"எனக்குத் தெரியும்... எம்.ஜி.ஆர் மடியில் கமல் வளரவில்லை!" - பா.வளர்மதி சிறப்புப் பேட்டி

"எனக்குத் தெரியும்... எம்.ஜி.ஆர் மடியில் கமல் வளரவில்லை!" - பா.வளர்மதி சிறப்புப் பேட்டி
"எனக்குத் தெரியும்... எம்.ஜி.ஆர் மடியில் கமல் வளரவில்லை!" - பா.வளர்மதி சிறப்புப் பேட்டி
Published on

"கடந்த மாதம்வரை, எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சியை, ஆட்சியை ஊழல் ஆட்சி என்றார். தேர்தல் வருகிறது என்று தெரிந்ததும் எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாட தொடங்கிவிட்டார். அப்போ, இவரும் ஊழல் மன்னனா?" என்று கேள்வி எழுப்பும் பா.வளர்மதி, கமல்ஹாசனின் அரசியலை கடுமையாக விமர்சிக்கிறார்.

’நான் எம்.ஜி.ஆர் வாரிசு…’, ’எம்.ஜி.ஆர் மடியில் வளர்ந்தவன், நினைவிருக்கட்டும்...’ என்றெல்லாம் தனது தேர்தல் பிரசாரத்தில் எம்.ஜி.ஆரை கையில் எடுத்து அதிமுகவை அதிர வைத்துக்கொண்டிருக்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். இதுகுறித்து, அதிமுகவின் மூத்த தலைவரும், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவருமான பா.வளர்மதியிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.

’எம்.ஜி.ஆர் மடியில் வளர்ந்தவன்’ என்று கமல்ஹாசன் கூறியிருப்பதை, அதிமுகவின் மூத்த தலைவராக எப்படி பார்க்கிறீர்கள்?

"புரட்சித் தலைவர் கட்சி ஆரம்பித்த 1972 ஆம் ஆண்டிலிருந்தே நான் அவருடன் இருந்திருக்கிறேன். அவருக்கு எந்தெந்த நடிகர்கள் நெருக்கமாக இருந்தார்கள் என்பது எனக்கு தெரியாதா? எல்லா நடிகர்களும் உதவிக்காக அவரை கூட்டம் கூட்டமாக வந்து சந்திப்பார்கள். அப்படித்தான் இவரும் சந்தித்திருப்பார். புரட்சித் தலைவரின் ’ஆனந்த ஜோதி’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக கமல்ஹாசனும் நடித்துள்ளார். அப்போது, தலைவர் பெரிய நடிகர். மடியில் வைத்து தாலாட்டு பாடிக்கொண்டிருப்பாரா என்ன? அவர் மடியில் ஒன்றும் இவர் வளரவில்லை. மக்களிடம் ஓட்டு வாங்க அபாண்டமான பொய்களை  அவிழ்த்து விடுகிறார் கமல்ஹாசன்.”

’நான்தான் எம்.ஜி.ஆர் வாரிசு’ என்கிறாரே?

”அதிமுக, புரட்சித் தலைவர் போட்ட விதை. அந்த விதை வளர்ந்து ஆலமரமாகியுள்ளது. மரத்தின் விழுதுகளும், அதில் காய்க்கும் காய்களும் மரம் வைத்தவருக்குத்தான் சொந்தம். அதுபோல்தான், எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டவர்களுக்கும், அவரால் வளர்க்கப்பட்ட கட்சியினருக்கும்தான் அவரை உரிமைக்கொள்ளும் தகுதி உண்டு. இத்தனை நாள் எம்.ஜி.ஆர் பேரை உச்சரிக்காமல் எங்கே சென்றார் கமல்ஹாசன்?

கடந்த மாதம்வரை, அவரால் உருவாக்கப்பட்ட கட்சியை, ஆட்சியை ஊழல் ஆட்சி என்றார். தேர்தல் வருகிறது என்று தெரிந்ததும் எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாட தொடங்கிவிட்டார். அப்போ, இவரும் ஊழல் மன்னனா?

இவரைப் போல்தான், புதிது புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லோரும் எம்.ஜி.ஆர் பேரை சொன்னார்கள். யாராலும் எடுபட முடியவில்லை. அதிமுக மட்டும்தான் நிலையாக உள்ளது. அவரது திருப்பெயரை சொல்லிச் சொல்லி வளர்ந்துகொண்டிருக்கிறது. எனவே, அவர் எங்களுக்கு மட்டும்தான் சொந்தமானவர். நாங்கள் அவருக்கு சொந்தமானவர்கள்.

