பெருவெடிப்புக்குப் பிறகான புவியின் அமைதியைப்போல, காட்டாற்று வெள்ளத்துக்குப் பிறகு சலனமற்று ஓடும் நதியைப்போல புன்னகையை மட்டுமே வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறாள் 'புல்புல்'. வாழ்வின் அனைத்து விகாரங்களையும் பார்த்தவள்; அவளின் அந்த போலிப்புன்னகைக்குப் பின், ஓராயிரம் ஆண்டுகளாக ஒடுக்குமுறைக்கு உள்ளான பெண்களின் வலி மறைந்து கிடக்கிறது; கண்ணீர் முட்டிக்கொண்டு எட்டிப் பார்க்கிறது. இனியும் வீணாக கண்ணீர் சிந்த அவள் தயாராக இல்லை. நீரில் அழுத்தப்படும் பந்து, அழுத்தும் வேகத்தில் மேலேழுவதைப்போல ஒடுக்குமுறைகளை சில்லுசில்லாக உடைக்கும் காத்திரமான படைப்புதான் 'புல்புல்' (Bulbul)
கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைக்கு திருமண முடிச்சு போடப்படுகிறது. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. தனது தந்தை வயதுடைய ஒருவருடன் வாழ நிர்பந்திக்கப்படுகிறாள்; கூடவே அவளின் கனவுகளும், உணர்வுகளும் நிர்மூலமாக்கப்படுகின்றன. வேதனைகளை அனுபவித்தவள் ஒருகட்டத்தில் சாம்பலிலிருந்து தன்னை உயிர்ப்பித்து எழும் ஃபீனிக்ஸைப்போல மீண்டெழுவதை ஒரு கவிதையாக்கி காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் அன்விதா டட். 'ஹாரர்' பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் மேற்கு வங்கத்தைக் களமாகக் கொண்ட இந்த இந்திப் படத்தில் 'ஹாரர்' என்பது வெறும் காட்சிமொழி மட்டுமே. படத்தில் அதையும் தாண்டி ஆழமான கருத்துகள் நிறையவே புதைந்திருக்கின்றன.
பிரசார பாணியில் இல்லாமல் சின்னச் சின்ன குறியீடுகள் மூலமாக, தான் சொல்ல நினைக்கும் கருத்தின் கனத்தை உணர்த்தியிருக்கிறார் அன்விதா டட். பெண்களின் விருப்பமான பிங்க் நிறத்துடன் எதிர்ப்பரசியலின் சிவப்பு நிறத்தை கலந்து பல பக்கங்கள் எழுத வேண்டிய வசனங்களை ஒரு சின்ன காட்சியின் மூலம் அவ்வளவு அழகாக உணர்த்தியிருக்கிறார். படத்தில் நிறங்களுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. புல்புல்லின் சோகத்தை விவரிக்கும் வகையில் சாம்பல் நிற வண்ணமும், கணவர் இறந்துவிட்டதை உணர்த்தும் வகையில் அவரது அண்ணி வெள்ளைப் புடவை அணிந்திருப்பது என பரவலாகவே நிறங்களைக்கொண்டு குறியீடுகள் உணர்த்தப்பட்டுள்ளது.
புல்புல்லின் காலில் மெட்டி அணிவிக்கப்படுகிறது. 'இது எதுக்கு?' என அப்பாவித்தனமாக கேட்கிறாள். ''நம் கால் விரலில் ஒரு நரம்பு இருக்கும். அதை மெட்டி போட்டு அழுத்தாமல் விட்டால், பெண்கள் பறந்து போய்விடுவார்கள்'' என்று அத்தை பதில் அளிப்பார். வெறுமனே மெட்டி அணியும் அந்தக் காட்சியில் அத்தனை கனம் தொக்கி நிற்கிறது. மெட்டி என்பது திருமணத்துக்கான குறியீடாக பாரக்கப்படும் சமூகத்தில், திருமணமே பெண்ணை அடிமைப்படுத்தும் சடங்காக விவரிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஆபரணங்களுக்காக அவளின் உணர்வுகள் அடகு வைக்கப்படுவதையும் அந்த மெட்டி காட்சி அழகாக விவரிக்கிறது.
