நாளை காதலர் தினம். இன்று கலையைக் கற்றுத் தந்தவர் நினைவு தினம். நமக்கு காமிராவின் நுணுக்கங்கள் தெரியாது. ஆனால் பாலுமகேந்திரா தெரியும். சினிமா வழியே அவர் நமக்கு எதையும் சொல்லித்தரவில்லை. நம்மோடு வெளிச்சத்தை பேச வைத்துவிட்டு அவர் வெளியே நிம்மதியாக நின்று கொண்டிருந்தார். இருளை எப்படி புரிந்து கொள்வது என்று தெரிய வைத்துவிட்டு, அவர் உலகப் புகழ்பெற்ற ஓவியர் Rembrandt போல எங்கோ ஓரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். வெளிச்சம்; சினிமாவின் அடையாளம். இருட்டு அதன் ஆன்மா என காட்டியவர் பாலு. அந்த பெருங்கலைஞன் மறைந்த தினம் பிப்ரவரி 13.
பாலுவுக்கு சினிமாதான் உலகம். சின்ன வயதிலேயே அவர் அதை தீர்க்கமாக முடிவு செய்திருந்தார். 1966ல் அவர் முறையாக புனாவில் காமிராவை பிடிப்பதற்கு முன்பே அவருக்கு சினிமா பிடித்திருந்தது. 1971 ‘நெல்லு’ மலையாளப் படம் மூலம் அறிமுகமான இவர், 76 வரை ஒளிப்பதிவாளராக மட்டுமே வாழ்ந்தார். அவரது முதல் முயற்சிக்கு கேரள அரசு விருதளித்து கெளரவம் சேர்த்தது. 76ல் தனது முதல் படம் ‘கோகிலா’ மூலம் இயக்குநருக்கான கோலத்தை வரைந்தார். அப்போது பாலுவுக்கு ஒன்று புரிந்தது. இயக்குநரின் வேலை சினிமா எடுப்பதல்ல; அதை இயக்கமாக மாற்றுவது. பணம் பண்ணுவதல்ல; அதை பாடமாக மாற்றுவது. ஆகவேதான் அவரை சுற்றி எந்நேரமும் இளைஞர் கூடம் வளர்ந்து கொண்டே இருந்தது. இளம் பட்டாளம்தான் அவரது பயிற்சிப்பட்டறை. அவர் ஒரு காந்தத்தைபோல இளைஞர்களை கவர்ந்து கொண்டே இருந்தார். ஆம்! சினிமாவை ஒரு இயக்கமாக வளர்த்து எடுத்தவர் அவர். அவரைபோல ஒரு இயக்குநரை இனி இந்த சினிமா உலகம் காணப்போவதில்லை. நெருப்புப்போல மேடையில் நின்ற அவர் தனிமனித சந்திப்பில் காற்றைப்போல கனம் இல்லாமல் இருந்தார். அவர் அளவுக்கு இயற்கையை நேசித்தவன் தமிழ் சினிமாவில் அதற்கு முன்பு இல்லை. இனி பிறக்கப்போவதும் இல்லை.
பாலு ஓர் இயக்கவாதி. கூடவே இலக்கியவாதி. சினிமாவையும் இலக்கியத்தையும் இணைத்த கோடு அவர். தனிப்பேச்சில்லும் தொடர் பேச்சிலும் அவர் இலக்கியத்தை வலியுறுத்தி கொண்டே இருந்தார். அவரது இலக்கியத்தை நோட்டு புத்தகத்தில் எழுதாமல் சினிமாவில் எழுதிக் கொண்டிருந்தார். கலையை காதலித்ததைபோலவே அவரை சுற்றி எப்போதும் காதல் ரசம் ததும்பி வழிந்தது. ஷோபா, மெளனிகா என அவர் காதலுக்கு அவ்வபோது சிலர் முகம் கொடுத்தார்கள். ஒரு காலத்தில் பாலுவின் படங்கள் பாலுணர்வை பச்சையாக காட்டின என குற்றம் பேசியவர்கள் உண்டு.
