பாரதியாரா? தாகூரா? : தேசிய கவி யார்? - பாகம் 2

பாரதியாரா? தாகூரா? : தேசிய கவி யார்? - பாகம் 2

பாரதியாரா? தாகூரா? : தேசிய கவி யார்? - பாகம் 2
Published on

தாகூர் வாழ்நாள் முழுக்க வங்காளியின் கவினராகவே இருந்தார், அனைத்து நாடுகளுக்கும் செல்ல வாய்ப்புகள் இருந்தும், பல அயல் நாடுகளுக்கு சென்றிருந்தும், அவரது பார்வை வங்கத்தை விட்டு அதிகம் விரிவடையாததாகவே இருந்தது. 1905 ஆம் ஆண்டில் வங்கத்தை இரண்டாகப் பிரிக்க சட்டம் இயற்றப்பட்டபோது, ‘சட்டம் அமலுக்கு வந்தாலும் வராவிட்டாலும், இங்கிலாந்து மக்கள் நமது பரிதாபக் குரல்களைக் கேட்டாலும் கேட்காவிட்டாலும், நமது நாடு (வங்கம்) என்றென்றும் நமக்கே உரியது; நமது முன்னோர்களின், நமது மக்களின், நமது எதிர்கால சந்ததியினரின் நாடு இது’ – என்று தாகூர் எழுதினார்.

வங்கப் பிரிவினைக்கு எதிராகவும், வங்காளிகளின் ஒற்றுமையை வளர்க்கும் விதமாகவும் பல பாடல்களை அவர் பாடினார். வங்கப் பிரிவினைக்கு எதிரான போராட்டங்களுக்கு தாகூர் தாமாகவே தலைமை ஏற்றார். அப்போது அவர் முன்வைத்த முழக்கம், ‘நாம் வங்காளிகள்; நாம் ஒன்றுபட்டவர்கள்’ – என்பதுதான். அவருக்கு தேசம் என்பது எப்போதும் வங்காளமாகவே இருந்தது. அவர் வங்க நலன்களையே தனது குறிக்கோள்களாகக் கொண்டிருந்தார். ஆனால் பாரதியாருக்கோ மிகப்பெரிய தேசியப்பார்வை இருந்தது. இந்தியா வரலாற்றில் எப்போதும் ஒன்றுபட்டே இருக்க வேண்டும் என்பதை,

‘சேதமில்லாத ஹிந்துஸ்தானம் அதனைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா’ – என்று பாரதியார் பாடினார்.

இந்தியாவின் தத்துவ ஞானத்தை, ‘உலகம் உய்ய வழி செய்யும் கொடை’ என்றே பாரதியார் கருதினார்.
 
‘எல்லாருமே அமரநிலை எய்து நன்முறையை
இந்தியா உலகிற்களிக்கும் – ஆம்
இந்தியா உலகிற்களிக்கும் – ஆம்; ஆம்
இந்தியா உலகிற்களிக்கும்’ - என்ற பாரதியின் வரிகள் இந்தக் கருத்தைக் காட்டும்.

ரபீந்திரநாத் தாகூரின் நோபல் பரிசுக்கு உரிய படைப்பு கீதாஞ்சலி. அது அவரது கவிதைகளின் ஆங்கில மொழி பெயர்ப்பு. தாகூருக்கு எத்தனை மொழிகள் தெரியும் என்று பார்த்தால் வங்க மொழி, ஆங்கில மொழி, சமஸ்கிருத மொழி ஆகிய மூன்று மொழிகளை மட்டுமே அவர் அறிந்திருந்தார். தான் வங்க மொழியில் எழுதிய கவிதைகளை உலக மக்கள் அறிந்து கொள்ளட்டும் என்ற காரணத்தினால் அவர் தனது கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அவர் வேறு எந்த எழுத்தாளரின் வங்கப் படைப்பையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவில்லை, எந்த ஆங்கிலப் படைப்பையும் வங்கத்திற்கு மொழிபெயர்க்கவும் இல்லை. அவர் தான் அறிந்த மூன்று மொழிகளையும் தனது வெளிப்பாட்டுக்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்டார், அவர் தனது சொந்த மொழியான வங்காள மொழியின் மேம்பாட்டையே சிந்திக்கவில்லை.

