எரியும் சொல் பார்ட்- 2: இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் பாஜக அரசு

எரியும் சொல் பார்ட்- 2: இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் பாஜக அரசு
எரியும் சொல் பார்ட்- 2: இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் பாஜக அரசு
Published on

கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாக வேலைக்குச் சேரலாம் என்ற பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் கனவில் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறது பாஜக அரசு.

உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணி நியமனத்திற்கு இதுவரை பின்பற்றப்பட்டுவந்த இடஒதுக்கீட்டுக் கொள்கையில் மாற்றம் செய்து புதிய விதிமுறைகளை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை உருவாக்கியுள்ளது. அதைப் பல்கலைக்கழக மானியக் குழு 2018 மார்ச் 5 ஆம் தேதி ஆணையாகப் பிறப்பித்துள்ளது. மத்திய பல்கலைக்கழகங்கள், யுஜிசியின் நிதி உதவியைப் பெறும் மாநிலப் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றின் பதிவாளர்களுக்கு மார்ச் 5 ஆம் தேதி யுஜிசியின் இணைச் செயலாளர் தேவ் ஸ்வரூப் என்பவர் கையெழுத்திட்டு ஆணை ஒன்றை அனுப்பியுள்ளார்.

இரண்டு பக்கங்கள் கொண்ட அந்த ஆணையில்( No.F.1-5/2006 (SCT) Dated 5.03.2018 ) இதுவரை ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில், உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர், பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும்போது அந்தக் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தை ஒட்டுமொத்தமாக ஒரு யூனிட்டாக கணக்கில் எடுத்துக்கொண்டு அதில் இருக்கும் உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர், பேராசிரியர் பணியிடங்களைக் கணக்கிட்டு அதில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இனிமேல் ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஒவ்வொரு துறையும் ஒரு யூனிட்டாகக் கணக்கிடப்பட்டு அதில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. புதிய பணியிடங்களுக்கான நியமனத்தில் மட்டுமின்றி பதவி உயர்வுக்கான பட்டியல் தயாரிக்கப்படும்போதும் இனி இந்த முறையைத்தான் கடைபிடிக்கவேண்டும், அதற்கேற்ப ‘ரோஸ்டர்களை’ தயாரிக்கவேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

பல்கலைக்கழகத்தை ஒரு யூனிட்டாக எடுத்துக்கொள்ளும்போதுதான் அதில் இட ஒதுக்கீடு அளிக்கமுடியும். உதாரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தை எடுத்துக்கொண்டால் 2014 ஆம் ஆண்டு நிலவரப்படி அதில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பேராசிரியர் பணியிடங்கள் 65, இணைப் பேராசிரியர் பணியிடங்கள் 136, உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் 259. ஆக மொத்தம் 460. அதில் எஸ்சி வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு 15%ஐ கணக்கிட்டால் பேராசிரியர் பதவியில் 10 இடங்களும், இணைப் பேராசிரியர் பதவியில் 20 இடங்களும், உதவிப் பேராசிரியர் பதவியில் 39 இடங்களும் வழங்கப்படவேண்டும். அதையே துறைவாரியாகக் கணக்கிட்டால் ஒரு துறையில் குறைந்த பட்சம் 7 உதவிப் பேராசிரியர்கள் இருந்தால்தான் அதில் ஒரு இடம் எஸ்சி பிரிவினருக்குக் கிடைக்கும். ஒரு துறையில் இணைப் பேராசிரியர் பதவி ஒன்றிரண்டுதான் இருக்கும். பேராசிரியர் பதவி ஒன்றே ஒன்றுதான் இருக்கும். எனவே எஸ்சி பிரிவினர் ஒருபோதும் இணைப்பேராசிரியராகவோ, பேராசிரியராகவோ வரவே முடியாது. அதே நிலைதான் இதர பிற்பட்ட பிரிவினருக்கும். யுஜிசியின் தற்போதைய ஆணைப்படி ஓபிசி பிரிவினரும் இணைப் பேராசிரியர்களாகவோ பேராசிரியர்களாகவோ இனி வரவே முடியாது.

உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி பிரிவினருக்கு 15%, எஸ்டி பிரிவினருக்கு 7.5% இதர பிற்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27% மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்பது மத்திய அரசின் விதியாகும். ஆனால் ஏற்கனவே அந்த விதி சரிவரப் பின்பற்றப்படுவதில்லை. பணி நியமனங்களில் முறையாக இட ஒதுக்கீடு நிறைவு செய்யப்படுவதில்லை. அது தொடர்பாக ஆசிரியர் அமைப்புகளும், சமூக அமைப்புகளும்  தொடர்ந்து புகார் எழுப்பியும் போராடியும் வந்ததன் விளைவாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) ஆட்சியின்போது 2013 செப்டம்பரில் யுஜிசி ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. யுஜிசியின் அப்போதைய செயலாளர் டாக்டர் அகிலேஷ் குப்தா கையொப்பமிட்டு அனுப்பியிருந்த அந்தக் கடிதத்தில் ( D.O. No.F.31-1/2013 (CU) Dated 12th September 2013 ) பல்கலைக்கழக மானியக்குழு சட்டம் 1956 பிரிவு 20(1) ல் அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி பணி நியமனங்களிலும், பதவி உயர்விலும் இட ஒதுக்கீட்டுக் கொள்கை சரியாகப் பின்பற்றப்படவேண்டும் என யுஜிசியை மத்திய அரசு பணித்துள்ளது; ஆனால் மாணவர் சேர்க்கையிலும் , பணி நியமனங்களிலும் இட ஒதுக்கீட்டுமுறை சரியாகப் பின்பற்றப்படுவதில்லை என்பது வேதனையளிக்கிறது. 