அவர் சினிமாவை வெறும் ‘அசைவு’ களாக காண்பிக்க விரும்பவில்லை. அசலாக காட்டவே விரும்பினார். அவர் காட்சியில் இருக்கும் உண்மைகளை போல அவர் வாழ்வில் மிதந்த உண்மைகளையும் வெளிப்படையாக வெளிச்சம் போட்டுக் காட்டினார். ஊரே ஷோபாவின் உறவை கேள்வி கேட்டபோதும் ஷோபாவே மூடி மறைத்து பதில் பேசிக்கொண்டிருந்த போதும், பொதுச் சந்தியில் போட்டு உடைத்தார் பாலு. இறுதியாக ‘மூடிபனி’யில் திரை ஆரம்பிக்கும்போது ‘எனக்கு எல்லாமாய் இருந்த என் அன்பு மனைவி அம்மு (ஷோபா)வுக்கு ஆத்ம சமர்பணம்’ என உலகத்திற்கு உண்மையை அட்டைப்போட்டு காட்டினார் இந்தப் பாலு. ஷோபாவை பாலு மறக்காதது பெரிய விஷயமல்ல; சினிமா ரசிகர்களாலேயே என்றும் மறக்க முடியாது. அது தான் பாலுவின் வசீயம். அதைபோலதான் ‘மூன்றாம்பிறை’ சீனு, விஜியையும், ‘வீடு’சொக்கலிங்கம் தாத்தா என சினிமாவில் அவர் படிய வைத்துவிட்டு சென்ற படிமங்கள் அதிகம்.
அவரது இறுதிப் படமான ‘தலைமுறைகள்’ சந்திப்பில் பாலு வழக்கம் போல மேடையில் வந்து நின்றார். அன்று அவர் சினிமாவை பற்றிய பேச்சுகள் எதுவும் வார்த்தைகளல்ல; கடந்தக் காலத்தின் வரலாறு. ஃபிலிம் ரோல், நெகடிவ் என தன் வாழ்நாளை எல்லாம் நீள நீளமாக அளந்து பார்த்து வந்த பாலுவை டிஜிட்டல் ரொம்பவே பயமுறுத்தி இருந்தது. “நாற்பது வருஷமா நெகடிவ் கூடவே ரொமான்ஸ் செய்துகொண்டு வாழ்ந்துட்டேன். எனக்கு டிஜிட்டல் தெரியாது. அதில் நான் ஜீரோ. ஒரு நல்ல கவிதையை எது தீர்மானிக்கிறது? எழுதப்பட்ட பேனாவா? இல்லை. படைப்பாளிதான் முடிவு செய்கிறான். அதைபோலதான் இந்த டிஜிட்டல்” என்றார். இதைபோல ஒப்பீடுகளை எப்போதும் பாலு சொல்வதுவதான். ஒரு உயர்வான கேமிராவை வாங்கிவிட்டால் அது நல்ல சினிமாவை எடுத்துவிடாது. அதை படைப்பாளியால்தான் எடுக்க முடியும் என்றவர் அவர். டாய்லட் பேப்பரில் எழுதப்பட்டிருந்தாலும் அது நல்ல கவிதையாக இருக்கலாம் என ஒரு படைப்பின் ஆன்மாவை அவரால் மிகச் சரியாகப் புரிந்து கொள்ள முடிந்திருந்தது. இயற்கையை புரிந்து கொண்டவர்தான் ஒரு எந்திரத்தையும் புரிந்து கொள்ள முடியும்.
