“ப்ரோமோட் ஆகிக்கொள்ள பக்காவாக நடிப்பவர் அனிதா சம்பத்”-வேல்முருகன் சிறப்பு பேட்டி!

“ப்ரோமோட் ஆகிக்கொள்ள பக்காவாக நடிப்பவர் அனிதா சம்பத்”-வேல்முருகன் சிறப்பு பேட்டி!
“ப்ரோமோட் ஆகிக்கொள்ள பக்காவாக நடிப்பவர் அனிதா சம்பத்”-வேல்முருகன் சிறப்பு பேட்டி!
Published on

’மதுர குலுங்க குலுங்க… ஒத்த சொல்லால… சண்டாளி… சமீபத்தில் தமிழகமெங்கும் வைரல் ஹிட் அடித்த ’கத்தரி பூவழகி’ என 300-க்கும் மேற்பட்டப் பாடல்களைப் பாடி தமிழர்களை மகிழ்வித்த பாடகர் வேல் முருகன் பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். அவரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.

பொதுவாக, ஃபீல்ட் அவுட் ஆன நடிகர்கள்தான் பிக்பாஸ் இல்லத்துக்குள் செல்வார்கள். டைம் லைனில் இருந்த நீங்கள் ஏன் சென்றீர்கள்?

ஆறு மாதகாலம் கொரோனா ஊரடங்கில் இருக்கும்போது ரெக்கார்டிங், பாடல்கள் எதுவும் இல்லை. அதனால்,பிக்பாஸ் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள நினைத்தேன். ஊரடங்கு மட்டும் இல்லாமல் போயிருந்தால் நான் நிச்சயம் போயிருக்க மாட்டேன். மேலும், பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றால், இன்னும் எனது பாடல்களை உலகத் தமிழர்கள் அறிவார்கள் என்பதும் ஒரு காரணம்.

பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டது எப்படி இருக்கிறது?  

வெளியேற்றப்பட்டதுக் குறித்து நான் பெரிதாக வருத்தப்படவில்லை. இன்னும் விளையாட்டை புரிந்துகொண்டு விளையாடி இருக்கலாமோ என்றுதான் நினைக்கிறேன். இரண்டு மூன்று இடத்தில் கேள்வி கேட்காமல் விட்டுவிட்டேன். யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. பொதுவாக சண்டை போடும் குடும்பத்தை எடுத்துக்காட்டாக சொல்ல மாட்டார்கள். அமைதியாக இருப்பவர்களைத்தான் உதாரணப்படுத்துவார்கள். அதுபோல், ஒற்றுமையாக இருக்க நான் அமைதியாக இருந்தேன். வேறுமாதிரி புரிந்துகொண்டு அனுப்பிவிட்டார்கள்.

மக்கள்தான் ஓட்டுப்போட்டு வெளியேற்றினார்கள் என்று நினைக்கிறீர்களா?

தெரியவில்லை. கொஞ்சம் டவுட்டாகத்தான் இருக்கிறது. என்னை எல்லோருக்கும் தெரியும். அப்படி இருந்தும் எப்படி என்ற சந்தேகம் உள்ளது. வாரம்தோறும் எலிமினேஷனில் வந்தவர்கள் வெளியேற்றப்படவில்லை. ஒரேமுறை வந்த நான் மட்டும் வெளியேற்றப்படுகிறேன் என்றால், யோசிக்கத்தானே தோன்றும்? ரேகா மேடம், ‘பிக்பாஸ் ஒருதலைப்பட்சமாக இருக்கிறது. நான் வீட்டிற்குச் செல்கிறேன். இந்த விளையாட்டே வேண்டாம்’ என்றார்.

