”பெண்கள் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது தொடர்பாக, மத்திய அரசு பொதுமக்களிடம் கருத்துக் கேட்கவில்லை என்று எதிர்கட்சிகள் கூறுவது தவறான பரப்புரை. பல்வேறு, நிலைகளில் கருத்துகளைக் கேட்டும்... உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொரடப்பட்டதாலும்தான் இந்தச் சட்டம் வருகிறது. ஏற்கனவே, திருமண வயதை உயர்த்தச் சொல்லி பல்வேறு அமைப்பினர் போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது எதிர்கட்சிகளுக்கு தெரியாதா?” என்று கேள்வி எழுப்புகிறார் சட்டமன்ற உறுப்பினர், பாஜக மகளிர் அணியின் தேசியத் தலைவர் வானதி சீனிவாசன். தொகுதி பிரச்னைகள், தேசியளவிலான கருத்தரங்குகள் என இந்தியா முழுக்க பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கும் வானதி சீனிவாசனிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்…
ஒரு தாய்... வழக்கறிஞர்... சட்டப்பேரவை உறுப்பினர், பாஜக தேசிய மகளிர் அணியின் தலைவர் என ’ஒன் உமன் ஆர்மியா’ எப்படி இயங்க முடிகிறது?
”எனக்கு இந்த எல்லாமாகவும் இருக்கப் பிடிப்பதால், அனைத்தையும் சின்சியராக பண்ண நினைக்கிறேன். அதனால், எல்லா பணிகளுமே சிறப்பாகப் போகிறது. எந்தெந்தப் பணிகளுக்கு எப்போது முக்கியத்துவம் இருக்கிறதோ, அதற்கான நேரத்தை சரியாக திட்டமிட்டு பகிர்ந்துகொள்கிறேன். இதில், அதிக நேரத்தை ஒதுக்குவது என் தொகுதிக்காகத்தான். வாட்ஸப் மூலமாகவே புகார்களை அனுப்ப வசதி செய்துள்ளேன். அப்படி வரும் பிரச்னைகளை தீர்த்து வைக்கின்றேன். கோவையில் இருக்கும்போது காலையிலிருந்து இரவு வரை அதிகாரிகளை நேரில் போய் பார்க்கிறேன். அங்கன்வாடி மையங்களுக்குச் சென்று கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் சரியான பராமரிப்பு கிடக்கிறதா என்பதை ஆய்வு செய்கிறேன். அதோடு, மருத்துவம், பள்ளிகளின் தேவைகள் என தொகுதியின் மொத்தப் பிரச்னைகளும் சரிசெய்யப்பட்டு வருகின்றது. அனைத்தும் வெளிப்படையாக இருக்கவேண்டும் என்பதற்காக, இப்போதுகூட தொகுதி மேம்பாட்டு நிதியை எப்படி செலவழிக்கலாம் என்று மக்களிடம்தான் கேட்டுள்ளேன்”.
பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதற்கு சமூக செயற்பாட்டாளர்களும் எதிர்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே?
”பெண்களின் திருமண வயதை உயர்த்துவதில் முக்கியமாக மூன்று விஷயங்களைப் பார்க்கவேண்டும். முதலாவதாக இச்சட்டம் சமூகத்தின் பழக்க வழக்கங்களிலும் பெண்களின் உரிமைகளிலும் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும்.