அதே விழாவில் பாலு மேலும் பேசினார். “எனக்கு ஒரு பழமையான வீடு வேண்டியிருந்தது. அந்த வீடு நசரத்பேட்டையில் இருந்தது. அந்த வீடு 250 ஆண்டுகள் பழமையான வீடு. அதை பார்த்ததும் எனக்கு புல்லரித்துப் போய்விட்டது. எனக்காகதானே 250 ஆண்டுகள் நீ காத்து கொண்டிருந்தாய்? அந்த மரியாதையோடு தலைவணங்கி உள்ளே வருகிறேன். அது ஒளிக்காகவும் காற்றுக்காகவும் கட்டிய வீடு. அதற்கு ஒரு இடையூறும் நான் பண்ண மாட்டேன் என்று சொல்லிக் கொண்டேன். எல்லோரும் அவைலபுள் லைட் என சொல்வார்கள். எனக்கு அது கடவுளின் ஒளி. அந்த ஒளியிடம் நெருங்க முடியுமா?” என்றார். இப்போது புரிகிறதா? இவர் ஏன் ஒளிக் கலைஞனாக வாழ்ந்தார் என்பது? ஆகவேதான் அவரால் ‘வீடு’ படத்தில் கனமான மழை கண்களை உறுத்தாமல் காட்ட முடிந்தது. ‘மூன்றாம் பிறை’யில் அழகான ரயிலை இயக்க முடிந்தது. காலைப் பனியை காட்டிய இவர்தான் மாலை சூரியனை சுகமாக மாற்றினார். ஒருவகையில் பாலு சினிமாவை இயற்கையாக்கி தந்தவர். இளையராஜாவின் இசையால் இன்னும் அதை இயற்கைக்கு நெருக்கமாக்கி கொடுத்தார்.
பாலு இல்லாமல் தமிழ் சினிமா வரலாறு இல்லை. இளையராஜா இல்லாமல் பாலுவின் சினிமாவே இல்லை. அதுதான் உண்மை. ‘என் இனிய பொன் நிலாவே’ என ஆரம்பிக்கும் போதே உள்மனதில் ஒரு உற்சாகம் பிறக்கிறதில்லையா? அதான் இசை. ‘கண்ணே கலைமானே’ என கண்ணதாசன் பாடவில்லை. பாலுவும் ராஜாவும்தான் நமக்கு பாடினார்கள். ‘அடிபெண்ணே..பொன்னூஞ்சல் ஆடும் இளமை’ என பாடும் போதே பாலு பக்கத்தில் தெரிகிறார். சூரியனை, பனிப்பொழுதை, புல்வெளியை, மலை மேடுகளை, உயர்ந்த மரங்களை உறுத்தல் இல்லாமல் உலகம் பார்க்க செய்தவர் பாலு. கடற்கரையைக் கூட கதாப்பத்திரமாக காட்டியவர் பாலு.
பாலுவுக்கு முதல் படத்திலேயே இளையராஜாவை சேர்த்துகொள்ள வேண்டும் என்பது காதல். ஆனால் நெருங்க முடியாத உச்சத்தில் இருந்தார் ராஜா. அந்த சூரியன் இந்த அந்திக்கு வந்துதானே மறைந்தாக வேண்டும். ஆக, அது வரை காத்திருந்தார் பாலு. அந்தக் கனவு அவரது மூன்றாவது படத்தில் நிறைவேறியது. அதை பாலுவே ஒப்புக் கொண்டிருக்கிறார். “எனக்கு ‘மூடுபனி’ மூன்றாவது படம். இளையராஜாவுக்கு அது 100வது படம். என் முதல்படத்திற்கே இளையராஜாதான் இசையை கம்போஸ் பண்ணணும் நினைச்சேன். ஆனா அவர கிட்ட நெருங்க முடியல.” என்றார்.
“என்னிடம் ‘தலைமுறைகள்’ படத்துக்கும் இளையராஜாதான் இசையா என எல்லோரும் என்ன கேட்கிறார்கள். மாற்றமாட்டீங்களானு கேட்கிறார்கள். ஏன் மாற்ற வேண்டும்? நான் அவரோட பேச வேண்டியதில்லை. அவர் என்னோட பேச வேண்டியதில்லை. பேச்சுக்கள் இல்லாமலே வேலைகள் நடக்கும். ‘என் மெளனத்தை உங்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை என்றால் என் வார்த்தைகளை உங்களால் புரிந்து கொள்ள முடியாது’ என்று முதல் சந்திப்பிலேயே ராஜாவிடம் நான் சொன்னேன். மெளனம் என்பது ஒரு பவர்ஃபுல் லாங்வேஜ்.” என்றார். வார்த்தைகளை நம்பாது காட்சியை காதலித்தவர் இப்படிதானே பேச முடியும்.
