மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ள நிலையில், விவசாயிகள் நடத்திய போராட்டங்களைப்போல குடியுரிமை திருத்தச் சட்டத்தை முன்வைத்து போராட்டம் நடத்தப்போவதாக அசாம் மாநில அமைப்புகள் அறிவித்துள்ளது பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு நெருக்குதலை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் ஓராண்டு காலமாக கடுமையாக போராடிவந்த சூழலில், இச்சட்டங்களை திரும்பப்பெறுவதாக பிரதமர் மோடி சில தினங்கள் முன் அறிவித்தார். இதற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் தெரிவித்துவிட்டது. இந்த ரத்து வரவேற்பை தாண்டி பல்வேறு விவாதங்களை எழுப்பியிருக்கிறது. அதேநேரம், வேளாண் சட்ட விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கியதை அடுத்து, குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் ரத்து செய்யக்கோரி வலுவான போராட்டங்களை முன்னெடுக்க அசாம் அமைப்புகள் முடிவெடுத்துள்ளன.
அசாம் மாணவர் சங்கம் (AASU) போன்ற மாணவர்கள் அமைப்பு முதல் அசாம் ஜாதிய பரிஷத் (AJP), ரைஜோர் தளம் போன்ற முக்கிய அரசியல் கட்சிகள் வரை குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை உயிர்ப்பித்து வலுவான போராட்டமாக ஒருங்கிணைக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது இந்த அமைப்புகள்தான் எதிர்ப்பு இயக்கமாக அசாமில் முன்னணியில் செயல்பட்டன.
குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது பாகிஸ்தான், ஆப்கான், வங்கதேச முஸ்லிம்கள் தவிர்த்து மற்றவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை அளிக்க இது வழி ஏற்படுத்தி தருகிறது. இந்தச் சட்டத்தால் 1971 வாக்கில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் மற்றும் வங்கதேச விடுதலைப் போரின்போது அசாம் மாநிலத்தில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஏற்கெனவே இப்படி குடியேறியவர்களால் தங்களது வேலைவாய்ப்பு, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட உரிமைகள் பாதிக்கப்படுவதாக கூறி அசாமை பூர்விகமாக கொண்டவர்கள் இந்தச் சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்துவந்த நிலையில், போராட்டத்தை தற்போது வலுவாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளன.
அசாம் மாணவர் சங்கத்தின் தலைமை ஆலோசகர் சமுஜ்ஜல் பட்டாச்சார்யா என்பவர் மீண்டும் போராட்டத்தை தொடங்குவது குறித்து கூறும்போது, ``வேளாண் சட்டங்களை மோடி அரசு திரும்பப் பெற்றதன் மூலமாக இந்தச் சட்டத்தால் விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பது அம்பலமாகிறது. மேலும், விவசாயிகள் போராட்டம் காரணமாகவே சட்டங்களை திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது என்பதும் தெளிவாகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யும் வரை இதேபோன்றொரு போராட்டத்தை நடத்த வேண்டும் என்பதில் வடகிழக்கு மாநில மக்கள் உறுதியாக உள்ளனர். அதற்கேற்ப இதை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பதற்கான திட்டங்கள் முடிவு செய்யப்படும்" என்று விவரித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் டிசம்பர் 10 முதல் இரண்டு ஆண்டுகள் முடிவடைய போகிறது. இதனை முன்னிட்டு டிசம்பர் 10 முதல் டிசம்பர் 12 வரை போராட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்த குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு அமைப்புகளின் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டங்களால் உருவான அசாம் ஜாதிய பரிஷத் அமைப்பின் தலைவர் லுரின்ஜோதி கோகோய், ``டிசம்பர் 10 முதல் குடியுரிமை திருத்தச் சட்ட அமலாக்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம். டிசம்பர் 10 தியாகிகள் தினம் என்பதால் அன்றைய நாளை தேர்ந்தெடுத்துள்ளோம்.
இந்த மாதிரியான சட்டங்களை எதிர்ப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். குடியுரிமை திருத்தச் சட்டம் மாநிலத்தில் திணிக்கப்பட்ட பிறகு, அதன் விளைவுகளை நாங்கள் கண்கூடாக பார்த்து வருகிறோம் என்பதால்தான் இதுபோன்ற வகுப்புவாத நடவடிக்கைக்கு நாங்கள் எதிரானவர்கள். ஏற்கெனவே, வெளிநாட்டினரின் வருகையால் அசாமின் மக்கள்தொகை நிலை மாறிவிட்டது. இனியும் இதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்று போராட்டத்தை உறுதிபட அறிவித்துள்ளார்.
கிரிஷக் முக்தி சங்க்ராம் சமிதி (கேஎம்எஸ்எஸ்), கம்யூனிஸ்ட் கட்சிகள், லிபரல் டெமாக்ரடிக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் ஓரணியில் திரண்டு போராட்டங்களை, பேரணிகளை இந்த நாட்களில் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். ஆனால், இவர்களின் போராட்டங்கள் எந்த அளவுக்கு வெற்றிகரமாக இருக்கும் என்று தெரியவில்லை. காரணம், எதிர்ப்புப் போராட்டங்களில் முக்கியமான அமைப்புகள் சில காலமாக சுறுசுறுப்புகள் இல்லாமல் இயங்கி வருகின்றன.
குறிப்பாக, ரைஜோர் தளத்தின் தலைவர் அகில் கோகாய் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கடுமையாக போராடி தீவிரவாத தடுப்பு பிரிவின் கீழ் சிறைக்குள் அடைக்கப்பட்டார். அவரின் கைதை அடுத்து அந்த இயக்கத்தின் போராட்டங்கள் சுணக்கம் கண்டன. தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்ட பிறகு போராட்டங்கள் சுத்தமாக வலுவிழந்தன. இதனால் மீண்டும் இதுபோன்ற அமைப்புகள் மீது பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுமா என்பது தெரியவில்லை.
ஆனால், ``எங்கள் இயக்கம் கொஞ்சம் பலவீனமடைந்துள்ளதும், மறுசீரமைப்பு தேவை என்பதும் உண்மைதான். ஆனால், பொதுமக்கள் மத்தியில் இந்தச் சட்டத்துக்கு எதிராக வலுவான உணர்வு உள்ளது. அது எங்களின் போராட்டத்தில் தெரியவரும்" என்கிறார் அந்த அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர். அவர் சொல்வது போல் பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்புணர்வு இருக்கும் பட்சத்தில் மத்திய அரசு மீண்டும் ஒரு பெரிய போராட்டத்தை சந்திக்க வாய்ப்பிருக்கிறது.
- மலையரசு
தகவல் உறுதுணை: The Print
> தொடர்புடைய செய்தி: மூன்று வேளாண் சட்டங்கள் ரத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்