மெய்யான கிரிக்கெட் ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் கிரிக்கெட் விளையாட்டின் அசல் வடிவமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என்றாலே அலாதி பிரியம். அதிலும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி என்றால் சொல்லவே வேண்டாம். அந்த டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பு இருக்கும். தென் ஆப்பிரிக்க நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி கூட ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.
பாக்சிங் டே டெஸ்ட்?
கிறிஸ்துமஸ் திருநாளுக்கு அடுத்த நாளான டிசம்பர் 26-ஆம் தேதியை பிரிட்டன் உட்பட காமன்வெல்த் நாடுகள் சில பாக்சிங் டே நாளாக கொண்டாடுகின்றன. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. தேவாலயங்களில் உள்ள ஆதரவற்றோருக்கான நன்கொடை பெட்டிகள் திறக்கும் தினத்தை குறிப்பது. அல்லது வீடுகளில் பணியாற்றும் பணியாட்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு வழங்குகின்ற தினம் எனவும் இந்த நாள் சொல்லப்படுகிறது.
மறுபக்கம் புனித ஸ்டீபனின் ஃபிஸ்ட் டே (Feast Day) என்பதாலும் பிரிட்டன் உட்பட பல்வேறு உலக நாடுகளில் இந்த நாளை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கமாம். அந்த வகையில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளில் ‘பாக்சிங் டே’ கொண்டாட்டத்தின் ஒரு அம்சமாக அன்றைய தினம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.
மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானம்!
‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டி என்றாலே எல்லோர் மனதிலும் சட்டென நினைவுக்கு வருவது ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானம் தான். கடந்த 1950 முதல் இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பல்வேறு சர்வதேச கிரிக்கெட் அணிகளுடன் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. 1913-இல் தொடங்கி இன்று வரை தென் ஆப்பிரிக்க நாட்டில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1998 முதல் நியூசிலாந்து நாட்டிலும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டு வருவதாக தேரவிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே நாட்டிலும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த நீண்ட நெடிய வரலாற்று பின்புலம் கொண்ட கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்து அணியும் மெல்பேர்ன் மைதானத்தில் முதன்முதலில் மோதி விளையாடின. இதுவரை சுமார் 45 ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற்றுள்ளன.
சில ஆண்டுகள் வெவ்வேறு காரணங்களால் போட்டி மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்படாமல் போயுள்ளது. ஆஸ்திரேலிய அணி 25 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. பத்து போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. மீதமுள்ள போட்டிகளில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து நாடுகளிலும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டு வந்தாலும் மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் காலம் காலமாக நடைபெற்று வரும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி மிகவும் சிறப்பு வாய்ந்தது.
கடந்த 2013 வாக்கில் மெல்பேர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடிய ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியை பாக்சிங் டே தினத்தன்று 91,112 பேர் நேரில் கண்டு ரசித்திருந்தனர்.
இந்தியாவும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியும்!
இந்திய கிரிக்கெட் அணி 1985, 1991, 1999, 2003, 2007, 2011, 2014, 2018 மற்றும் 2020 என ஒன்பது முறை மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளது.
அதில் 2 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் சமனும் செய்துள்ளது இந்தியா. அந்த இரண்டு வெற்றிகளும் கடந்த 2018 மற்றும் 2020 சுற்று பயணத்தின் போது இந்தியா பெற்றிருந்தது. 2018-இல் 137 ரன்கள் வித்தியாசத்திலும், 2020-இல் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றிருந்தது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியுடன் செஞ்சூரியன் கிரிக்கெட் மைதானத்தில் 26 முதல் 30-ஆம் தேதி வரையில் விளையாடுகிறது. அதே போல இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டியில் மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 26 முதல் 30-ஆம் தேதி வரையில் விளையாடுகின்றன.
முந்தைய அத்தியாயம்: 'கிரிக்'கெத்து 14 : சச்சின் டெண்டுல்கரின் டாப் 5 ஒருநாள் இன்னிங்ஸ்!