ - கம் கோ, பால் பந்து - மில்க் பால் – இப்படித்தான் நம் பிள்ளைகள் கற்றுக்கொண்டிருக்கின்றன. இங்கே நாம் அடைய வேண்டிய தீர்வு என்ன ? அறிவார்ந்தவர்கள் விடை கூறவேண்டும்.
முற்றாகத் தமிழைப் புறக்கணித்துவிட்டு ஆங்கிலத்தில் மட்டுமே கற்றுக்கொடுக்கவேண்டும் என்று யாராவது சொல்லத் துணிவார்களா ? அவ்வாறு சொல்வது இயலாது. தாய் கற்பிக்கும் மொழியாகத் தமிழே விளங்குகிறது. இம்மாநிலத்தில் மட்டுமன்று, இந்திய நாடு முழுமைக்குமேகூட ஆங்கிலம் மட்டுமே அறிந்த ஒருவராய் இருத்தல் இயலாது. அவ்விடத்து மொழியைக் கற்பதே கல்வி.
வேறு என்ன தீர்வு காணலாம் ? முதலில் தமிழை முழுமையாகக் கற்றுக்கொடுத்துவிட்ட பிறகே ஆங்கிலத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று சொல்லலாமா ? ஆம். அதுதான் சரியாக இருக்கும். முதலில் தமிழை நன்கு கற்றுக்கொள்ளவேண்டும். அதன்வழியே குழந்தையின் கல்வியாற்றல் மிகுந்த பிறகு, மொழிவேறுபாடு உணரும் மனவளர்ச்சி ஏற்பட்ட பிறகு, இன்னொரு மொழியைத் தாய்மொழி வழியே கற்றுக்கொடுக்க வேண்டும். என்னைக் கேட்டால் ஒருவர்க்கு ஒரேயொரு மொழி போதும் என்பேன். ஆனால், எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஒரு மொழியில் அடைந்துள்ள தேர்ச்சி பல மொழிகளைக் கற்கும் ஆற்றலைத் தரும்.
இந்தத் தொடரின் முந்தைய பாகங்களைப் படிக்க, இளையோர் மொழிக்களம்