அவர், ரொம்ப பகீரங்கமாக பேசவேதான் வெளியேற்றப்பட்டார். இல்லையென்றால், அப்போது சனம்தான் வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். ’இவர் கொஞ்சம் நல்லவாராக இருக்கிறார். சண்டை போடமாட்டார் போல’ என்றுகூட என்னை நினைத்திருக்கலாம். ஆனால், நான் வெளியில் வந்தபிறகு ‘நீங்கள் நிறைய ஈழத்தமிழர்களுக்காக பாடுகிறீர்கள்’ பிரான்ஸ், ஜெர்மனி உட்பட பல நாடுகளில் இருந்து தமிழர்களும் ஈழத்தமிழர்களும் அதிக வாக்குகள் அளித்தோம்’ என்றார்கள் பலர்.  

உண்மையிலேயே, பிக்பாஸ் வீட்டில் நிறவெறி இருக்கிறதா?

நிறவெறி இருக்கவேதான் என்னிடம் யாருமே பேசவில்லை. நன்கு பேசுகிறேன் என்றுதான் பலரும் முதல்நாளில் எனக்கு ஹார்ட் கொடுத்தார்கள். ஆனால், இப்போது பாலாவுக்கு சப்போர்ட்டிவாக இருக்க ஆரம்பித்துவிட்டார்கள். பாலாவுக்கு யாரை பிடிக்கவில்லையோ, அவர்களை இவர்களும் ஒதுக்கிறார்கள். தூக்குவது, பந்துப் போட்டு விளையாடுவது போன்றவற்றை இவர்கள் எல்லாம் நட்போடு சகோதரத்துவத்தோடு செய்யலாம்;தொடலாம். ஆனால், நான் எதையும் செய்யக்கூடாது என்பதை நிறவெறி இல்லாமல் எப்படி எடுத்துக்கொள்ள முடியும்?

ஒரு அப்பார்ட்மெண்ட்டிலேயே கார், நல்ல ட்ரெஸ்ஸிங் சென்ஸ் இருந்தால் ‘ஓ இவர் வெயிட் பார்ட்டி போல’ என்று சிலர் பழகுவார்கள். இந்தமாதிரிதான் பாலாவிடம்  பழகுகிறார்கள். ஒரு அண்ணனாக நட்பு ரீதியாக என்னிடம் பேசி இருக்கலாமே? அங்கு மிகவும் எளிமையோடு நடந்துகொண்டேன். என் பெருமையை காட்டவில்லை.

பிக்பாஸ் டைட்டில் வின்னராக வேண்டும் என்று எதார்த்தத்தை மீறி யார் நடிக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?

எல்லோருமே இப்போது போட்டிப் போட்டுக்கொண்டு நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதில், குறிப்பாக மக்கள் பார்ப்பார்கள் என்பதற்காகவே, பாலாவும் ஷிவானியும் நடிக்கிறார்கள். இரவில் சந்திப்பது, ஊட்டி விட்டுக்கொள்வது போன்றவற்றை ஏன் செய்யவேண்டும்? திடீரென்று லவ் பண்ணுவது போல் ஏன் நடிக்கவேண்டும்?

அப்படியென்றால், பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர் லாஸ்லியா போல் காதலில் விழுந்து பிரபலமாகி சினிமா நடிகையாக ஷிவானி நினைக்கிறாரா?

அதுதான் உண்மை. அப்படி இல்லையென்றால், சம்பந்தமே இல்லாமல் ஊட்டி விடுவாரா?. பாலாவை முதலில் பிடிக்காதவர் ஷிவானிதான். எனக்கு முதலில் ஹார்ட் விட்ட ஷிவானி, பாலாவுக்குத்தான் ஹார்ட் புரோக்கன் கொடுத்தார். இப்போது, மட்டும் எப்படி ஊட்டி விடுவார்? 100 நாளிலேயே காதல் வந்துவிடுமா என்ன? இதற்கு முன்பு மருத்துவ முத்தம் சம்பவம் எல்லாம் நிகழ்ந்துள்ளது. அவர்கள் எல்லாம், வெளியில் வந்து திருமணம் செய்துகொண்டார்களா?  பேசுக்கொள்கிறார்களா என்ன?

பிக்பாஸ் எழுதப்பட்ட ஒரு ஸ்கிரிப்ட் என்கிறார்களே?