இரண்டாவதாக, பெண்களின் உடல்நலன் சார்ந்து மருத்துவ ரீதியாக இச்சட்டத்தைப் பார்க்கவேண்டும். சமீபத்தில் தேசிய சுகாதார மையத்தின் சர்வே பெண்கள் தங்கள் உடல்நிலையை மேம்படுத்திக்கொள்ள அரசின் ஜன்தன் வங்கிக்கணக்கு, போஷன் அபியான் போன்ற பல்வேறு திட்டங்களை சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்தத் திட்டங்களால் 21 வயதிற்குமேல் திருமணம் செய்யும் பெண்கள் கூடுதலாக பயனடைவார்கள். குறிப்பாக, பெண்கள் சிறு வயதில் கர்ப்பம் தரிப்பது தவிர்க்கப்பட்டு ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும். ஆரோக்கியமில்லாத குழந்தைகள் ஒட்டுமொத்த தேசத்திற்கே சுமையாக மாறுகிறார்கள். குழந்தைகளின் ரத்தசோகை உள்ளிட்டப் பல்வேறு பிரச்னைகளுக்கு அரசு அதிக தொகையை செலவிடவேண்டியதில்லை. மருத்துவ ரீதியாகவும் திருமண உயர்வு பலன் அளிக்கிறது.
மூன்றாவது பொருளாதார ரீதியாகவும் இதனை அணுகவேண்டும். 21 வயதில் உலக விஷயங்களைப் புரிந்துகொள்ளவும் சொந்தமாக முடிவு எடுப்பதற்கும் பொருளாதார தேவைகளை நிறைவேற்றவும் பெண்ணின் கல்வி துணைபுரிகிறது. திருமண வயது 18 ஆக இருக்கும்போது நாம் பொருளாதாரத்தோடு தொடர்புபடுத்திப் பார்த்தால் பெண்கள் கல்லூரி படிப்பைக்கூட அந்த வயதில் முடித்திருக்க மாட்டார்கள். அதுவே, 21 வயதுதாக இருக்கும்போது ஒரு பட்டப்படிப்பு, வேலை என்று சுயமாக இருப்பார்கள். ஆகப் பெண் பொருளாதார ரீதியாவும் முன்னேற இந்த வயது உயர்வு பயன்படுகிறது. இந்த மூன்று விஷயங்களை அடிப்படையாகப் பார்த்து அரசின் முடிவை அனைவரும் வரவேற்கத்தான் வேண்டும். நீண்ட நாட்களாக இருந்த இந்தக் கோரிக்கை தற்போது சட்டமாக்கப்படுவதில் சந்தோஷமாக உள்ளது.”
ஆனால், எதிர்கட்சியினரை ஆலோசிக்காமல் பெண்களின் வயதை உயர்த்துவதாக கனிமொழி எம்.பி குற்றம் சாட்டியிருக்கிறாரே?
“ஒவ்வொரு சட்டத்தையும் கொண்டு வருவதற்குத்தான் பாராளுமன்றத்திற்கு எம்.பிக்களை தேர்ந்தெடுத்து அனுப்புகிறார்கள். சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு முன்பு ஆலோசிக்கவில்லை என்று கனிமொழி சொல்கிறார். ஆனால், அவரது சகோதரர் தமிழகத்தில் எத்தனை சட்டத்தை எங்களிடம் ஆலோசித்துவிட்டுக் கொண்டு வருகிறார்? ”.
பெண்களின் திருமண வயது உயர்வால் போக்சோ சட்டத்தில் அதிகம்பேர் பாதிக்கபடுவார்கள் என்று சொல்லப்படுகிறதே?
“பெண்களுக்கு பாலியல் ரீதியாக இருக்கக்கூடிய தொந்தரவுகள் எந்த வயதில் இருந்தாலும் அதனைத் தடுக்கத்தான் வேண்டும். வயது என்பது பாலியல் வழக்குகளுக்கு ஒரு குறியீடு அல்ல. ஆகவே, இந்த சட்டத்தின்மூலம், திருமண ரீதியிலான பாலியல் துன்புறுத்துதல்களையும் கட்டுக்குள் கொண்டு வரமுடியும்”.
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கேட்பதற்கு கொடுக்காமல் வயதை மட்டும் உயர்த்துகிறீர்கள் என்கிறார்களே?
