இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி

இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
Published on

'கபாலி' பட ரஜினி போல 'திரும்பி வந்துட்டேன்னு சொல்லு' என்று புதிய செயலி மூலம் தனது வருகையை அறிவித்து இணைய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் எரிக் மிகிகோவ்ஸ்கி (Eric Migicovsky). இவரது புதிய செயலி பற்றி பார்ப்பதற்கு முன், முதலில் யார் இந்த மிகிகோவ்ஸ்கி என சுருக்கமாக அறிமுகம் செய்து கொண்டுவிடலாம். ஏனெனில், இவரது முந்தைய சாதனைக்கும் இப்போதைய உருவாக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

மிகிகோவ்ஸ்கியை, 'பெபில்' ஸ்மார்ட் வாட்சை உருவாக்கியவர் என இணைய உலகம் நினைவில் வைத்துள்ளது. இன்று, ஸ்மார்ட்போன் போல ஸ்மார்ட் வாட்சும் பிரபலமாகி, பல நிறுவனங்கள் ஸ்மார்ட் வாட்சை தயாரித்து வந்தாலும், இந்தப் பிரிவை முதலில் பிரபலமாக்கியது மிகிகோவ்ஸ்கிதான்.

2012-ல் அவரது பெபில் ஸ்மார்வாட்ச் இணைய உலகில் ஏக பரபரப்பை உண்டாக்கியது. இத்தனைக்கும் அப்போதும் பெபில் வாட்ச் அறிமுகம்கூட ஆகவில்லை. ஸ்மார்ட்போனில் இருந்து அறிவிப்புகளை கைகடிகாரத்திரையில் அணுகும் திறன் கொண்ட ஸ்மார்ட் வாட்சை உருவாக்கப்போகிறோம், ஆதரவு தாரீர் என மிகிகோவ்ஸ்கி பெபில் ஸ்மார்ட்வாட்ச் திட்டத்தை இணைய நிதி திரட்டும் மேடையான 'கிக்ஸ்டார்ட்டர்' தளத்தில் அறிவித்து நிதி கோரியிருந்தார்.

ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருந்த காலத்தில், அதனுடன் இணைக்கப்பட்ட 'ஸ்மார்ட் வாட்ச்' எனும் கருத்தாக்கம் பலரை ஈர்க்கவே, கிக்ஸ்டார்ட்டரில் இதற்கான நிதி குவிந்தது. ஒரு மில்லியன் டாலர் நிதி தேவை என வைக்கப்பட்ட வேண்டுகோள் இரண்டே மணி நேரத்தில் நிறைவேறியதோடு, தொடர்ந்து இணையவாசிகளிடம் இருந்து நிதி குவிந்தது. ஒரு கட்டத்தில் 'கிக்ஸ்டார்ட்டர்' தளத்தில் அதிக நிதி திரட்டிய திட்டம் என பெபில் மகுடம் சூட்டிக்கொண்டது.

2013-ல் 'பெபில்' ஸ்மார்ட் வாட்ச் அறிமுகமானது. அதன் பிறகு ஓராண்டு கழித்துதான் ஆப்பிளின் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகமானது. ஆனால், அதற்குள் பெபில் தனக்கான அபிமானிகளை உருவாக்கிக் கொண்டிருந்தது.

இந்தக் காலகட்டத்தில் இணையத்தில், 'கிரவுட்பண்டிங்' எனப்படும் கூட்ட நிதி பற்றி பேசப்படும்போதெல்லாம் மிகிகோவ்ஸ்கியின் 'பெபில்' பெரிதாக பேசப்பட்டது. பின்னர் 'பெபில்' நிறுவனத்தை விற்றுவிட்டு, மிகிகோவ்ஸ்கி ஸ்டார்ட் அப் பயிற்சி திட்டத்தை நடத்தும் 'ஒய் காம்பினேட்டர்' பக்கம் சென்றுவிட்டார்.

மிகிகோவ்ஸ்கி இப்போது, பீப்பர் (Beeper - https://www.beeperhq.com) செயலியை அறிமுகம் செய்து மீண்டும் கவனத்தை ஈர்த்திருக்கிறார். வாட்ஸ் அப் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அரட்டை செயலிகளை ஒரே இடத்தில் இணைக்கும் சேவையாக அமைந்திருப்பதுதான் பீப்பர் செயலியின் சிறப்பம்சம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

வாட்ஸ் அப்பை பிரைவசி சர்ச்சைக்குப் பிறகு, சிக்னல், டெலிகிராம் உள்ளிட்ட மாற்று மெசேஜிங் செயலிகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருக்கும் நிலையில், முன்னணி மெசேஜிங் செயலிகளை ஒருங்கிணைக்கும் மையமாக 'பீப்பர்' செயலி அறிமுகம் தொடர்பான செய்தி வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

இப்படி பல மெசேஜிங் செயலிகளை அணுகுவதற்கான 'சூப்பர் செயலி'யாக பீப்பர் உருவாக்கப்பட்டிருப்பது மட்டும் அல்ல, தொழில்நுட்ப நோக்கில் இது எப்படி சாத்தியமாகிறது எனும் பின்னணி தகவலும் முக்கியமானது. அதேபோல, 'பீப்பர்' போன்ற ஒருங்கிணைந்த செயலி ஏன் அவசியம் என புரிந்துகொள்வதும் அவசியமாகிறது.