ஸ்கிரிப்ட் என்ற விஷயமே அங்கு கிடையாது. ஆனால், டாஸ்க் உண்டு. ஒரு டாஸ்க் கொடுக்கும்போது இயற்கையாகவே சண்டை நடக்குமில்லையா? யாரையாவது நாமினேட் பண்ண சொல்லும்போது நட்பாக இருப்பவர்களைப் பண்ண மாட்டார்கள். என்னை நாமினேட் செய்யவே, பேசாமல் பழகாமல் இருந்திருக்கிறார்கள். எனக்கு பழக்க வழக்கமே நன்கு பேசுவதுதான். ஆனால், என்னையே தனிமைப்படுத்திவிட்டார்கள். டிவியில் வருவதற்காகவெல்லாம் நான் சண்டைப் போடமாட்டேன் என்று விட்டுவிட்டேன்.

ஆஜித்துக்கு பதில் நீங்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்று உங்களைத் தனிமைப்படுத்தினார்களா?

எல்லோரும் அப்படித்தான் கேட்கிறார்கள். 15 வருடமாக சினிமாவில் பாடி வருகிறேன். எப்படி மக்கள் என்னை வெளியேற்ற வேண்டும் என்று நினைத்திருப்பார்கள்? இப்படியே புறக்கணித்தால், வெளியேற்றிவிடுவார்கள் என்று என்னிடம் யாரும் சரியாக பேசவில்லை.

அனிதா சம்பத் சிம்பத்தி கிரியேட் பண்ணுவதாக பலரும் விமர்சிக்கிறார்களே உண்மையா அது?

அனிதா சம்பத் பக்காவாக நடிப்பவர். முன்னரே சொல்லிவிட்டுத்தான் செய்வார். ’இங்கப் பாருங்க, இந்த இடத்தில் நான் இப்படி பேசினால்தான் டிவியில் தெரிவேன். இந்த இடத்தில் நான் கன்டெண்ட் கொடுத்தே ஆகவேண்டும். எனக்கான ஸ்பேஸ் இது. செய்யாமல் விட்டுவிட்டேன் என்றால்,  கண்டிப்பா என் முகம் மக்களிடம் போய் சேராது’ என்பதை சொல்லிவிட்டு சரியாகச் செய்வார்.

அங்கிருப்பவர்களில், எப்படியெல்லாம் நாசுக்காக விளையாட வேண்டுமோ, அதனையெல்லாம் கரெக்ட்டாக நடித்து செய்வார். எனக்கெல்லாம் இயற்கையாகவே கண்ணீர் வந்தது. ஆனால், அனிதா நடிக்கிறார். என்னை தப்பாக ப்ரோமோட் செய்துவிடுவார்களோ என்று சொல்லி ஒவ்வொன்னுத்துக்கும் அழுவார். தப்பாக ப்ரோமோட் செய்வார்கள் என்றால் எதற்கு இங்கு வரவேண்டும்? என்ன செய்கிறீர்களோ, அதைத்தான் வெளியில் காட்டப்போகிறார்கள்.

தினமும் டிவியில் வரவேண்டும், ப்ரோமோட் ஆகிக்கொள்ள வேண்டும் என்பதற்காக எல்லா உத்திகளையும் கையாள்கிறார் என்பதை உள்ளிருப்பவர்களும் மக்களும் தெரிந்துகொண்டார்கள். அதேபோல, ஒன்னும் இல்லாத விஷயத்தைக்கூட ஊதி பெரிதாக்குவார். சுரேஷ் சார் விஷயத்திலேயே இதையெல்லாம் சொன்னால்தான், அப்படியே வளர்ந்துகொண்டே போகும் என்றே பெரிதுபடுத்தினார்.

உங்களுக்குப் பிடித்த போட்டியாளர்?

சுயநலமான போட்டியில் யார் பிடிக்கும் என்றுசொல்ல முடியாது. அப்படி பிடித்தவர்கள் மாதிரி இருந்திருந்தால் என்னிடம் பழகி இருப்பார்களே?

ஏற்கனவே, இருந்த இமேஜை பிக்பாஸ் மூலம் குறைத்துக்கொண்டதாக நினைக்கிறீர்களா?

