பத்திரிகையாளர், ஆன்மீகவாதி, தமிழ் ஆர்வமும், பன்மொழிப் புலமையும், ஆகச்சிறந்த பேச்சாற்றலும் கொண்டவர், ஆதீனம் அருணகிரிநாதர். உடல்நலக் குறைவால் காலமான மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் வாழ்க்கைக் குறிப்புகள் இதோ...
உடன்குடியை பூர்வீகமாகக் கொண்ட குமாரசாமி - சுந்தரத்தம்பாள் தம்பதியின் ஒரே மகனான அருணகிரிநாதர், தனது பள்ளிப்படிப்பை சீர்காழியில் தொடங்கி நாகர்கோவிலில் நிறைவு செய்தார்.
ஆன்மீக பணிக்கு வருவதற்கு முன், சென்னையில் ஒரு மாலை நாளிதழில் பணியாற்றியவர். சுறுசுறுப்பான பத்திரிகையாளராக பல பிரத்யேகச் செய்திகளை அள்ளிக் கொடுத்துள்ளார். அவருக்கு புல்லட் பைக் என்றால் அலாதிப் பிரியமாம். அதனாலேயே அவர் ஓட்டிய புல்லட் தற்போது வரை பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது. தொடர்ந்து தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தவர் பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு சொற்பொழிவுகளையும் ஆற்றியுள்ளார். தருமபுரம் ஆதீனத்தில் தம்புரான் சாமிகளாக இருந்தவர், 1975-ஆம் ஆண்டு மதுரை ஆதீனத்தின் இளவரசராக பட்டம் சூட்டப்பட்டார்.
தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்றான மதுரை ஆதீன மடம், சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சைவ சமய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது. மடத்தின் 291-ஆவது குருமகா சன்னிதானமான ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிகர் காலமான பிறகு, 1980ஆம் ஆண்டு போட்டியின்றி மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டார் அருணகிரிநாதர். 292 ஆவது பீடாதிபதியாக பொறுப்பேற்ற அன்று முதல், மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீஞானசம்பந்த தேசிக பராமாசாரிய சுவாமிகள் என அழைக்கப்பட்டு வந்தார். தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கு மேல் மதுரை ஆதீனமாக பொறுப்பில் இருந்த அருணகிரிநாதர் தலைமையில், முதல் 23 ஆண்டுகளில் சுமார் ஆயிரம் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது.
தமிழ் மொழி, சைவ நெறி பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டவர். 1985ஆம் ஆண்டு ராமேசுவரத்தில் நடந்த கச்சத்தீவை மீட்கும் போராட்டத்தில் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு கலவரத்தின் போதும், தென்காசி அருகே கலவரம் நடந்த போதும், மதவெறிக்கு எதிராகவும், சமய நல்லிணக்கத்தை காக்க முயற்சியெடுத்து மக்கள் ஒற்றுமைக்காக பணியாற்றினார்.
எம்.ஜி.ஆர், கருணாநிதி உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்களுடனும், திரைத்துறை பிரபலங்களுடனும் தொடர்பில் இருந்த ஆதீனம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அன்பைப்பெறும் வரையில் அரசியலில் தலையிடாமல்தான் இருந்தார். தமிழ் மற்றும் சமய நெறிகளுக்காக குரல் கொடுத்த ஆதீனம், காலப்போக்கில் ஜெயலலிதா-விற்கும் குரல் கொடுத்தது பலருக்கு ஆச்சரியத்தையும் சிலருக்கு கோபத்தையும் ஏற்படுத்தியது.
2016-இல் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதாக கூட அறிவித்தார். மடத்தின் மரபையும், மாண்பையும் கேள்விக்குறி ஆக்கிவிட்டார் என்ற புகார்களும் எழுந்தன. குறிப்பிடும்படியான அரசியல் நிகழ்வுகளின்போதெல்லாம் ஆதீனம் அருணகிரிநாதரின் கருத்துகளும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தனது அரசியல் ஈடுபாட்டினை குறைத்துக்கொண்டார்.
2012-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், மடத்தின் இளைய ஆதீனமாக நித்தியானந்தாவை நியமனம் செய்த அருணகிரிநாதர், 293ஆவது பீடாதிபதியாக அவரை அறிவித்தார். இது பெரும் சர்ச்சையாக மாறியதுடன், காஞ்சி, திருவாவடுதுறை ஆதீன மடங்கள் உள்ளிட்ட அனைத்து சைவ மடங்களும் இந்நியமனத்தை கடுமையாக எதிர்த்து, பல போராட்டங்களை நடத்தின. நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், மதுரை ஆதீன மடத்தை அரசே ஏற்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகின. ஆகவே நித்தியானந்தாவை வாரிசுப் பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிடுவதாக மீண்டும் அவரே அறிவித்து அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பின்னர், ஆதீன மடத்தின் சம்பிரதாயப்படி திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகளுக்கு ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த, தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என பெயர் மாற்றம் செய்து, அவரை இளைய ஆதீனமாக நியமித்தார்.
அனைவரும் ஒன்றே என சமய, சமுதாய பணிகள் ஆற்றிய ஆதீனம் அருணகிரிநாதரின் மறைவு பேரிழப்பே.