வாக்குப்பதிவு மையங்களுக்கு சக்கர நாற்காலியில் விரைந்த மம்தா... என்ன நடந்தது நந்திகிராமில்?

வாக்குப்பதிவு மையங்களுக்கு சக்கர நாற்காலியில் விரைந்த மம்தா... என்ன நடந்தது நந்திகிராமில்?
வாக்குப்பதிவு மையங்களுக்கு சக்கர நாற்காலியில் விரைந்த மம்தா... என்ன நடந்தது நந்திகிராமில்?
Published on

வாக்குப்பதிவு மையங்களை பாரதிய ஜனதா கட்சியினர் கைப்பற்றிவிட்டார்கள் எனக் கூறி, வாக்குப்பதிவு மையங்களுக்கு சக்கர நாற்காலியில் முதல்வர் மம்தா பானர்ஜி செல்ல, மேற்கு வங்க தேர்தல் களத்தில் பதற்றம் தொற்றிக்கொண்டது. என்ன நடந்தது நந்திகிராமில்? - முழு விவரம் இதோ...

எட்டு கட்டங்களாக நடைபெறும் மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

முதல்கட்ட தேர்தலின்போது குண்டுவெடிப்பு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் ஏற்படவே, இந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்காக கூடுதல் பாதுகாப்பானது வழங்கப்பட்டிருந்தது. குறிப்பாக, முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் 144 தடை உத்தரவு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

காலை 11 மணி வரை ஓரளவிற்கு அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்த நிலையில், திடீரென திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பல்வேறு புகார்களை சொல்லத் தொடங்கினர்.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மவுஹா மொய்த்ரா, டெரிக் ஓ பிரைன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நந்திகிராம் தொகுதியில் வாக்குச்சாவடி மையங்களில் பெண்கள் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டு, இந்த வாக்குச்சாவடி மையங்களில் எல்லாம் பாரதிய ஜனதா கட்சியினர் கைப்பற்றி விட்டதாகவும், உள்ளூர் ரவுடிகளை கொண்டு தேர்தலுக்கு அச்சுறுத்தல் செய்து வருவதாகவும் புகார்களை தெரிவித்தனர்.

இதனையடுத்து நந்திகிராமில் உள்ள தனது வீட்டில் இருந்த மம்தா பானர்ஜி மதியம் ஒரு மணி அளவில் தனது காரில் தொகுதியிலுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் ஆய்வு செய்ய கிளம்பினார்.

போயோல் என்ற பகுதியில் ஏழாவது எண் வாக்குச்சாவடி மையத்தில் அவர் ஆய்வுக்கு சென்றபோது அங்கிருந்த பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷங்களை எழுப்பினர். இதனை அடுத்து அங்கிருந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் மோதலில் ஈடுபடும் சூழல் உருவானது.

இருப்பினும் அங்கிருந்தபடியே அம்மாநில ஆளுநருக்கு அலைபேசியின் வாயிலாக தொடர்பு கொண்ட மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் வெளிப்படையான முறையில் தேர்தல் நடைபெறவில்லை என்றும், காலையிலிருந்து 63 புகார்களை தெரிவித்தும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது என்றும் புகார் கூறினார்.

"வாக்குச்சாவடி மையங்களுக்கு அருகில் கூட்டமாக யாரும் இருக்கக் கூடாது என்ற உத்தரவை இருந்தும்கூட, இங்குள்ள அடியாட்கள் மதரீதியிலான கோஷங்களை எழுப்பியும் வாக்களிக்க வருபவர்களை அச்சுறுத்தியும் வருகிறார்கள். இவர்கள் அனைவரும் பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் இருந்து வந்திருக்கிறார்கள். இவர்களை அப்புறப்படுத்த வேண்டிய தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மத்திய பாதுகாப்பு படையினர், இந்த ரவுடிகளை பாதுகாப்பாக மாறியிருக்கிறார்கள். சில இடங்களில் மத்தியப் பாதுகாப்பு படையினர் பொதுமக்கள் வாக்களிக்க விடாமல் தடுக்கிறார்கள்" என்ற பல அதிர்ச்சி குற்றச்சாட்டுகளை அவர் அடுக்கியிருக்கிறார்.

மேலும், "150-க்கும் அதிகமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காலையில் இருந்து சரியாக செயல்படவில்லை என்ற புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இவை எதையும் தேர்தல் ஆணையம் சரி செய்யாமல் தொடர்ந்து தேர்தலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எனவே விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர்தல் நடத்துவதை உறுதிசெய்ய வேண்டும்" என்று ஆளுநரிடம் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

இதே நிலைமை தொடர்ந்தால் தேர்தல் ஆணையமும் பாரதிய ஜனதா கட்சியின் கைப்பாவையாக மாறிவிட்டதை சுட்டிக்காட்டி, நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

மிக வெளிப்படையான குற்றச்சாட்டை மம்தா பானர்ஜி வெளியிட்டிருப்பது, நந்திகிராம் தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இவை ஒரு புறமிருக்க, பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரான சுரேந்தர் அதிகாரி 'திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள்தான் பொதுமக்களையும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வேட்பாளர்களையும் வாக்களிக்கச் செல்ல விடாமல் தடுத்தனர். வாகனங்களை அடித்து வன்முறையில் ஈடுபட்டனர்" என்று குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னதாக, நந்திகிராம் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருந்தார். இந்த தகவலும் பல்வேறு வதந்திகளுடன் பரவ, பெரும் மோதல் உருவாகும் சூழல் இருந்தது. இதற்கிடையில், மம்தா பானர்ஜி இந்த அதி முக்கிய குற்றச்சாட்டுகள் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சில இடங்களில் பழுதானது உண்மைதான் என்றும், ஆனால் அது உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டது என்றும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இப்படி கடும் குற்றச்சாட்டுகளும் பரபரப்புகளுக்கு மிடையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

- நிரஞ்சன் குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com