இந்த இடத்தில் மீண்டு 'பெபில்' ஸ்மார்ட்வாட்சை நினைவில் கொள்ளலாம். ஏனெனில், பீப்பர் செயலி, பெபில் வாட்ச் கருத்தாக்கத்தின் நீட்சிதான் என்கிறார் மிகிகோவ்ஸ்கி.

செல்போன் யுகத்தில் கைகடிகாரங்களுக்கு தேவையில்லை என கருதப்பட்ட நிலையில், போனுடன் வாட்சை இணைப்பதன் மூலம், கைகடிகாரத்தை நவீன தேவையாக்கியது பெபில் வாட்ச். ஸ்மார்போன் அறிவிக்கைகளை கைகடிகாரத்தில் தெரிந்து கொள்ள வழி செய்தது, அதன் பயன்பாட்டு மிக்க அம்சமாக அமைந்தது.

பெபில் வாட்சை உருவாக்கியபோதே, எல்லா வகையான மெசேஜிங் செயலிகள் செய்திகளையும் ஒருங்கிணைக்க கூடிய ஒரு சேவையை உருவாக்கினால் என்ன என மிகிகோவ்ஸ்கி நினைத்திருக்கிறார். ஆனால், அது சாத்தியமாகவில்லை. ஏனெனில், ஆப்பிளின் ஐ-மெசேஜ் சேவையை ஒருங்கிணைக்க முடியவில்லை. ஐபோன் உள்ளிட்ட ஆப்பிள் நிறுவன சாதனங்கள் தவிர வேறு எந்த சாதனத்திலும் அதன் ஐ-மேசேஜ் சேவையை அணுக வழியில்லை என்பது முக்கிய தடையாக இருந்தது.

எனவே, பெபில் வாட்சில் ஐ-மெசேஜ் வசதியை இணைக்க விரும்பினாலும், அது சாத்தியமாகாமல் கைவிட்டுவிட்டார். இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் 'மேட்ரிக்ஸ்' எனும் இணைய நெறிமுறை பற்றி தெரிந்துகொண்டு அசந்து போனார்.

இந்த இடத்தில் இன்னும் கொஞ்சம் தொழில்நுட்ப வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டும். வாட்ஸ் அப் எல்லாம் வருவதற்கு முன்பே, இணையத்தில் அரட்டை வடிவில் உடனடி மெசேஜிங் சேவைகள் பிரபலமாக இருந்தன. ஏ.ஓ.எல் நிறுவனத்தின் எய்ம் மெசேஜிங், யாஹு மெசஞ்சர் என பல அரட்டை சேவைகள் பயன்பாட்டில் இருந்தன. அவற்றுக்கு லட்சக்கணக்கில் பயனாளிகளும் இருந்தனர்.

அது மட்டுமல்ல, இந்த அரட்டை சேவைகளை எல்லாம் ஒருங்கிணைக்கும் வகையில் டிரில்லியான் (Trillian) உள்ளிட்ட சேவைகளும் இருந்தன. அதாவது ஓர் அரட்டை மேடையில் இருந்து இன்னொரு அரட்டை மேடையை நாட இந்த செயலிகள் வழி செய்தன. XMPP எனப்படும் இணைய நெறிமுறை இதற்கான அடித்தளமாக அமைந்தது.

ஆனால், ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் பாராமுகத்தால் இந்த இணைய நெறிமுறை பின்னுக்குத்தள்ளப்பட்டது. அதே நேரத்தில் இணைய உடனடி சேவைகளும் மெள்ள செல்வாக்கு இழந்தன. பின்னர் ஸ்மார்ட்போன் யுகத்தில் மெசேஜிங் வசதி மூலம் வாட்ஸ் அப் விஸ்வரூபம் எடுத்தது. மேலும் பல மெசேஜிங் சேவைகளும் உருவாகின.

இன்றைய தேதிக்கு சந்தையில் பதினைந்துக்கும் மேற்பட்ட முன்னணி மெசேஜிங் செயலிகள் உள்ளன. டெலிகிராமும், சிக்னலும் வாட்ஸ் அப்புக்கு போட்டியாக கருதப்படுகின்றன என்றால், கிழக்காசியாவில் லைன் மற்றும் வைபர் செயலிகள் கொடி கட்டிப்பறக்கின்றன. இவைத் தவிர கேமர்களுக்கான மேடையாக 'டிஸ்கார்டு' கொண்டாடப்படுகிறது என்றால், அலுவலக தொடர்பிற்கான சேவையாக 'ஸ்லேக்' போற்றப்படுகிறது. கூகுள் ஹாங்கவுட், மெசஞ்சர் என இன்னும் பல செயலிகள் இருக்கின்றன.

