தமிழக வரலாற்றில் மறக்கமுடியாத வடுவை உருவாக்கிய கொடியங்குளம் கலவரம் நடந்த நாள்... 1995-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31. காவல்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் சுற்றிவளைத்து தாக்கியதில் கொடியங்குளத்தில் பல உயிர்கள் பலியானது, மக்களின் வாழ்வாதாரமும் சிதைந்தது.
ஆறாத ரணமான கொடியங்குளம்: கொடியங்குளம் வன்முறை நடந்து கால் நூற்றாண்டு காலம் ஆனாலும், அந்த கொடும் வன்முறைப் பற்றிய விவாதங்களை மீண்டும் உருவாக்கியது, சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த ‘கர்ணன்’ திரைப்படம். கொடியங்குளத்தில் அப்போது என்ன நடந்தது என்பதை நினைவுகூர்வோம்.
இந்தியாவில் அம்பேத்கர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு பிறகு 1990களில் பட்டியலின மக்களுக்கான அரசியல், இலக்கிய, பண்பாட்டு விழிப்புணர்வு அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதுமே பட்டியலின சமூகத்துக்கும், மற்ற சமூகத்தினருக்குமான மோதல்களும் அதிகரித்தன. அதைப்போலவே 1991-க்கு பின்னர் அங்குமிங்குமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் சாதிய மோதல்கள் தலைதூக்கின. இதன் தொடர்ச்சியாக 1995-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இரு சமூகங்களுக்கு இடையேயான மோதல் தீவிரமடைந்து, அது பல்வேறு கிராமங்களுக்கும் பரவியது. இந்தக் கலவரங்கள் பல உயிர்களையும் பலிவாங்கியது. இதன் உச்சமாக கொடியங்குளம் வன்முறை ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடந்தது.
இந்த வன்முறைப் பற்றி விவரிக்கும் பத்திரிகையாளர் பா.ஏகலைவன், "மற்ற கலவரங்களில் இருந்து கொடியங்குளம் முற்றிலும் மாறுபட்டது. இரு சமூகங்களுக்கு இடையே கலவரம் நடந்து, அதில் காவல்துறை தலையிடுவதைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால், கொடியங்குளம் வன்முறை முழுக்கவும் அங்குள்ள பட்டியல் சமூக மக்கள் மீது காவல்துறையால் நடத்தப்பட்டது. கொடியங்குளம் மக்கள் அப்போதே வெளிநாடுகளில் பணியாற்றி செழிப்புடன், வசதியுடன், கல்வி அறிவுடன் இருந்தனர். இதனால் மற்ற கிராமங்களில் உள்ள பட்டியல் சமூக மக்களுக்கு அனைத்து வகைகளிலும் பல்வேறு உதவிகளையும் அவர்கள் செய்துவந்தனர். இதனால் கொடியங்குளம் கிராமத்தின் மீது சுற்றியுள்ள அனைத்து ஊர்களுக்கும், காவல்துறைக்கும் ஒரு விரோதப்போக்கு உருவானது.
அந்தக் காலத்திலேயே சிங்கப்பூர், துபாயிலிருந்து டிவி, விசிஆர் போன்ற பொருட்கள் எல்லாம் அந்த ஊர் வீடுகளில் இருக்கும். அந்தளவுக்கு வசதி வாய்ப்புடன் இருந்தனர். இது மற்ற கிராமங்களை மட்டுமின்றி, அரசு இயந்திரத்தின் கண்களையும் உறுத்தியது. இதனால்தான் அப்போது அம்மாவட்டத்தில் நடந்த சாதிய மோதல் கலவரங்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் நேரடியாக கொடியங்குளத்துக்கு சென்று, குற்றவாளிகள் அவ்வூரில் பதுங்கியிருப்பதாகக் கூறி ஒவ்வொரு வீட்டையும் துருவித்துருவி சோதனை நடத்தி கிராமத்தையே சுற்றி வளைத்து, துப்பாக்கிச்சூடு நடத்தி, மக்களை வெளியேற விடாமல் அடைத்து வீட்டிலிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர். மக்கள் குடிக்கும் கிணற்றில் பெட்ரோல், பூச்சிக்கொல்லியை கலந்தனர், உணவு தானியங்களை எடுத்து வீசி வாழ்வாதாரத்தை அழித்தனர்.
காவல்துறை மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் இருந்த சாதிய மனோபாவம்தான் இத்தகைய கொடூர வன்முறைக்கு காரணம் என்று அதன்பின்பு நடந்த பல்வேறு விசாரணைகளும் அம்பலப்படுத்தின. 1991-இல் ஜெயலலிதா ஆட்சியின்போது ஒரு சமூகத்தினரின் ஆதிக்கம் மேலோங்கியிருந்ததால் இதுபோன்ற வன்முறைகளுக்கு அது வித்திட்டது.
அதன்பின்னர் முன்னாள் ஐஏஎஸ் கருப்பன் மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட சிலர் நீதிமன்ற உத்தரவுடன் அந்த கிராமத்தை பார்வையிட சென்றதையே அனுமதிக்காத கொடுமையும் நடந்தது. தகவல் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் ஒருவேளை சாப்பாட்டுக்கும், ஒரு வாய் தண்ணீருக்கும் கூட நீதிமன்றத்தின் உத்தரவை வாங்கவேண்டிய சூழல் அப்போது நிலவியது பெரும் கொடூரம்.
இந்தக் கொடியங்குளம் வன்முறைக்கு பின்னர்தான் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஒரு சமூக ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி, அனைவருக்குமான ஆட்சி என்பது போன்ற சூழலினை உருவாக்க முயன்றார். இந்தக் கொடுமைக்கு எதிராக அப்போது நீதி கேட்டு சென்னையில் நடந்த போராட்டத்தில் திரிசூலத்தை சேர்ந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டார்” என தெரிவித்தார்.
தமிழகம் மறக்காத காவல்துறை வன்முறைகள்:
தமிழகத்தில் முதுகுளத்தூர் கலவரம் முதல் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வரையிலான காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு பட்டியல் நீளமானது. அவற்றை விவரிக்கிறார் பத்திரிகையாளர் ஏகலைவன்...