'இது ஒரு ஜமீன்தார் குடும்பம்; கௌரவமானது. இங்கு நடக்கும் தப்பையெல்லாம் வெளியே சொல்லாத; உனக்கு தேவையான ஆபரணம், பணம் எல்லாமே இருக்கு' என புல்புல்லிடம் விவரிக்கப்படுகிறது. காலங்காலமாக குடும்ப கௌரவங்கள் பெண்களின் மீது தான் சுமத்தப்படுகிறது என்பதையும், அதை சுமப்பவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருக்கிறார்கள் என்பதையும் அழுத்தமாக முன்வைக்கிறது படம்.
'யு ஆர் ஆல் சேம்' என ஆணாதிக்கத்தை காறி உமிழ்கிறாள் புல்புல். லண்டன் சென்று திரும்பி வரும் தனது கணவரின் சகோதரன் சத்யாவால் கூட, தனது அண்ணி மற்ற ஆணிடம் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 'பேய் எதுவுமில்லை' என முற்போக்காக பேசும் அவரிடம், பெண்கள் குறித்து பார்வை மங்கி கிடக்கிறது. தேவதைகள் பொய்களின் உலகில் வளர்க்கப்படுவதை படம் நமக்கு உணர்த்துகிறது. நகைகள் மற்றும் புடவைகள் பெரிய மாளிகைகளில் பெண்களை கூண்டில் அடைப்பதற்கான ஆணாதிக்கத்தின் கவர்ச்சிப் பொருட்கள் என்பதை நிறுவுகிறது 'புல்புல்'.
படத்தின் திரைக்கதையும், மேக்கிங்கும் வெகுவாகவே ஈர்க்கிறது. நுணுக்கமான காட்சிகளும், உருவகங்களும் நிறையவே இருக்கிறது. 19-ம் நூற்றாண்டின் தொடக்கில் நடக்கும் கதை மேற்கு வங்கத்தில் அன்றைய பழைமைவாதத்தையும் சேர்த்தே காட்சிப்படுத்தியிருக்கிறது. புல்புல் கதாபாத்திரத்தில் நடித்திருகும் திரிப்தி திம்ரி (Tripti Dimri) படம் முழுக்க நிறைந்திருக்கிறார். அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். புதிரான புன்னகைக்கு பின்னால் இருக்கும் வலியையும், ஏக்கத்தையும், அழுகையையும் கண்களாலேயே கடத்துக்கிறார். கணவராக வரும் ராகுல் போஸ் ஜமீன்தாருக்கான ஏகப்பொருத்தம். அவினாஷ் திவாரி, பஹோலி தாம் ஆகியோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
சித்தார்த் திவானின் கேமராவும், அமித் திரிவேதியின் இசையும் படத்தை தாங்கியிருக்கிறது. ஹாரர் காட்சிகளில் பிண்ணனி இசையால் அலரவிடுகிறார். காட்சியால் உணர்வுகளை கடத்த சித்தார்த் திவானின் கேமிரா பெரிதும் உதவியிருக்கிறது. பாலிவுட்டின் தவிர்க்கமுடியாத படத்தை உருவாக்கியிருக்கும் விதத்தில் அன்விதா டட்டுக்கு பாராட்டுகள். ஆனால் அதே சமயம், இந்தப் படத்தை ஹாரர் ஜானரில் இயக்கவேண்டிய அவசியமும் எழுகிறது. அதேபோல, அமானுஷ்யத்துடன் இணைத்து கட்டுக்கதைகளை ஊக்கப்படுத்தும் வகையில் படமாக்கப்பட்டிருக்கும் விதம் தேவைதானா என்று தோன்ற வைக்கிறது.
அதேவேளையில், 19-ம் நூற்றாண்டு களத்தில் இந்தியப் பெண்களின் நிலை இப்போது எப்படி மாறியிருக்கிறது, நமக்குத் தெரிந்த இன்றைய புல்புல்களின் வெளிப்பாடுகள் எத்தகையது என்பதையெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டால் பாலின சமத்துவம் குறித்து நமக்குள் ஒருவித தெளிவு பிறக்கலாம்.
2020-ல் வெளிவந்த 'புல்புல்' இப்போது நெட்ஃப்ளிக்ஸ் ஹிட்களில் ஒன்று. வழக்கத்துக்கு மாறான திரை அனுபவத்தை நாட விரும்புவோருக்கு இப்படம் செம்ம தீனி.
-கலிலுல்லா