தேர்தல் பின்னடைவு முதல் புதிய வியூகம் வரை - பாஜக செயற்குழுக் கூட்டம் கவனிக்கப்படுவது ஏன்?

தேர்தல் பின்னடைவு முதல் புதிய வியூகம் வரை - பாஜக செயற்குழுக் கூட்டம் கவனிக்கப்படுவது ஏன்?
தேர்தல் பின்னடைவு முதல் புதிய வியூகம் வரை - பாஜக செயற்குழுக் கூட்டம் கவனிக்கப்படுவது ஏன்?
Published on

உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலத் தேர்தல்கள் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் டெல்லியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கூடுகிறது பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம். இந்தக் கூட்டத்தின் முக்கியத்துவம் என்ன, விவாதிக்கப்படவுள்ள முக்கிய விவகாரங்கள் உள்ளிட்ட உள்ளரசியல் தகவல்களை சற்றே விரிவாகப் பார்ப்போம்.

14 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. 3 மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்ததில் ஒன்றில் மட்டுமே அக்கட்சி வென்றுள்ளது. அதேபோல 16 சட்டமன்ற இடைத்தேர்தலில் நேரடியாகவே எதிர்க்கட்சிகளிடம் தோல்வி அடைந்திருக்கிறது பாஜக. குறிப்பாக, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் சொந்த மாவட்டத்தில் உள்ள அங்காள் தொகுதியில் காங்கிரஸ் கட்சியிடம் தோல்வி அடைந்திருக்கிறது. பாஜக ஆட்சி செய்யக்கூடிய இமாச்சல் பிரதேசத்தில் ஒட்டுமொத்தமாக வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.

இவ்வாறாக, வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு மிகப் பெரிய அடித்தளமாக அமையப்போகும் உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன்பாக இடைத்தேர்தல்களில் கிடைத்த இந்த தோல்வி அக்கட்சியை சற்று கலக்கம் அடையச் செய்துள்ளது. இந்தச் சூழலில்தான் நாளை கூடுகிறது பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம்.

டெல்லியில் நடைபெறும் இந்தக் கூட்டம், பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா தலைமையில் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுவில் இடம்பெற்றுள்ள 80 வழக்கமான உறுப்பினர்கள், 50 சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் 179 நிரந்தர உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர். பாஜக ஆட்சி செய்யும் மாநில முதல்வர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றுகிறார்.

இந்த செயற்குழு கூட்டத்தில் 100 கோடி தடுப்பூசி இலக்கினை அடைந்ததற்காக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, பெட்ரோல் - டீசல் விலை குறைப்பு மேற்கொள்வதற்கும் மத்திய அரசிற்கும் பாஜக ஆட்சி செய்யும் மாநில அரசுகளுக்கும் நன்றி தெரிவிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. அரசின் இந்த சாதனைகளை அதிக அளவில் மக்களிடம் எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் குறித்து பாஜகவின் முக்கிய தலைவர்கள் செயற்குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கவுள்ளனர்.

இவை ஒருபுறமிருக்க, நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் பாஜகவின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது. குறிப்பாக, இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியாக இருந்தும்கூட இமாச்சல் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் தோல்விகளைச் சந்தித்தது குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. அதேபோல அசாம், மத்தியப் பிரதேசம், தெலங்கானா மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பெரும் வெற்றியை பாஜக பெற்றுள்ள நிலையில், அதற்காக வகுக்கப்பட்ட வியூகங்கள் குறித்தும அலசி ஆராயப்படவுள்ளது.

மூன்றாவதாக உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு வரும் ஆண்டின் தொடக்கத்திலும், இமாச்சல் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு வரும் ஆண்டின் பிற்பகுதியிலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், பஞ்சாப் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செலுத்தக்கூடிய மாநிலங்கள்.

எனவே, இவை அனைத்திலும் வெற்றியை கட்டாயம் தக்கவைத்து ஆக வேண்டிய நிலைமை என்பதுதான் பாஜகவிற்கு ஏற்பட்டுள்ளது. காரணம், வரும் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு இந்த மாநிலங்களில் நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது அக்கட்சிக்கு மிகவும் அவசியமானதாகிறது.

உத்தரப் பிரதேசத்தில பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் செயல்பாடுகள், பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசல், கோவா மாநிலத்தில் ஆம் ஆத்மி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின ஆதிக்கம், உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜகவிற்கு நிலவும் உள்கட்சி பூசல் உள்ளிட்ட விஷயங்கள் எல்லாம் விரிவாக விவாதக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இமாச்சல் பிரதேச மாநிலத்தில் இடைத்தேர்தல்களில் பெரும் தோல்வியை அக்கட்சி சந்தித்து இருக்கக்கடிய சூழலில், அதுகுறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தோல்விகளில் இருந்து மீளவும், கூட்டணி வியூகங்களை அமைப்பது குறித்தும், தேர்தல் பிரசாரங்களை துரிதப்படுத்துவது குறித்தும் பாஜகவின் நாளைய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதால், இந்தக் கூட்டம் அரசியல் நோக்கர்களால் உற்று நோக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com