அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆட்டோ டெபிட் (Auto Debit) விதிமுறையில் ரிசர்வ் வங்கி மாற்றம் செய்திருக்கிறது. இதன்மூலம் கூடுதல் வெரிஃபிகேஷனுக்கு பிறகே பரிமாற்றம் நிறைவடையும்.
ரூ.5000-க்கு மேல் உள்ள பரிவர்த்தனைகள் 'அடிஷனல் ஃபேக்டர் ஆஃப் ஆத்தண்டிகேஷன்' (Additional factor of authentication) முறையில் மேலும் ஒரு முறை ஒப்புதல் வழங்கிய பின்பே வாடிக்கையாளர்களின் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளில் இருந்து பரிவர்த்தனை நடக்கும்.
ஒவ்வொரு மாதமும் நடக்கும் யுட்டிலிட்டி பில்கள், ஓடிடி சேவைகள், டெலிகாம் உள்ளிட்ட பயன்படுத்தும் சேவைகளுக்கு வாடிக்கையாளர்களின் அனுமதிக்குப் பிறகே அந்தப் பரிவர்த்தனை நடக்கும். ஆனால், 5000 ரூபாய்க்கு கீழே என்னும் பட்சத்தில் கூடுதல் ஒப்புதல் இல்லாமல் நடக்கும். இதனால், டெலிகாம் மற்றும் ஓடிடி, டீடிஹெச் உள்ளிட்ட நிறுவனங்களின் வருமானத்தில் தாக்கம் ஏற்பட கூடும் எனத் தெரிகிறது.
இதுபோன்ற சேவை நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் தவறுதலாகவோ அல்லது மோசடி நிறுவனங்களில் இணைந்துவிடுவதாலோ வாடிக்கையாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அதனால், அதனை தடுக்கும் வகையில், இந்தப் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கட்டணம் செலுத்துவதற்கு 24 மணி நேரம் முன்பு எஸ்.எம்.எஸ். அல்லது மெயில் மூலம் தகவல் வரும். அதனை மேலும் அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வதன் மூலம் ஒடிபி மூலம் அந்தப் பரிவர்த்தனையை வாடிக்கையாளர் முடிக்கலாம்.
கடந்த 2019-ம் ஆண்டே இது தொடர்பாக வரைவினை ரிசர்வ் வங்கி கொண்டுவந்தது. அப்போது குறைந்தபட்ச தொகை ரூ.2000 என நிர்ணயம் செய்யப்பட்டது. அதாவது, 2000 ரூபாய்க்கு மேலே உள்ள தொகைக்கு இந்தப் புதிய முறையை பின்பற்ற வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்பிறகு இந்த தொகை ரூ.5000 என உயர்த்தப்பட்டது.
கடந்த மார்ச் 31-ம் தேதி என்பதை காலக்கெடுவாக நிர்ணயம் செய்யப்பட்டது. பல வங்கிகள் தயாராகவில்லை என்பதால் செப்டம்பர் 30 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது. தற்போது அக்டோபர் 1-ம் தேதி முதல் புதிய விதிமுறை அமலுக்கு வந்திருக்கிறது.
ஒவ்வொரு வங்கியும் இது தொடர்பாக குறுந்தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வருகின்றன.
எதற்கு பாதிப்பில்லை? - ரூ.5000-க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் என்றாலும், கடனுக்கான இஎம்.ஐ., மியூச்சுவல் பண்ட்களில் எஸ்.ஐ.பி முதலீடு, இன்ஷூரன்ஸ் பிரீமியம் உள்ளிட்ட சேவைகளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், சேவைகளுக்கு கூடுதல் விதிமுறையை ரிசர்வ் வங்கி உருவாக்கி இருக்கிறது.
வாடிக்கையாளர் என்ன செய்யலாம்? - ஒவ்வொரு மாதமும் தேவையான பில்களை சம்பந்தப்பட்ட தளத்துக்குச் சென்று செலுத்தலாம். அல்லது, தேவையான சேவைகளுக்கு மீண்டும் மறு பதிவு செய்த்கொள்ளலாம். (எவ்வளவு காலத்துக்கு பயன்படுத்துகிறோம் என்பதையும் இணைத்துக்கொள்ள முடியும்) அதனைத் தொடர்ந்து, இந்த Additional factor authentication பரிவர்த்தனை முடிவடையும். அதனைத் தொடர்ந்து ரூ.5000-க்கு கீழே இருந்தால் எந்த பிரச்னையும் இல்லை. ஒருவேளை ரூ.5000-க்கு மேல் இருந்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 24 மணி நேரம் முன்பு தகவல் வரும். வாடிக்கையாளர்களின் அனுமதிக்கு பிறகே அந்தப் பரிவர்த்தனை முடிவடையும்.