'கோழிக்கறி, முட்டை உண்பதால் பறவைக் காய்ச்சல் பரவாது. ஆனால்...'- மருத்துவர் வழிகாட்டுதல்கள்

'கோழிக்கறி, முட்டை உண்பதால் பறவைக் காய்ச்சல் பரவாது. ஆனால்...'- மருத்துவர் வழிகாட்டுதல்கள்
'கோழிக்கறி, முட்டை உண்பதால் பறவைக் காய்ச்சல் பரவாது. ஆனால்...'- மருத்துவர் வழிகாட்டுதல்கள்
Published on

'முட்டையை பச்சையாக குடிப்பதையோ, அரைவேக்காடாக உண்பதையோ தவிர்க்க வேண்டும். நன்றாக வேகவைக்கப்பட்ட / க்ரில் செய்யப்பட்ட / பார்பெக்யூ செய்யப்பட்ட / பொறிக்கப்பட்ட மாமிசத்தில் வைரஸ் முழுமையாக அழிக்கப்பட்டுவிடும்.'

கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், 'ஏவியன் இன்ஃப்ளுயன்ஸா' எனப்படும் பறவைக் காய்ச்சல், தற்போது பரவத் துவங்கியுள்ளது. இது பல மாநிலங்களில் பரவி இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் கோழிக்கறி, முட்டை சாப்பிடுவதால் பறவைக் காய்ச்சல் பரவுமா என்பது குறித்து அசைவப் பிரியர்களிடையே சில சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து விளக்குகிறார் அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

‘’இந்தியாவில் கேரளா, ஹரியானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பறவைகளிடையே ஏவியன் இன்ஃப்ளூயன்சா வைரஸ் தொற்று பரவி, பறவைகளிடையே மரணங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இதுவரை மனிதர்களுக்குப் பரவவில்லை. எனினும் 1997ஆம் வருடம் ஹாங்க் காங் நாட்டில் பறவை இனத்தில் இருந்து மனித இனத்திற்கு H5N1 வகை இன்ஃப்ளூயன்சா தொற்று பரவிய 18 பேரில் 6 பேர் மரணடைந்தனர். தற்போது இந்தியாவில் பரவலாக காணப்பட்டு வரும் வைரஸ் வகை H5N8 ஆகும். இது மனிதர்களிடம் பரவி நோய் தொற்றை இதுவரை ஏற்படுத்தியதில்லை.

கோழி மற்றும் பறவை இனங்களின் மாமிசங்களையும் முட்டையையும் கையாள்பவர்கள் சமைத்து முடித்த பின் நன்றாக சோப் போட்டுக் கை கழுவிவிட வேண்டும். கட்டாயம் மாமிசத்தை நன்றாக வேகவைத்து உண்ண வேண்டும். முட்டைகளை அரைவேக்காடாக உண்பதை தவிர்க்க வேண்டும். நன்றாக சமைக்கப்பட்ட மாமிசத்திலும் முட்டையிலும் இந்த வைரஸ்கள் கொல்லப்பட்டு விடும்.

எனவே கோழிக்கறி, வாத்துக்கறி, கோழி மற்றும் இதர பறவை முட்டைகள் மூலம் இந்தப் பறவைக் காய்ச்சல் பரவும் என்று யாரேனும் வதந்தி பரப்பினால் அவற்றை நம்பாதீர்கள். அதை பரப்பவும் செய்யாதீர்கள்

முட்டையை பச்சையாக குடிப்பதையோ, அரைவேக்காடாக உண்பதை மட்டும் தவிர்த்துக்கொள்ளுங்கள். நன்றாக வேகவைக்கப்பட்ட / க்ரில் செய்யப்பட்ட / பார்பெக்யூ செய்யப்பட்ட / பொறிக்கப்பட்ட மாமிசத்தில் வைரஸ் முழுமையாக அழிக்கப்பட்டுவிடும். எனவே, முட்டைகளையும் கோழிக்கறி வாத்துக்கறி போன்றவற்றை எப்போதும் போல உண்பதில் பிரச்சனை இருக்காது’’ என்கிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com