தொடர் சிகிச்சையில் சசிகலா... முழு விவரம் தருகிறதா இந்த மூன்று நாள் ஹெல்த் அப்டேட்ஸ்?

தொடர் சிகிச்சையில் சசிகலா... முழு விவரம் தருகிறதா இந்த மூன்று நாள் ஹெல்த் அப்டேட்ஸ்?
தொடர் சிகிச்சையில் சசிகலா... முழு விவரம் தருகிறதா இந்த மூன்று நாள் ஹெல்த் அப்டேட்ஸ்?
Published on

சசிகலாவுக்கு மூன்றாவது நாளாக தீவிர சிகிச்சை தொடர்கிறது. அவ்வப்போது உடல்நிலை குறித்த அப்டேட்ஸ் கிடைத்தாலும், முழு விவரம் கிடைக்காததால் அவரது தொண்டர்கள் கவலையில் உள்ளனர். இந்த 3 நாள்களின் சசிகலாவின் ஹெல்த் அப்டேட்ஸ் குறித்து இங்கே பார்ப்போம்...

இம்மாதம் 27-ஆம் தேதி விடுதலையாகவுள்ள சசிகலா, ஜனவரி 20 ஆம் தேதியிலிருந்து மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்கு நேற்று இரவு கொரோனா தொற்று உறுதியானது.

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த சசிகலா, இம்மாதம் 27-ம் தேதியன்று  விடுதலையாக இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு ஜனவரி 20-ம் தேதி காலையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, சிறைச்சாலை வளாகத்திலுள்ள மருத்துவர்கள் சசிகலாவின் உடல்நிலையை பரிசோதனை செய்து கண்காணித்தனர்.

இருப்பினும், கூடுதல் சிகிச்சைக்காக வெளியே இருந்து மருத்துவ குழுவினர் சென்று பரிசோதித்ததாகவும், கவலைப்படும்படியாக பாதிப்பு ஏதுமில்லை எனவும் அப்போது சிறை மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது.

பின்னர், சசிகலாவுக்கு தொடர்ந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர் பெங்களூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் அப்போது கூறப்பட்டது.

காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக சசிகலாவுக்கு மூச்சுத்திறணல் ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் ஆக்ஸிஜன் அளவு  குறைந்துள்ளது என்றும் மருத்துவமனை தரப்பில் அப்போது தகவல் வெளியானது. 20-ஆம் தேதி இரவு சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டு சசிகலாவை மருத்துவமனைக்குள் மருத்துவமனை ஊழியர்கள் அழைத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலானது.

சசிகலா உடல்நிலை தொடர்பாக 'புதிய தலைமுறை'யிடம் தகவல்களை பகிர்ந்து கொண்ட அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், ஒரு வாரமாகவே சசிகலாவுக்கு வைரஸ் காய்ச்சலுக்கு சிறையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு ஆக்சிஜன் அளவு குறைந்ததாக தமக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இதுகுறித்து சசிகலாவுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர் கூறுகையில், மூச்சுத்திணறல் உள்ளதால் ஆக்ஸிஜன் அளிக்கப்படுகிறது, ஆனால், காய்ச்சல் தற்போது இல்லை. ஆக்ஸிஜன் அளவு 79% இருந்ததால் தற்போது ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வருகிறது என 20 ஆம் தேதி இரவு தெரிவித்தார்.

சர்க்கரை நோய், தைராய்டு, இருமல், காய்ச்சலுடன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார் எனவும், சிகிச்சைக்குப்பின் அவர் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் 20 ஆம் தேதி இரவு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. மேலும் சசிகலாவுக்கு ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருந்ததால், ஆன்ட்டிபயாடிக் மற்றும் பிராண வாயு செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை டீன் மனோஜ் தெரிவித்தார்.

ஆனால், பின்னர் லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், 20-ம் தேதி நள்ளிரவில் அவரை மருத்துவர்கள், ஸ்ட்ரெச்சரில் வைத்து அவசர சிகிச்சைப் பிரிவிற்கு கொண்டு சென்றனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையறிந்த சசிகலாவின் உறவினர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் மருத்துவமனை வளாகத்தில் திரண்டு, அவரது உடல் நிலை குறித்து தெளிவுபடுத்துமாறு கோரினர். இதனிடையே, சசிகலாவுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பில்லை என 21-ஆம் தேதி காலை தகவல் வெளியானது.

