பாரதியாரின் நினைவு நாள் நூற்றாண்டான இந்த ஆண்டில், அவர்பற்றிய நிறைய நினைவலைகளை நாம் பகிர்ந்துவருகிறோம். அப்படியான சூழலில், பாரதியின் அம்மா லட்சுமி அம்மாள் வாழ்ந்த கம்பீரமிக்க வீடான எட்டயபுர வீடு பற்றியும் நாம் அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டும். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த எட்டயபுரத்தில், அக்ரஹாரம் பகுதியில் பெருமாள் கோவிலுக்கு அருகே உள்ளது அந்தவீடு. ‘பாரதி பிறந்த வீடு’ என்ற பெயரில் இந்த வீடு உள்ளது.
இந்த வீடு கட்டப்பட்டு ஏறத்தாழ 288 வருடம் ஆகிறதென சொல்லப்படுகிறது. தரைத்தள புனரமைப்பு மற்றும் மின்சாரம் - தண்ணீர் தவிர, இவ்வீட்டில் வேறெந்த புனரைப்பும் மாற்றமும் செய்யப்படவில்லை. அதாவது, கிட்டத்தட்ட ஏழு தலைமுறை காலமாக இந்த வீடு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இங்கு 4 அறைகள் உள்ளன. இந்த வீடு அரசுடைமையானதால், இதை பராமரிக்க பணியாளர்கள் இங்கு இருக்கின்றனர். காலை 9.30 - 1.30 முதல் மதியம் 2.30 - 6 மணி வரை வேலை நேரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்களின் முயற்சியால் வீட்டின் தரைத்தளத்தளம் கிரானைட் மூலம் பளிச்சென வைக்கப்பட்டுள்ளது.
முதல் அறையில், பணியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
2-வது அறையில், அவர் பிறந்த இடத்தில் அவருக்கு தனி சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்தக்காலத்தில், வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் வழிமுறை இருந்த காரணத்தினால், வீட்டுக்குள்ளேயேதான் பாரதி பிறந்திருக்கிறார். அதனாலேயே அங்கேயே சிலையும் நிறுவப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்த 3-வது அறையில், பாரதியார் பயன்படுத்திய பொருட்கள், அவரின் குடும்ப மற்றும் தனிப்பட்ட புகைப்படங்கள், அவர் பற்றிய செய்தி துணுக்குகள், அவரும் அவர் குடும்பத்தினரும் உபயோகித்த பொருட்கள், பாரதியின் குடும்ப வம்சாவழி பற்றிய விவரம், அவரின் மறக்கவியலா வார்த்தைகள் போன்றவை எழுதிவைக்கப்பட்டுள்ளன.
4-வது அறை, சமையலறையாக இருந்த அறை. தற்போது அதுவும் முழுமையாக சீரமகிக்கப்பட்டு லைப்ரரி போல மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு பின், அடுத்த தெருவுடன் இணையும் வீட்டின் பின்புற கதவு உள்ளது. இடையே ஒரு கிணறும் இருக்கிறது. கோயில் கட்டடம் போல, மிகச்சிறந்த கட்டுமாணப் பணியில் அமைக்கப்பட்டிருந்திருக்கிறது இந்த வீடு. கம்பீரமான, பாரம்பரியமிக்க கலைநயத்துடன் கட்டப்பட்டிருக்கும் இந்த வீட்டுக்கு, நிச்சயம் அனைவரும் ஒருமுறையாவது செல்ல வேண்டும்!
- நெல்லை நாகராஜன்