ஆகவேதான் “நான் ஒளிப்பதிவாளராக இருக்கும்போதே எனக்கு ராஜாவை தெரியும். ஜி.கே. வெங்கடேஷ் பிரபலமாக இருந்த காலத்தில் அவரது அசிஸ்டெண்ட்டாக இருந்தவர் ராஜா. அவரது இசை என் சினிமாவின் ஒரு அங்கம். அவரை விட்டுக் கொடுக்க நான் எப்போது தயாராக இல்லை” என்று அடித்தல் திருத்தல் இல்லாமல் அவரால் தெளிவாக பேச முடிந்தது.
பாலுவை நினைக்கும்போது எல்லாம் அவர் நமக்கு திரைக்கு காட்டிய பெண் முகங்கள் தோன்றி மறைவது இயற்கை. பெண்களை பெரிதும் மதித்தவர் பாலு. உரிய முறையில் அந்த உறவு உண்மையாக இருந்தது. அதற்கு அவரது ‘மறுபடியும்’ ஒரு சாட்சி. ‘என்னை நானாக காட்டிய அத்தனை பெண்களுக்கு’ என சமர்பணம் செய்திருந்தார். ஷோபாவை, மெளனிகாவை தெரிந்தவர்கள் பாலுவை தெரிந்து வைத்திருந்தார்கள். ஆனால் பாலுவை மட்டும் தெரிந்து வைத்தவர்கள் ‘அகிலா’வை மட்டுமே தெரிந்து வைத்திருந்தார்கள். பாலு உருக உருக காதலித்தது இந்தக் கண்ணம்மாவைதான். “வீட்ல இருக்கும்போது எல்லாம் விதவிதமா சமைச்சு போடுவார்” என்றார் அகிலா அம்மா. அகிலா அம்மா யாருக்கும் பேட்டி கொடுத்ததில்லை. அவர் கொடுத்த ஒரே பேட்டி எனக்கு கொடுத்தது.
பாலு மறைந்த பிறகு அவர் வீட்டுக்குப் போய் இருந்தேன். அந்த வீட்டை ப்ளே ஸ்கூலாக மாற்றி இருந்தார்கள். வீட்டுக்கு முன்பு இருந்த பூஞ்செடிகளில் பாலுவின் முகம் வாடிப்போய் தெரிந்தது. நான் அவர் வீட்டுக்குப்போனபோது வாட்டசாட்டமான பாலுவின் நண்பன் வந்து வாசலில் குரைத்தான். அவனை தாண்டி அம்மாவை பார்த்தேன். அவர் அதிகம் பேசவில்லை. மெளனிகாவை பற்றி நான் கேட்ட கேள்விக்கு மிக மெளமாக ‘ஊருக்கேத் தெரிந்ததுதானே’ என்றார் அந்த மனுஷி. அது அவரது கணவருக்கு அவர் செய்த மரியாதை.
‘தலைமுறைகள்’ பட சந்திப்பில் பாலுமகேந்திரா 45 வருடங்களாக தன்னை சகித்துக் கொண்டு வாழும் அகிலாவுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். அதற்கு அவர் சொன்ன காரணம், “நுண் உணர்வுகள் படைப்புக்கு வேண்டுமானால் உறுதுணையாக இருக்கலாம். ஆனால் அது சொந்த வாழ்க்கையை நாரடித்துவிடும். அகிலாவுக்கு ஒரு சின்ன திருப்திதான் இருக்கிறது. இன்னாருடைய மனைவி என்பதை தவிர அவளுக்கு எந்த சுகமும் கிடைத்ததில்லை” என்றார். பாலு தன்னுடன் பணி செய்த பெண்களை எப்படி உணர்வுப்பூர்வமாக ஈர்த்திருந்தாரோ அதேபோலவே அகிலாவையும் அவர் கவர்ந்திருந்தார்.