இது தொடர்பாக உங்களுக்கு வந்துள்ள புகார்கள் அவற்றின்மீது நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கையை 15 நாட்களுக்குள் யுஜிசிக்கு அனுப்பவேண்டும் “என உத்தரவிடப்பட்டிருந்தது.அதுமட்டுமின்றி ”அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான ‘செல்’ ஒன்று உருவாக்கப்படவேண்டும்” எனவும் கூறப்பட்டிருந்தது. 2014 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி வந்ததுமே உயர்கல்விநிறுவனங்களில் அதன் பிரதிபலிப்பு தெரிய ஆரம்பித்துவிட்டது. மாணவர் சேர்க்கையிலும், பணி நியமனங்களிலும் இட ஒதுக்கீடு என்பது புறக்கணிக்கப்பட்டு உயர்கல்வி நிறுவனங்கள் உயர்சாதி மையங்களாக செயல்படத் தொடங்கிவிட்டன. 

அதன் காரணமாகத்தான் ரோஹித் வெமுலா போன்ற மாணவர்களின் கொடூர மரணங்கள் நிகழத் தொடங்கின.2015 -16 க்கான உயர்கல்வித்துறை அறிக்கையின் படி இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் 15,18,813 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில்  65 % பொதுப் பிரிவு எனப்படும் உயர் சாதிகளைச் சேர்ந்தவர்கள். இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) 25.4% உள்ளனர். எஸ்சி வகுப்பைச் சேர்ந்தவர்கள் 7.5% ம், எஸ்டி வகுப்பைச் சேர்ந்தவர்கள் 2.1% ம் தான் ஆசிரியர்களாக உள்ளனர். முஸ்லிம்கள் 3.4% ம் கிறித்தவர்கள் உள்ளிட்ட பிற மதச் சிறுபான்மையினர் 3.3% ம் தான் ஆசிரியர்களாக இருக்கின்றனர். ( ஆதாரம்:  AISHE 2015-16 பக்கம் 25 ) 

சமூக நீதிக் கொள்கையை செயல்படுத்துவதில் முன்னோடி மாநிலம் எனப் பெருமை பேசப்படும் தமிழ்நாட்டில் கல்லூரி/பல்கலைக்கழகங்களின் ஆசிரியர் பணிகளில் எஸ்சி வகுப்பினர் 8.7%ம், எஸ்டி பிரிவினர் வெறும் 0.3%தான் உள்ளனர்.அதாவது 19% இருக்கவேண்டிய எஸ்சி பிரிவினர் அதில் பாதி அளவுகூட ஆசிரியர்களாக நியமிக்கப்படவில்லை. தமிழ்நாட்டிலேயே இந்தக் கதியென்றால் பிற மாநிலங்களைப்பற்றி சொல்லவே வேண்டாம்.

இந்தியா முழுவதுமுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் ஒட்டுமொத்தமாக 11,25,027 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் உள்ளன. அதில் 58.75% பொதுப்பிரிவு என்னும் உயர்சாதிகளைச் சேர்ந்தவர்களும் 24.82% இதர பிற்பட்ட வகுப்பினரும் (ஓபிசி) 12.86% எஸ்சி பிரிவினரும் , 3.57% எஸ்டி பிரிவினரும் உள்ளனர் ( ஆதாரம்: AISHE 2015-16 பக்கம் 28 ) .ஆசிரியர் பணியிடங்கள், ஆசிரியரல்லாத பணியிடங்கள் ஆகியவற்றில் இழைக்கப்படும் இந்த அநீதிதான் மாணவர் சேர்க்கையிலும் எதிரொலிக்கிறது.

தட்டுத்தடுமாறி உயர்கல்வி நிறுவனங்களுக்கு வரும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் அங்கு நிலவும் சாதிய சூழல் காரணமாகத் தமது படிப்பை முடிக்கக்கூட முடியாமல் இடைநிறுத்தம் செய்வதும், தற்கொலை செய்துகொள்வதும் இதனால்தான் அதிகரித்துக்கொண்டே வருவது.தற்போது யுஜிசி வெளியிட்டிருக்கும் ஆணை நடைமுறைப்படுத்தப்பட்டால் இனிமேல் எஸ்சி,எஸ்டி, ஓபிசி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஒருவர்கூட ஆசிரியர்களாக நியமிக்கப்பட வாய்ப்பிருக்காது. ஏற்கனவே உயர்சாதி மையங்களாக இருக்கும் உயர்கல்வி நிறுவனங்கள் இனி அந்தச் சாதிகளின் தனி உடமைகளாகிவிடும்.

துறை வாரியாகத்தான் இட ஒதுக்கீட்டை நிர்ணயிக்கவேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் 2017 ஆம் ஆண்டு பிறப்பித்த ஆணையையும் அதை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியிருப்பதையும் காரணமாகக் காட்டி இந்தப் புதிய ஆணையை வெளிட்டிருக்கிறது மத்திய அரசு. இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட நீதிமன்றங்களைத் துணைக்கு அழைத்துக்கொள்வதே பாஜகவின் தந்திரம். அதனால்தான் அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை ஆணை பெறவோ, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யவோ பாஜக அரசு முயற்சி செய்யவே இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதிசெய்யப்பட்ட இட ஒதுக்கீட்டுக் கொள்கையைக் குழி தோண்டிப் புதைப்பதற்கான வேலையை மத்தியில் உள்ள பாஜக அரசு துவக்கிவிட்டது. ரத்தம் சிந்தி வென்றெடுத்த இட ஒதுக்கீட்டு உரிமையை பாதுகாக்கப் போகிறோமா அல்லது அரசியலமைப்புச் சட்டத்துக்குப் பதிலாக மனு நீதியை ஏற்றுக் கொள்ளப்போகிறோமா என்பதே இப்போது  நம் முன் உள்ள கேள்வி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com