இரண்டு விஷயம் உள்ளது. புதிதாக பார்த்தவர்களுக்கு கண்டிப்பாக என்மீது மரியாதை அதிகம் உண்டாகியிருக்கும். அய்யோ, இவன் வந்துட்டானா? எப்போ வெளியில் வருவான்? என்று நினைத்த என் வளர்ச்சி பிடிக்காதவர்களுக்கு பிடித்திருக்காது. ஆனால், ஊரடங்கு காலத்தில் வேல் முருகன் என்றால் இவர்தானா? இந்தப் பாட்டை இவர்தான் பாடினாரா? என்று மக்கள் தேடி அறிந்துகொண்டார்கள். இந்த, அங்கீகாரம் எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சியே.

ஒருவிதத்தில், பிக்பாஸ் நல்ல களம்தான். வாய்ப்பு கொடுத்த விஜய் டிவிக்கு நன்றி. ஆனால், ’வேல் முருகன் நீங்கள் தெளிவாக விளையாட வேண்டும். கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் கேட்கவேண்டும்’ என்று கமல் சார் எனக்கு மற்றொரு வாய்ப்பை கொடுத்திருக்கலாம். அதன்மூலம், தவறுகளைத் திருத்திக்கொண்டு நன்கு விளையாடி இருப்பேன். அப்படி, வாய்ப்பு கொடுத்து சரியாக பண்ணவில்லை என்றால் வருத்தபட்டிருப்பேன். அப்படியொரு வாய்ப்பே கொடுக்கவில்லையே? நான்கு பேரை ’தாமரையில் தண்ணீர் ஒட்டாதது போல் இருக்கிறார்கள்’ என்றார், கமல் சார். அதில், என்னையும் சொல்லியிருந்தால், ‘ஆஹா சார் இப்படி சொல்லிருக்காரே என்று பூந்து விளையாடி இருப்பேன்’.

சமீபத்தில், பிக்பாஸில் கலந்துகொண்ட கஸ்தூரி சம்பள பாக்கியை கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினாரே? உங்களுக்கெல்லாம் கொடுத்து விட்டார்களா?

கஸ்தூரிக்கு தராதது பர்சனல் ஏதாவது காரணம் இருந்திருக்கலாம். எங்களுக்கெல்லாம் ஷோ முடிந்தவுடன் தான் கொடுப்போம் என்று சொல்லிவிட்டார்கள்.

நீங்கள் தீவிர முருகர் பக்தர். பாஜகவின் வேல் யாத்திரை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

எனக்கு அவ்வளவு பெரிய அரசியல் தெரியாது. பிக் பாஸ் வீட்டில் இருந்ததால் நாட்டில் என்ன நடந்தது என்றெல்லாம் தெரியாது.  

வெளியில் வந்தபிறகு என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? பிக்பாஸ் பார்க்கிறீர்களா?

இரண்டு புதிய படங்கள் வந்துள்ளது. ஆடுகளம் படத்தை தயாரித்த கதிரேசன் சார் பேசியுள்ளார். பாடி அனுப்பியுள்ளேன். ஆடுகளத்தில், ’ஒத்த சொல்லால’ பாடல் வாய்ப்பு கொடுத்த மாதிரியே இதிலும் கொடுத்துள்ளார். அதோடு, இயக்குநர் முத்தையா சாரும் அழைத்திருக்கிறார். வெளியில் வந்துள்ளதால் இனிமேல்தான் எல்லோரும் அழைப்பார்கள்.

இப்போது பிக்பாஸ் பார்க்கிறீர்களா?

ஒரே ஒருநாள் மட்டும் பார்த்தேன். அதன்பிறகு பார்க்கவில்லை. நாம் இருந்த இடம். நாம் சாப்பிட்ட இடம், படுத்த இடம், நாம் பல் விளக்கிய இடம், செடிக்கு தண்ணீர் ஊற்றிய இடம் அனைத்தையும் பார்க்கும்போது மனது சங்கடமாக இருந்தது. அதனால், பார்ப்பதில்லை.

- வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com