இந்த பெருங்கூட்டத்தில் இருந்து விலகி ஆப்பிளின் ஐ-மெசேஜ் தனித்து நிற்கிறது.

இந்த செயலிகளில் ஒவ்வொன்றும் ஒரு சில சிறப்பம்சங்களை கொண்டிருக்கின்றன. பிரைவசி நோக்கில் சிக்னல் சிறந்தது என்றால், டெலிகிராம் மூட்டை மூட்டையாக கோப்புகளை அனுப்பிவைக்க ஏற்றது என கருதப்படுகிறது. இன்னொரு பக்கம் பார்த்தால், அலுவக தொடர்பில் இமெயிலுக்கு குட்பை சொல்ல வைக்கக் கூடிய சேவையாக 'ஸ்லேக்' அமைகிறது.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், இந்த செயலிகளை அனைத்தையும், அல்லது இவற்றில் பலவற்றை பயன்படுத்த விரும்பினால் சிக்கல்தானே. போனில் அவற்றை நிறுவ வேண்டும் என்பதோடு, ஒவ்வொரு செயலியாக தாவிக்கொண்டிருக்க வேண்டும்.

இந்த சிக்கலுக்கு தீர்வாகதான், முன்னணி மெசேஜ் செயலிகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் செயலியாக 'பீப்பர்' உருவாக்கப்பட்டுள்ளது. மாதம் 10 டாலர் கட்டணம் செலுத்தினால், இந்த செயலியில் இருந்து வாட்ஸ் அப் முதல் ஐமேசேஜ் வரை பல சேவைகளை அணுகலாம்.

மற்ற மேசேஜிங் சேவைகளை ஒருங்கிணைத்தது கூட பெரிய விஷயமில்லை. ஆண்ட்ராய்டு போனில் அணுகவே முடியாத ஆப்பிள் ஐ-மெசேஜை அணுகுவதுதான் இந்த ஹைலைட்டாக கருதப்படுகிறது.

இதற்கான காரணம்தான் மேலே பார்த்த 'மேட்ரிக்ஸ்' இணைய நெறிமுறை. பழைய மேசேஜிங் சேவைகளை ஒருங்கிணைப்பதற்கான கைவிடப்பட்ட இணைய நெறிமுறையின் அடிப்படை அம்சங்களோடு, நவீன மெசேஜிங் சேவைகளின் அனைத்து வசதிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் இந்த நெறிமுறை அமைந்துள்ளது.

இதன் பின்னே உள்ள தொழில்நுட்பத்தை எளிமைப்படுத்தி சொல்ல வேண்டும் எனில், மெசேஜிங் சேவைகளை இணைக்கும் பாலமாக இது செயல்படக்கூடியது. இந்த அம்சத்தை அடிப்படையாக கொண்டுதான் 'பீப்பர்' செயலி உருவாகியிருக்கிறது. இதைத்தான் மிகிகோவ்ஸ்கியும், வாட்ஸ் அப்பையும், இன்னும் பிற சேவைகளுக்குமான தொடர்பு பாலங்களை அமைத்திருப்பதாக கூறுகிறார்.

மேடிரிக்ஸ் ஓபன் சோர்ஸ் தன்மை கொண்டது என்பதால் அதே சுதந்திரம் 'பீப்பர்' செயலியிலும் இருக்கிறது. எனவே, பிரைவசி கவலைகள் இருக்காது என நம்பலாம். இந்த மேடையிலும் செய்திகள் என்கிரிப்ஷன் பாதுகாப்புக்கு உள்ளாவதாகவும் மிகிகோவ்ஸ்கி சொல்கிறார்.

இப்போதைக்கு புதிய பயனாளிகளை பதிவு செய்ய அழைக்கும் 'பீப்பர்' செயலி கட்டண சேவை என்பது மட்டும் கசப்பான அம்சமாக கருதப்படலாம். ஆனால், மேட்ரிக்ஸ் சார்ந்த விஷயங்கள் தெரிந்தால், நீங்களே கூட, இதை சொந்தமாக உருவாக்கிக் கொள்ளலாம் என்கிறார் மிகிகோவ்ஸ்கி. நிச்சயம் வாட்ஸ் அப்பால் உறுதி அளிக்க முடியாத விஷயம் இது.

* பி.கு: ஆப்பிளின் ஐமேசேஜ் சேவை ஒருங்கிணைப்பு எப்படி சாத்தியமானது என்பதை விளக்க சின்னதாக ஒரு வால், இந்த செய்தியுடன் அவசியம். 'ஜெயில் பிரேக்கிங்' எனும் தந்திரம் அடிப்படையில் அமைந்திருக்கும் அந்த தந்திரம் பின்னே வேறு ஒரு முக்கிய கருத்தாக்கமும் இருப்பதால், அதற்கு நீளமான வால் தேவை. அதை தனியே பார்க்கலாம். அப்படியே 'ஐபிக்சிட்' எனும் இணைய இயக்கம் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

- சைபர்சிம்மன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com