எம்.ஜி.ஆர் பெயரை உச்சரிப்பவர்கள் எல்லோராலும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது என்பதை கமல்ஹாசன் புரிந்துகொள்ள வேண்டும். எம்.ஜி.ஆர் தொண்டர்களை கமல்ஹாசன் குழப்ப நினைக்கிறார். தலைவரும் இல்லை; அம்மாவும் இல்லை. அதனால், தலைவரின் பெயரைச் சொல்லி இவர் தலைவராகி தேர்தலில் வாக்குகளை குவிக்க நினைக்கிறார். இது நடக்கவே நடக்காத காரியம்.

அதேபோல, தலைவரை மக்கள் சொத்து என்கிறார். மக்கள் சொத்து என்றால், கும்பிட்டுவிட்டு போங்கள். வணங்குங்கள். ஆனால், சொந்தம் கொண்டாடாதீர்கள். குழப்பத்தை விளைவிக்காதீர்கள். எம்.ஜி.ஆர் மக்கள் தலைவர். அவர் அதிமுகவுக்கும் மக்களுக்கு மட்டும்தான் சொந்தம்.”

ஆனால், எம்.ஜி.ஆர் படத்தை அதிமுகவின் போஸ்டர்களில் அதிகம் பார்க்க முடிவதில்லை என்ற விமர்சனங்கள் வைக்கப்படுகிறதே?

”இதுபோன்ற விமர்சனங்கள் பொய்யாக வைக்கப்படுபவை. ஏதாவதொரு இடத்தில் கவனக்குறைவால் வைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி எந்த நிகழ்ச்சியை தொடங்கினாலும், எந்த அரசு நிகழ்ச்சி, கட்சி நிகழ்ச்சி என்றாலும் புரட்சித் தலைவர், அம்மா படத்தை வணங்கிவிட்டே ஆரம்பிப்பார். அவர்களின் படங்களுக்கு மலர் தூவுவதுதான் முதல் வேலை. ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமைக்கழகம் எம்.ஜி.ஆர் வாங்கிக்கொடுத்தது. அதில்தான், நாங்கள் எல்லோரும் உலாவிக் கொண்டிருகிறோம். அவரை எப்படி மறக்க முடியும்?”

அரசியல் தனி; தொழில் என்பது தனி. கமல்ஹாசன் அதிமுகவை விமர்சிக்கிறார் என்பதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சிப்பதும் தடை செய்ய சொல்வதும் சரியானதா?

”பிக்பாஸ் நிகழ்ச்சியை முழுக்க முழுக்க  தடை செய்யவேண்டும் என்பது சரியான கருத்துதான். அருவருப்பான அந்த நிகழ்ச்சி கலாசார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.  நாடகம் என்றால் ஒரு கதை இருக்கும். ஒரு சினிமா என்றால் பாட்டு சண்டை இருக்கும். கூத்து என்றால் மேக்கப் போட்டு ஆடுவார்கள். ஆனால், பிக்பாஸில் பேஸிக் என்ன இருக்கிறது? அந்த நிகழ்ச்சியை போய் மக்கள் ஏன் பார்க்கிறார்கள் என்பது புரியவில்லை. எல்லோரும் அந்த நிகழ்ச்சியை தவிருங்கள். புரட்சித் தலைவர் சினிமாவில் ஏழையாக, நல்லவராக நடித்தார். எந்த தவறான செயலையும் செய்து நடிக்கவில்லை. தத்துவமான கருத்துக்களைச் சொல்லி சொல்லி மக்கள் மனங்களில் விழிப்புணர்வூட்டினார்.  நடிகராக இருந்து புரட்சி நடிகராக மாறி காங்கிரஸ், திமுக என கட்சிகளில் சேர்ந்தார். பின்பு அதிமுகவை உருவாக்கினார். வயதானவுடன் அரசியலுக்கு வரவில்லை. பிஸியாக நடித்துகொண்டிருக்கும்போதே படிப்படியாக அரசியலுக்கு வந்து முன்னேறினார். ஆனால், கமல்ஹாசன் என்ன அப்படியா? சினிமா வாய்ப்புகள் குறையத் தொடங்கியதும் பிக்பாஸ் வந்தார். அரசியலுக்கும் வந்துவிட்டார். அரசியல் என்பது அவர் நினைப்பதுபோல் பிக்பாஸ் களம் அல்ல. மக்கள் அவருக்கு தேர்தலில் உணர்த்துவார்கள்.”

ரஜினியில் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீர்கள்?

”யார் அரசியலுக்கு வந்தாலும் அதிமுகதான் வெற்றி பெறும். மக்கள் மத்தியில் நல்ல பெயர் எங்கள் கட்சிக்குத்தான் இருக்கிறது. இதனைக் கெடுக்க நினைக்கிறார் கமல்ஹாசன். மற்றபடி ரஜினி இன்னும் அரசியலுக்கு வரவில்லை. வந்தபிறகு பேசலாம்.”

வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com