இன்னொரு பக்கம் பாரதியாரை பார்த்தால் அவர் அறிந்த மொழிகள் 32 என்று ஒரு கருத்து நிலவுகிறது. அதற்கு சான்றுகள் தெளிவாக இல்லை. சான்றுகளின் அடிப்படையில் பாரதியார் நன்றாகப் பேசவும் எழுதவும் தெரிந்த மொழிகள் 7 என்று இலந்தை ராமசாமி தனது நீண்டகால ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடுகிறார். அந்த மொழிகள் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, சமஸ்கிருதம். இவற்றைத் தவிர பாரதிக்குப் பேசத்தெரிந்த, பிறர் பேசினால் புரிந்து கொள்ளத் தெரிந்த மொழிகள் 4 இருந்தன. அந்த மொழிகள் லத்தீன், கிரேக்கம், கன்னடம், மராத்தி. பாரதிக்கு பன்மொழிப் புலமை இருந்தது என்ற செய்திக்கு ‘யாமறிந்த மொழிகளிலே’ – என்ற பாரதியின் கவிதை வரி சான்று கூறுகின்றது.

இப்படியாக பல மொழிகளில் பரிச்சயம் உள்ள பாரதியார், சமஸ்கிருதத்தில் இருந்து வேத ரிஷிகளின் கவிதை, பகவத்கீதை, பதஞ்சலி யோக சூத்திரம், வியாசபாரதம் ஆகியவற்றை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். ஆங்கிலத்தில் ஜான்ஸ்கர் என்னும் கவிஞர் எழுதிய கவிதைகளை தமிழில் மொழி பெயர்த்துள்ளார், ஷெர்மன் என்னும் ஆங்கிலப் பெண்மணி எழுதிய கவிதைகளை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். விவேகானந்தரின் சொற்பொழிவுகளையும் கடிதங்களையும் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். பாண்டிச்சேரியில் தங்கி இருந்தபோது பிரெஞ்சு தேசிய கீதத்தை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

இவை தவிர, நேரடியாக அந்த மொழி தெரியாவிட்டால் ஒரு நல்ல படைப்பை அதன் வழி நூலில் இருந்து மொழிபெயர்க்கும் பழக்கமும் பாரதிக்கு இருந்தது. உதாரணமாக ஜப்பானிய கவிதைகளையும் ஹைக்கூக்களையும் பாரதியார் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். சியூசூனி – என்ற சீனப் பெண் கவிஞரின் படைப்புகளை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். மிக முக்கியமாக தாகூரின் சிறுகதைகளையும் கவிதைகளையும் கூட பாரதி தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

தமிழின் இலக்கியங்கள் சிலவற்றையும் பாரதியார் ஆக்கிலத்திற்கு மொழி பெயர்த்துள்ளார். நம்மாழ்வார் பாசுரங்கள், நாச்சியார் பாசுரங்கள், திருப்புகழ் போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். தவிர காங்கிரஸ் மகாசபை சரித்திரம் – போன்ற நூல்களையும் பாரதியார் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்துள்ளார். கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதில் பாரதியார் அதிகம் நாட்டம் கொள்ளவில்லை 11 தமிழ் சிறுகதைகளை மட்டும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். மிக அரிதாக தன்னுடைய கவிதைகளில் சிலவற்றை மட்டுமே பாரதியார் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அவை ஆங்கில பிரெஞ்சு உலகின் சிறந்த இதழ்களில் வெளியாகின. ஆனாலும் பாரதியார் அந்தப் பணியில் அதிக ஆர்வம் காட்டித் தொடரவில்லை.

தாகூர் கீதாஞ்சலியை மொழி பெயர்த்து மேற்குலகில் தன் புகழைப் பரப்பியதைப் போல தானும் செய்ய பாரதி ஒருபோதும் முயன்றது இல்லை. தன்னை உலகம் அறியட்டும் என்ற எண்ணம் பாரதிக்கு இல்லை. பிறமொழி இலக்கியங்களை பாரதி தமிழுக்கு மொழி பெயர்த்ததன் பின்னணியாக உலகை தன் தமிழினம் அறியட்டும் என்ற எண்ணமே பாரதிக்கு மேலோங்கி இருந்ததை நாம் காணலாம்.

‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்’ - என்ற பாரதியின் வரிகள் இதனைக் காட்டுகின்றன. தமிழின் சிறந்த இலக்கியங்களை பாரதி பிற மொழிகளுக்கு மொழி பெயர்த்ததன் பின்னணியாக தன் இனத்தின் சிறப்பை உலகு அறியட்டும் என்ற பாரதியின் எண்ணமே உள்ளது.

‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்’ – என்ற வரிகள் இதனைக் காட்டுகின்றன.

பாரதி தன்னலம் கருதாத, மொழி நலம் கருதிய கவிஞர் என்பதை பாரதியின் இந்தப் பணிகளில் இருந்து நாம் அறியலாம். பாரதி தனது கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருந்தால் அவருக்கு நோபல் பரிசுக்கான வாய்ப்புகள் பிரகாசமாகவே இருந்தன. ஆனால் பாரதியார் தனது முன்னேற்றத்தை ஒருபோதும் கருத்தில் கொள்ளவே இல்லை.

பாரதி எப்படிப்பட்ட கவிஞர் என்பதற்கு ஒரு எளிய உதாரணத்தைக் கூற முடியும், பாரதியால் ஈர்க்கப்பட்டவரும் தமிழக திரைப்பட இயக்குனர்களில் குறிப்பிடத் தகுந்தவர்களுள் ஒருவருமான பாலுமகேந்திரா அவர்கள் பாரதியார் கவிதைகளின் கையெழுத்துப் பிரதிகளை தான் பார்க்க நேர்ந்ததைப் பற்றி ஒரு விழாவில் பேசினார்.

‘பாரதியார் கவிதைகளில் அடித்தல் திருத்தல்கள் அதிகம் இல்லை, வெகுநேரத் தேடலுக்குப் பின் ஓரிடத்தில் திருத்தலைப் பார்த்தேன். நல்லதோர் வீணை செய்தே என்ற பாடலில் முதலில் ‘வல்லமை தாராயோ இந்த மாநிலம் புகழ்ந்திட வாழ்வதற்கே’ – என்று பாரதியார் எழுதினார். பின்னர் அவரே ‘புகழ்ந்திட’ என்ற வார்த்தையை அடித்து விட்டு ‘பயனுற’ என்று திருத்தி இருந்தார்’ (இந்தப் பேச்சைப் பதிவு செய்து அளித்த செய்தியாளர் மனோவுக்கு நன்றி!)

தான் எழுதியபடியே பாரதியார் வையகம் பயனுறவே வாழ்ந்தார். இதனால் அவருக்குச் சேரவேண்டிய புகழ் சேராமல் போனால் அது அவரால் பலன் பெற்ற தமிழினம் செய்த பிழையாக மட்டுமே இருக்க முடியும். பாரதியாரின் புகழை உலக அரங்கில் பரப்பாவிட்டாலும் இந்திய அளவிலாவது தமிழர்கள் பரப்பி இருக்க வேண்டும். ஆனால் இன்றைய நிலையில் நமது அண்டை மாநிலத்து மக்களுக்கேகூட பாரதியைத் தெரியவில்லை என்பதுதான் அவலத்தின் உச்சம். கடந்த 2007ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தின் கிப்னஹள்ளி கிராஸ் என்ற இடத்தில் தனியார் உணவகம் ஒன்றில் ஆண்கள் கழிப்பறைக்கு வெளியே பாரதியாரின் படம் வரையப்பட்டு இருந்தது. இதை அறிந்து பாரதியார் சங்கங்கள் கண்டனங்கள் தெரிவித்தபோது ‘இவர் யாரென்றே தெரியாது, அதனால்தான் ஆண்கள் கழிப்பிடத்தைக் காட்ட இந்தப் புகைப்படத்தை மாட்டினோம்!’ என்று உணவகத்தின் தரப்பில் சொன்னார்கள். ‘அது பொய்’ - என்று மறுக்கும் அளவுக்கு பாரதியாரை பிறர் அறிய தமிழர்களாகிய நாம் என்ன செய்தோம் என்பதே கேள்வி.

தொடரும்...

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com