பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலர்கள்! தென்காசியில் உருவான திடீர் சுற்றுலாத்தலம்!
தென்காசி மாவட்டத்தில் வாழ்வாதாரத்திற்கு பயிரிடப்பட்ட சூரியகாந்தி மலர்களால் திடீர் சுற்றுலாத்தலமாக மாறிய வயல் வெளிகள் கேரள மக்களால் நிரம்பி வழியத் துவங்கியுள்ளன.
மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள குற்றாலம், தென்காசி மாவட்டத்திலுள்ள பிரபல சுற்றுலாத்தலம். ஆனால் கடந்த சில வாரங்களாக சுரண்டையை சுற்றியுள்ள கிராமங்கள் திடீர் சுற்றுலாத்தலங்களாக மாறியுள்ளன. ஏன் அவை சுற்றுலாத்தலங்களாக மாறின என்பது குறித்து இத்தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
சுற்றுலாத்தலமாக உருவெடுத்த சூரியகாந்தி தோட்டங்கள்:
தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை, சுந்தரபாண்டிபுரம், ஆய்க்குடி உள்ளிட்ட பகுதிகளில் வருடம் தோறும் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை மூன்று மாத காலங்கள் சூரியகாந்தி மலர் பயிரிடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடம் தற்போது சூரியகாந்தி மலர் சுந்தரபாண்டியபுரம், சாம்பவர்வடகரை உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது அந்த மலர்கள் அனைத்தும் பூத்துக் குலுங்கும் நிலையில், சூரியகாந்தி மலரின் கொள்ளை கொள்ளும் அழகை பார்ப்பதற்காக ஏராளமான கேரளா மாநிலத்தவர்கள் சுந்தரபாண்டியபுரம், சாம்பவர்வடகரை உள்ளிட்ட பகுதிகளுக்கு வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்.
குற்றாலத் தென்றல்... மஞ்சள் மலர்களுக்கு நடுவே ஒரு செல்ஃபி!
கடந்த மூன்று மாத காலமாக நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான கேரள மாநிலத்தவர்கள் வந்து செல்லும் சூழலில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அளவுக்கு அதிகமான மக்கள் சூரியகாந்தி மலர்களை காண்பதற்கும் அம்மலர்க்கூட்டம் நடுவில் செல்ஃபி எடுப்பதற்கும் படையெடுத்த வண்ணம் உள்ளனர். குற்றாலத் தென்றல் காற்றுடன் மஞ்சள் கொஞ்சும் சூரியகாந்தி மலர்களுக்கு நடுவே ஒரு செல்ஃபி எடுக்கத்தான் இத்தனை தூரம் பயணித்து இங்கு வருகின்றனர் கேரள மாநிலத்தவர். இதனால் சுற்றுலாத்தலம் போல காட்சியளிக்கும் இந்த பகுதியில் வியாபாரமும் தற்போது களைகட்ட தொடங்கி உள்ளது.
களைகட்டும் காய்கறி வியாபாரம் - மகிழ்ச்சியில் விவசாயிகள்:
பொதுவாக கேரளா மாநிலத்திற்கு, தமிழகத்தில் இருந்துதான் காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் கேரளாவில் காய்கறிகள் விலை அதிகமாகவே காணப்படும். இந்த சூழலில், சூரியகாந்தி மலரை பார்ப்பதற்காக தமிழகத்திற்கு வருகை தந்துள்ள கேரள மாநிலத்தவர்கள் சூரியகாந்தி மலரை பார்த்துவிட்டு வயல்வெளிகளில் இருந்து நேரடியாக அறுவடை செய்து விற்பனையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளிடம் காய்கறிகளை வாங்கி சென்று வருகின்றனர். இதனால் அந்தப் பகுதி விவசாயிகளுக்கு அதிக விலை கிடைப்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஆனால் கவலையில் சூரியகாந்தி விவசாயிகள்! ஏன்?
காய்கறிகள் விவசாயம் செய்தவர்கள் மகிழ்ச்சியில் இருக்கும்போது, சூரியகாந்தி மலரை பயிரிட்டுள்ள விவசாயிகளோ சற்று கவலையில் உள்ளனர். ஏனென்றால், மலரை பார்க்க வரும் பொதுமக்கள் வயல்வெளிக்குள் காலணி அணிந்து சென்று மலரை தொட்டுப் பார்ப்பதால் மலர்களின் விளைச்சல் பாதிக்கப்படுவதாகவும், மண்ணின் தன்மை இறுகுவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
செல்ஃபி எடுக்க டோக்கன்! வசூல் மழையில் சூரியகாந்தி விவசாயிகள்!
ஒரு சில விவசாயிகள் சூரியகாந்தி மலரால் ஏற்படும் வருமானத்தை விட, மலரை காண வந்தவர்களிடம் வருமானம் ஈட்ட முடிவு செய்து ஒரு சில வயல்வெளிகளை சேர்ந்த விவசாயிகள் டோக்கன் போட்டு டோக்கன் ஒன்றுக்கு ரூபாய் 20 வீதம் வசூல் செய்து மலரை காண அனுமதி வழங்கி வருகின்றனர். இப்படி வசூல் செய்வதால் பொதுமக்களால் மலர்கள் பாதிப்படையும் நஷ்டத்தை ஈடு செய்ய முடியும் என்கின்றனர் விவசாயிகள்.
வாகன நெரிசலை தீர்க்க களமிறங்கிய போலீசார்!
அதேபோல் ஆய்க்குடி பகுதியில் இருந்து சாம்பவர் வடகரை செல்லும் சாலையிலும், சுந்தரபாண்டியபுரம் பகுதியில் இருந்து சுரண்டை செல்லும் சாலையிலும் அளவுக்கு அதிகமான கேரள மாநிலத்தவர்கள் நான்கு சக்கர வாகனங்களில் வந்து அங்கு வாகனங்களை நிறுத்துவதால் உள்ளூர் வாசிகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாமலும் விளைநிலங்களில் அறுவடை செய்த பயிர்களை மார்க்கெட் பகுதிக்கு கொண்டு செல்ல முடியாத சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் ஒரு சில இடங்களில் உள்ளூர் வாசிகளுக்கும், கேரள மாநிலத்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட சூழலில் தற்போது அந்த பகுதியில் போலீசார் வாகன நெரிசலை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- சுந்தரமகேஷ், ச.முத்துகிருஷ்ணன்.