ஜூன் 2020ல் இந்தியா சீனா இடையே லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலின்போது, குறைந்தது 38 சீன வீரர்கள் ஆற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று ஆஸ்திரேலிய செய்தித்தாளின் விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது.
ஜூன் 15, 2020 அன்று, கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இருபது இந்திய வீரர்களும், குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான சீனப் படையினரும் கொல்லப்பட்டனர் எனத் தகவல் வெளியானது. உறைபனி மற்றும் இருள் சூழ்ந்த இரவு நேரத்தில் நடந்த இந்த திடீர் மோதலானது இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பதட்டத்தை அதிகரித்தது.
இந்த மோதலில் உயிரிழப்பு குறித்து சீனா தரப்பில் தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த சூழலில் பிப்ரவரி 2021-இல், பெய்ஜிங் மோதலில் இறந்த நான்கு வீரர்களுக்கு பதக்கங்களை சீன அரசு அறிவித்தது. இந்த சம்பவத்தின் மூலம் சீனா உயிரிழப்புகளை முதல் முறையாக ஏற்றுக்கொண்டு வெளிப்படுத்தியது. ஆனால் , அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை விட சீனாவின் இழப்புகள் மிக அதிகம் என்று மீண்டும் மீண்டும் ஊகிக்கப்பட்டு வருகிறது.
இப்போது வெளியாகியுள்ள ஆஸ்திரேலிய செய்தித்தாள் 'தி கிளாக்ஸனின்' புலனாய்வு அறிக்கையில், ஜூன் 15-16 ஆம் தேதி நடந்த மோதலில் 38 சீன வீரர்கள் கல்வான் ஆற்றைக் கடக்க முயன்றபோது நீரில் மூழ்கி இறந்ததாகக் கூறப்பட்டுள்ளது. பெயரிடப்படாத சமூக ஊடக ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய இந்த ஆய்வில், சீன பதிவர்கள், மோதல் நடந்த நிலப்பகுதியைச் சார்ந்த சீனக் குடிமக்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் மற்றும் சீன அதிகாரிகளால் நீக்கப்பட்ட ஊடக அறிக்கைகள் ஆகியவற்றின் மூலமாக இந்த தகவல்கள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதலின் போது என்ன நடந்தது?
ஆஸ்திரேலிய செய்தித்தாள் அறிக்கையின்படி, சீன ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக இந்திய துருப்புக்கள் ஜூன் 15ஆம் தேதி இரவு கல்வான் பள்ளத்தாக்கில் சர்ச்சைக்குரிய பகுதிக்கு சென்றன. சீனாவின் கேணல் குய் ஃபபாவோ மற்றும் 150 சீன வீரர்கள் அவர்களைச் சந்தித்தனர், அவர்கள் இந்திய துருப்புக்களுடன் பிரச்னையைப் பற்றி விவாதிப்பதற்குப் பதிலாக ஒரு போர் சூழலை உருவாக்கினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கேணல் ஃபாபாவோ தாக்குதலை தொடங்கிய தருணத்தில், அவர் உடனடியாக இந்திய இராணுவத் துருப்புக்களால் முற்றுகையிடப்பட்டார். அவரை மீட்பதற்காக, சீனா எல்லை பாதுகாப்பு பட்டாலியன் கமாண்டர் சென் ஹாங்ஜுன் மற்றும் சிப்பாய் சென் சியாங்ரான் ஆகியோர் இரும்புக் குழாய்கள், குச்சிகள் மற்றும் கற்களைப் பயன்படுத்தி இந்திய துருப்புக்களுடன் சண்டையைத் தொடங்கினர். இந்த சூழலில் 3 சீன வீரர்கள் உயிரிழந்ததால், அவர்கள் அப்பகுதியிலிருந்து பின்வாங்க முடிவு செய்தனர்.
திடீரென வெடித்த மோதலால் சீன வீரர்களுக்கு வாட்டர் பேண்ட் அணியக்கூட நேரம் இல்லை. பின்வாங்கி செல்வதற்காக இருட்டில் ஆற்றின் பனிக்கட்டி நீரை கடக்க முடிவு செய்தனர். இந்த சூழலில் நதியின் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால் 38 சீன வீரர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து நடந்த சண்டையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் " என அந்த அறிக்கை கூறுகிறது.
மேலும் அந்த ஆஸ்திரேலிய செய்தித்தாள் அறிக்கையில், "உண்மையில் என்ன நடந்தது, எது மோதலுக்கு வழிவகுத்தது என்பது பற்றிய பல உண்மைகள் பெய்ஜிங்கால் மறைக்கப்பட்டுள்ளன. உலகிற்கு சீனா சொன்னது பெரும்பாலும் இட்டுக்கட்டப்பட்ட கதைகள்" என்று அது கூறுகிறது. இறுதியாக, மே மாதம் கல்வான் ஆற்றின் குறுக்கே இந்திய வீரர்கள் தற்காலிக பாலம் கட்டியதால் ஜூன் 15ஆம் தேதி மோதல் வெடித்தது என்றும் அறிக்கை கூறுகிறது.