இன்றைய இளையோர் என்று யாரைக் குறிப்பிடலாம் ? பதின் அகவை முடிய உள்ளவர்களையும், இருபதின் அகவை தொடங்கியுள்ளவர்களையும் குறிப்பிடலாம். இவர்கள்தாம் வாழ்வின் தலைவாயிலில் நிற்பவர்கள். இளமைப் பட்டொளி வீசுபவர்கள். இணையத்தில் இவர்களை ‘2கே கிட்ஸ்’ என்று அடையாளப்படுத்தினார்கள். தொண்ணூறுகளின் இறுதியிலும் இரண்டாயிரத்தின் தொடக்கத்திலும் பிறந்தவர்கள் என்று பொதுவான விளக்கம் தரப்படுகிறது.
இணையத்தை முழுமையாகக் கையில் வைத்திருப்பவர்கள் என்று இத்தரப்பினரைக் கூறலாம். மூத்தவர்கள் பலர் கணினியோடு தொடர்புடையவர்கள் அல்லர். நாற்பதாம் அகவைக்கு மேற்பட்ட பலரையும் மூத்தவர்கள் என்றே கூறுகிறேன். அவர்களில் பலர்க்குக் கைப்பேசியைக்கூட நன்கு பயன்படுத்தத் தெரியாது. உலகம் செயலிகளால் இயங்கிக்கொண்டிருக்கிறது. அவற்றில் உடனடித் தேர்ச்சி பெற்றவர்கள் நம் காலத்து இளையவர்களே.
எண்ணிப் பார்த்தால் மூத்த தலைமுறையினரைவிடவும் இன்று தலையெடுத்தவர்கள் பல வாய்ப்புகளைக் கைப்பற்றியவர்கள் ஆகிறார்கள். தந்தையிடம் ஒரு மிதிவண்டியை அழுதழுது வாங்குவதற்குப் பட்டபாடு இக்காலத்து இளையோர்க்கு இல்லை. மகன் கல்லூரிக்குச் செல்லத் தொடங்குகிறான் என்றதும் ஈருருளி வாங்கித் தர யாரும் அஞ்சுவதில்லை. ஒவ்வொரு வீட்டிலுமுள்ள கல்லூரிப் பிள்ளைகள்தாம் பல பெற்றோர்கட்கு இணையவழிச் செயல்களை நிறைவேற்றித் தருகின்றனர். திரைப்படத்திற்குப் பதிவு செய்வதுமுதல் உணவிற்குப் பணிப்புச் செய்வதுவரை எல்லாம் அடக்கம்.
காலம் விரைந்து செல்கிறது. யாரைப் பழையதாக்குகிறது, யாரைப் புதியதாக்குகிறது என்றே தெரியவில்லை. சேரன் என்னும் இயக்குநரை எம்போன்றவர்கள் இன்னும் திரைப்பட இயக்குநராகவே அறிந்து நினைவில் வைத்திருக்கிறோம். ஆனால், இளைய தலைமுறையினர் தம்மை அறிந்திருக்கவில்லை என்பதால் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கெடுத்து அறியப்பட்டவராகும்படி தம்மை விஜய் சேதுபதி அனுப்பிவைத்தார் என்று சேரனே குறிப்பிடுகிறார். அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளராக வந்த பிறகுதான் இளைய தலைமுறையினரிடத்தில் நன்கு பரவியதாகவும் அதனாலேயே விக்ரம் திரைப்படத்தில் பெருவெற்றி பெற்றதாகவும் கமலஹாசன் கணிக்கப்படுகிறார். இந்தப் பக்கம் ஹிப்ஹாப் ஆதி என்கிறார்கள், ஆர்ஜே பாலாஜி என்கிறார்கள், இன்னொரு புறத்தில் சின்ன சின்ன இளைஞர்கள் புதிய திரைப்படங்களை இயக்கிக்கொண்டிருக்கிறார்கள். இன்றைய இளைய தலைமுறையினரின் நினைவில் பாரதிராஜா, பாக்கியராஜ் போன்றோர் யார் என்றே கணிக்க முடியவில்லை.
அண்மையில் சென்னைப் புத்தகத் திருவிழாக் கூடாரத்தில் பத்து நாள்கள் விழுந்துகிடந்தேன். எழுத்திலும் பழைய புனைகதையாளர்களின் செல்வாக்கு மெல்ல மங்கிக்கொண்டிருந்தது. அமேசான் படினியில் வெளியிடுவதற்கென்று குடும்பக் கதைகள் எழுதுவோர் எத்தனை நூற்றுவர் என்று யாராவது கணக்கெடுக்கலாம். எப்போதும் சக்கைப்போடு போட்ட எழுத்தாளர்களின் நூல் விற்பனை திடுமெனக் குறைந்துள்ளனவாம். புனைவல்லாத நூல்களின் விற்பனை பளபளக்கிறது. இவ்வாண்டு நான்கு புதிய புதினங்களை வெளிக்கொணர்கிறோம் என்று எந்தப் பதிப்பாளரும் இறுமாப்பாக இனி அமர்ந்திருக்க இயலாது. புனைவு நூல்களின் நேரத்தைக் காணொளிக் களங்கள் கைப்பற்றிக்கொண்டன. இளையோர் திரள் பல திறத்திலுமான புத்தகங்களை அள்ளிச் செல்வதையும் கண்ணாரக் கண்டேன்.
இதுநாள்வரையிருந்த இளையோர் உலகம் இப்போதில்லை. நம் இளமையோடு தொடர்புபடுத்தி அவர்களை விளங்கிக்கொள்ளக்கூடாது என்பது நான் பெற்ற முதல் படிப்பனை. இன்றைய இளையவர்கள் முற்றிலும் புதிதான வாழ்க்கைச் சூழலில் இறக்கிவிடப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய கல்வி வாழ்க்கை, நட்புச்சூழல், பொழுதுபோக்கு, ஈடுபாடு, மனப்பாங்கு, பணிமுறை, உலகப்பார்வை என அனைத்தும் முற்றிலும் புதியனவாக இருக்கின்றன. நாம் ஏறிவந்த ஏணி வரிசைப்படி இவர்களுடைய ஏற்றச்செயல்கள் இல்லை.
எல்லாமே இத்தகைய மாறுபாடுகளையும் புதுமைகளையும் கொண்டிருக்கும்போது இன்றைய இளைஞர்கள் பயன்படுத்தும் தமிழ்மொழி மட்டும் தப்பித்துவிடுமா, என்ன ?
(தொடரும்)