பாலுமகேந்திராவின் மறைவிற்கு வந்த இயக்குநர் பாலசந்தர், “இப்படிப்பட்ட படைப்பைதான் எடுப்பேன் என்ற கன்விஷனோடு வாழ்ந்தவர் அவர். வியபார நோக்கம் இல்லாதது அவரது தனித்தன்மை” என்றார். வியாபார சினிமா மீது அபார வெறுப்பு பாலுமகேந்திராவுக்கு இருந்தது. வியாபார சினிமாவை பார்த்து கடுப்பில் அவர் எடுத்ததுதான் ‘நீங்கள் கேட்டவை’. அந்தத் தலைப்பை பற்றி சொன்ன பாலு, ‘வியாபார சினிமா மீது இருந்த வெறுப்பைக்காட்டவே நீங்கள் கேட்டது இதுதானே, இந்தா என சொல்ல தலைப்பை ‘நீங்கள் கேட்டவை’ என்று வைத்தேன்.” என வருந்தினார். பாலுவுக்கு அவர் எடுத்ததிலேயே மிக பிடித்தப்படங்கள் சில. ‘வீடு’, ‘சந்தியாராகம்’, ‘மூன்றாம் பிறை’ மட்டும் தான் அவர் உள்ளத்தில் உட்கார்ந்திருந்தன. ‘நீங்கள் கேட்டவை’ முழுக்க முழுக்க வியபார சினிமா என வெறுத்தார் அவர். ‘பொன்மேனி உருகுதே’பாடலை அதற்கு உதாரணத்திற்கு அழைத்தார். சண்டைகள் இல்லாத சினிமா அவர் விரும்பியது. அதைபோல சந்தை சினிமாவையும் அவர் எதிர்த்தார்.
பாலுவின் இரண்டு கனவுகள் நிறைவேறாமல் போனதில் அவருக்கு வருத்தம். அவர் பிறந்து வளர்ந்த ஈழம் குறித்து அவர் ஒரு சினிமா எடுக்க விரும்பினார். அதைபோல அவருக்கு சிவாஜியை வைத்து ஒரு சினிமா பண்ண ஆசை இருந்தது. “ என் சொந்த ஊரை நான் காட்டல. என் மக்கள் பிரச்னையை நான் பேசல” என கண் கலங்கினார் அவர். “அதே போல சிவாஜி என்ற மகாகலைஞன் கூட ஒரு படம் பண்ண முடியாமல் போய்விட்டது” என்றார்.
அவர் இறுதி சடங்கில் கலந்துக் கொள்ள வந்த வைரமுத்து சொன்ன வரிகள் இப்போதும் மனதை தைக்கிறது. ஊசி நூலாக உள்ளே நுழைந்து கிழிந்துக் கிடக்கும் நம் மன கிழிசல்களை தைக்கிறது. “பாலுமகேந்திரா ஒரு பெரும் கலைஞன். அவர் பெளதீக ரீதியாக மறைந்துவிட்டர். இந்த உலகத்தை அழகாக பார்ப்பது எப்படி? மனிதர்களுக்கு சொல்லிக் கொடுத்த ஒரு மகா கலைஞன், தான் பார்ப்பதை நிறுத்திக் கொண்டார். மரணம் தூரத்தில் இருந்து பார்க்கும் போது தத்துவமாக தெரிகிறது. பக்கத்தில் வந்தால் துக்கமாக தெரிகிறது” என்று பெருங்குரல் கொடுத்து பேசினார். ‘மூன்றாம் பிறை’, ‘உன்கண்ணில் நீர்வழிந்தால்’, ‘ நீங்கள் கேட்டவை’ என பாலுவுடன் நெருங்கி வாழ்ந்தவர். பாலுவுக்கு தன் இறுதி காலம்வரை இதயத்திற்கு இதமாக இருந்தப் பாடல் வைரமுத்து எழுதியது. தமிழ் இனத்தின் தேசிய கீதமாக நீண்டு நிலைத்த பாடலும் அதுதான். ‘கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்துப்போகும் மோகங்கள். துடுப்புக் கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்’. ஆம்! தமிழ் சினிமா என்ற வங்கக்கடலில் நின்று கொண்டிருக்கும் இந்த ஓடம் இந்திய சினிமாவின் அழிவில்லாத சொத்து. அசைக்க முடியாத கலங்கரை விளக்கம்.