இதுதொடர்பாக, சசிகலாவின் தம்பி திவாகரன், 20 ஆம் தேதி நள்ளிரவில் தொலைபேசி வாயிலாக 'புதிய தலைமுறை'-க்கு அளித்த பேட்டியில், ‘சசிகலா கடந்த ஒரு வாரகாலமாக காய்ச்சலில் இருந்துள்ளார். சிறையில் அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை. அவருக்கு 20-ம் தேதி மாலை மூச்சுத்திணறல் ஏற்பட்ட பிறகுதான், வழக்கமாக சிறை கைதிகளுக்கு சிகிச்சையளிக்க கூடிய மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

சாதாரண எக்ஸ்ரே எடுத்து பார்த்துள்ளனர். மூச்சுத் திணறல் ஏற்பட்டால் சிடி ஸ்கேன் எடுத்து பார்த்து, அதன்பின் சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால், அந்த மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதியில்லை. தனியார் மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டுமாம். இதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என்கிறார்கள். சசிகலாவிற்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு இருக்கலாம். அதற்கான சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவமனை இதுவல்ல.

வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலையாக உள்ள நிலையில், அவருக்கு சரியான சிகிச்சை அளிக்காமல் காலதாமதப்படுத்துகின்றனர். எனவே, அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. எங்களுக்கு துரோகத்திற்கு மேல் துரோகம் நடந்துவருகிறது. பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். தற்போது பணம் எது வரை பாய்ந்தது என்று தெரியவில்லை'' என தெரிவித்தார்.

21-ம் தேதி சசிகலா சிகிச்சை பெறும் பெங்களூரு சிவாஜிநகர் அரசு மருத்துவமனைக்கு வந்த டிடிவி தினகரன், "சசிகலா நலமாக உள்ளார். அச்சம் கொள்ளத் தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். உடல்நிலை சீராக உள்ளதாக சிறைத்துறை மூலம் அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சிடி ஸ்கேன் தேவையா என மருத்துவர்களே முடிவு செய்வர். சசிகலாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

இந்தச் சூழலில் சசிகலா உடல்நிலை தொடர்பாக, கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் புகாரளித்துள்ளார். சசிகலா விடுதலையாக சில நாட்களே உள்ள நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என தனது புகாரில் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

சசிகலாவுக்கு சி.டி. ஸ்கேன் பரிசோதனை செய்யவில்லை என உறவினர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். மேலும், மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் இல்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில், சி.டி. ஸ்கேன் எடுப்பதற்காகவும், மேல் சிகிச்சைக்காகவும் போரிங் அரசு மருத்துவமனையிலிருந்து, விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு  21 ஆம் தேதி மதியம் சசிகலா மாற்றப்பட்டார். அப்போது, வீல் சேரில் வெளியே அழைத்து வரப்பட்ட சசிகலா, அங்கு திரண்டிருந்த தொண்டர்களை நோக்கி கையசைத்தார்.

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சசிகலாவின் நுரையீரலில் தீவிரத் தொற்று இருப்பது சி.டி.ஸ்கேனில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து நுரையீரல் நிபுணர் பிரசன்னகுமார் தாமஸ், “தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாலே கூடுதல் கவனத்துடன் சிகிச்சை தேவைப்படுவதாக பொருள். குறியீடு 10-க்கு மேல் இருப்பதால் மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படுகிறது, ஆக்ஸிஜன் தேவைப்படும்” என்றார்.

விக்டோரியா மருத்துவமனையில் சசிகலாவுக்கு ஐசியூவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அதில், சசிகலாவுக்கு நீரிழிவு, ரத்த கொதிப்பு, தைராய்டு, காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரிழிவு பாதிப்பை குறைக்க இன்சூலின், ஸ்டிராய்ட்ஸ் போன்ற ஊசிகளும் நோய் எதிர்ப்பு சக்தியை ஊட்டும் மருந்துகளும் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், நுரையீரலில் தொற்று அதிகமாக இருப்பதால், அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டு அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தது. மேலும் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது ஆர்டி பிசிஆர் பரிசோதனையில் நேற்று இரவு தெரியவந்தது. 

சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் விக்டோரியா அரசு மருத்துவமனை கொரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவர் அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை இன்று காலை தெரிவித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com