”நாங்கள் கூட சொல்கிறோம். ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு திமுக 1000 ரூபாய் கொடுப்போம் என்றார்கள். ஏன் இன்னும் கொடுக்கவில்லை? அதனால், எவற்றை எப்போது நிறைவேற்ற வேண்டுமோ அவற்றை சரியான நேரத்தில் செய்துகொண்டுதான் இருக்கிறோம்”.
இந்த வயது உயர்வு இஸ்லாமியர்களின் மக்கள்தொகையை கட்டுப்படுத்தவும், பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்காவும்தான் என்று சொல்லப்படுகிறதே?
”பொது சிவில் சட்டம் என்பது பாஜக கொண்டு வந்தது அல்ல. நமது அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் கனவு பொது சிவில் சட்டம். அதனால், பெண்களின் ஆரோக்கியம், பெண்களின் முன்னேற்றம் குறித்துப் பேசுகின்றபோது மதத்தை இழுக்கின்ற இவர்கள் மதவாதிகளா? அல்லது நாங்கள் மதவாதிகளா?”.
பெண்களின் பாலியல் சுதந்திரத்தில் தலையிடுவதுபோல் ஆகிறதே?
“ஆண்களுக்கும் இத்தனை நாள் வயது 21 என்றுதானே இருந்தது. அதேமாதிரி, பெண்களுக்கும் 21 வயது ஆக்குவதில் என்ன தவறு உள்ளது. நியாயமாகப் பார்த்தால் ஆண், பெண் சமம் என்பவர்கள் இச்சட்டத்தை வரவேற்கத்தானே செய்யவேண்டும்?”.
சசிகலாவை அதிமுகவில் இணைக்க வலியுறுத்திய பாஜக தலைவர் அண்ணாமலையை ’அதிமுகவில் தலையிட வேண்டாம்’ என்றிருக்கிறாரே ஜெயக்குமார்?
”ஜெயக்குமாரின் கருத்து அப்படி. இதில், நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. எங்கள் மாநிலத் தலைவரின் கருத்தையே நானும் பிரதிபலிக்கிறேன். அவ்வளவுதான்”.
உங்கள் அம்மாவுக்கு தக்காளிச் சட்னி நல்லா செய்ய வரும்.. உங்கள் அண்ணிக்கு பிரியாணி செய்ய வரும்.. சரி நீங்க எதுல ஸ்பெஷலிஸ்ட்?
”(சிரிக்கிறார்) நான் இரண்டுமே செய்வேன். தக்காளி சட்னியும் பிரியாணியும் நல்லா செய்ய வரும். ஆனால், அது நல்லாருக்கா? நல்லால்லியா என்பதை சாப்பிடுபவர்கள்தான் சொல்லவேண்டும். என் குழந்தைகள், கணவர், பெற்றோர் என நான் எது சமைத்தாலும் அனைவரும் சூப்பராக இருக்கும் என்றுதான் சொல்வார்கள்”.
நாம் தமிழர் கட்சியினர் மீதான திமுகவினரின் தாக்குதலை எப்படி பார்க்கிறீர்கள்?
“திமுக ஆட்சிக்கு வந்தாலே ரெளடிகளின் ராஜ்யம் என்பது பொதுமக்களின் பொதுவானக் கருத்து. அதனை, இதுபோன்ற தாக்குதல்கள் மூலம் திமுகவினர் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவ்வளவுதான்”.
அஜித்தின் ‘வலிமை’ வெளியாகவிருக்கிறதே ?
“கண்டிப்பாக ’வலிமை’ படம் வெளியானவுடன் பார்த்துவிடுவேன். பொதுவாகவே, எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் நல்லப் படங்களைப் பார்ப்பேன். அந்த நேரம் என்பது பெரும்பாலும் விமானத்தில் அமர்ந்து செல்லும் நேரம்தான். சமீபத்தில் ‘சர்தார் உத்தம்’ படம் பார்த்தேன். பிடித்திருந்தது.
- வினி சர்பனா