பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி வீரர் அக்ஷர் படேல் சிறந்த வீரராகப் பேசப்படுகிறார்.
பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் நடைபெற்றுவரும் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும், 3வது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி கண்டது. தொடரில் முன்னிலை வகித்தாலும் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற 4வது போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது. அதன்படி, 4வது மற்றும் கடைசி போட்டி அகமதாபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 480 ரன்களையும், இந்திய அணி 571 ரன்களையும் எடுத்தன. 2வது இன்னிங்சில் நான்காம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் ஒரு நாள் ஆட்டமே மிஞ்சியுள்ளது. ஆகையால் இப்போட்டி டிராவை நோக்கிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனி ஒருவனாய் நின்ற அக்ஷர் படேல்
பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் வெற்றியின் நாயகனாகப் பார்க்கப்படுகிறார் அகமதாபாத் மண்ணின் மைந்தனான அக்ஷர் படேல். ஆம், இந்த தொடரில் கடந்த போட்டிகளில் எல்லாம் சீனியர் வீரர்களே சொதப்பிய நிலையில் அக்ஷர் படேல் மட்டும் தனி ஒருவனாய் நின்று அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
நாக்பூர் டெஸ்ட்!
குறிப்பாக நாக்பூரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவின் (120) சதத்திற்குப் பின் அதிக ரன்கள் எடுத்தவர் அக்ஷர் படேல். அவர் ஜடேஜா மற்றும் முகம்மது ஷமி ஆகியோருடன் இணைந்து 84 ரன்கள் எடுத்ததுடன், அணி 400 ரன்கள் எடுக்கவும் வழிவகுத்தார்.
இந்தப் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. இந்த வெற்றிக்கு அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரின் சுழல் பந்துவீச்சுடன், அக்ஷர் படேல் சேர்த்த 84 ரன்களும் பெரும் பங்கு வகித்தது.
டெல்லி டெஸ்ட்!
அடுத்து டெல்லியில் நடைபெற்ற 2வது போட்டியிலும் சீனியர் வீரர்கள் எல்லாம் குறைந்த ரன்னில் (விராட் கோலி மட்டும் அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்தார்) நடையைக் கட்ட, அஸ்வினுடன் அச்சாரமாக நின்று அந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்தவர், அக்ஷர் படேல். அதில் 74 ரன்கள் எடுத்தார். அத்துடன் ஆஸ்திரேலியா அடித்திருந்த ரன்களை நெருங்கவும் வழிகாட்டினார்.
அக்ஷர் படேலுக்குப் பதில் குல்தீப் யாதவ் இறக்க எழுந்த கோரிக்கை
இந்தப் போட்டியிலும் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றிக்கு வித்திட்டனர் என்றாலும், மறுபுறம் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் எடுத்த குறைந்த ரன்களை (113) முன்கள வீரர்களே எடுத்து அணியை வெற்றிபெற வைத்துவிட்டனர். இதனால், 2வது இன்னிங்சில் அக்ஷர் படேலுக்கு பேட் செய்யும் வேலை இல்லாமல் போய்விட்டது. இந்த இரண்டு போட்டிகளிலும் அக்ஷர் படேல் பந்துவீசி 1 விக்கெட்டை மட்டுமே எடுத்திருந்தார்.
இதனால், அடுத்த 2 (3 மற்றும் 4) போட்டிகளுக்கும் குல்தீப் யாதவ் அணியில் இடம்பெற வேண்டும் என்கிற கருத்து வைக்கப்பட்டது. அதன்படி, அவருடைய பெயரும் அணியில் இடம்பெற்றிருந்தது. என்றாலும், இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியிலும் அக்ஷர் படேல் இடம்பெற்றார்.
இந்தூர் டெஸ்ட் - இரண்டு இன்னிங்சிலும் நாட் அவுட்
இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வியுற்றபோதும், முதல் இரண்டு இன்னிங்ஸ்களிலும் குறைந்த ரன்களையே (109, 163) எடுத்தது. இதன் முதல் இன்னிங்சில் கோலி 22 ரன்களையும், 2வது இன்னிங்சில் புஜாரா 59 ரன்களையும் அதிகபட்சமாக எடுத்திருந்தனர்.
இந்த போட்டியில் குக்னீமென் மற்றும் நாதன் லயன் ஆகியோர் சுழலில் இந்திய அணி சிக்கி சிதைந்தபோதும் இந்த போட்டியின் 2 இன்னிங்ஸ்காளிலும் நாட் அவுட் பேட்டராக இருந்தவர் அக்ஷர் படேல் மட்டும்தான். இதில் அவர் முறையே 12 மற்றும் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அத்துடன் இந்திய அணி ஸ்பின்னர்கள் விக்கெட்டுகள் எடுக்காததால் பின்னடைவை சந்திக்கவில்லை. மாறாக பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிக்காததால் தான் 3வது போட்டியில் தோற்றது. எனவே 3வது போட்டியில் தோற்றதற்கும் அக்ஷர் பட்டேலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று சொல்லலாம்.
பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் நாயகன்
இந்த நிலையில், 4வது போட்டியிலாவது குல்தீப் யாதவ் களமிறக்கப்பட வேண்டும் என மீண்டும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், கேப்டன் ரோகித் சர்மா அக்ஷர் படேலுக்கே வாய்ப்பு அளித்தார். அதன்படி, அவருடைய நம்பிக்கையை மீண்டும் காப்பாற்றினார், அக்ஷர் படேல். 4வது போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 571 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 186 ரன்களும், சுப்மன் கில்லும் 128 ரன்களும் எடுத்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விராட் கோலி, டெஸ்டில் 28வது சதம் அடித்தார். இவர்களுக்கு அடுத்து அதிகபட்சமாக, அக்ஷர் படேலும் இறுதியில் களமிறங்கி 79 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி 500 ரன்களைத் தாண்டவும் வழிவகுத்துக் கொடுத்தார். மொத்தத்தில் இதுவரை இந்தத் தொடரில் 264 ரன்கள் குவித்திருக்கும் அக்ஷர் படேல், சராசரியாக 88 ரன்ரேட்டையும் வைத்துள்ளார். இதனாலேயே இந்த தொடரின் நாயனாகப் பேசப்படுகிறார்.
வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திய அக்ஸர்!
அக்ஷர் படேலை அகமதாபாத் போட்டியில் அவசியம் களமிறக்க வேண்டும்; அவருக்கு சொந்தமான இந்த மைதானத்தில் சிறப்பாக விளையாடுவார் என முன்னாள் வீரரான சபா கரீம் அவருக்கு ஆதரவாகப் பேசியிருந்தார். உண்மையில், அவர் பேசியதற்கு உதாரணமாய் கடந்த 2021ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அக்ஷர் படேல் சிறப்பாகச் செயல்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜெ.பிரகாஷ்