அசோகமித்திரனின் எழுத்து பாணி வித்தியாசமானது. எந்த விதமான ஆரவாரமும் இல்லாமல் எதார்த்தம் நழுவாமல் இருக்கும் அவருடைய எழுத்து.
அமைதி தவழும் அவரது எழுத்துக்கள் படிப்பவர்களின் மனதில் ஆழமாய் ஊடுறுவும் வல்லமை பெற்றவை. சிரிப்போ அழுகையோ அதிர்ச்சியோ எல்லாவற்றையும் உள்ளது உள்ளபடி மிகை இல்லாமல் கொந்தளிப்பில்லாமல் பதிவு செய்வார் அசோகமித்ரன். ஆனால் படிப்பவர்களுக்கு அத்தனை உணர்வுகளாலும் பிடிக்கப்பட்டு கொந்தளிக்கும் மாயம் நிகழும்.
தியாகராஜன் என்ற பெயர் கொண்ட அசோகமித்திரன் 1931ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் பிறந்தார். 21 வயதில் சென்னையில் குடியேறினார். ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத்துறையில் பணியாற்றினார். அந்த அனுபவம் அவருடைய நிறையக் கதைகளில் வெளிப்பட்டிருக்கிறது.உதாரணமாக புகழ் பெற்ற அவரின் புலிக்கலைஞன் சிறுகதையிலும் மானசரோவர் நாவலிலும் அவரது ஸ்டுடியோ அனுபவம் வெளிப்பட்டிருக்கும். அவரது ஸ்டுடியோ அனுபவம் முழுவதையும் தொகுத்து மை இயர்ஸ் வித் பாஸ் என்ற பெயரில் ஆங்கில நூலாக எழுதியுள்ளார் அசோகமித்திரன். தண்ணீர், கரைந்த நிழல்கள், 18வது அட்சக்கோடு போன்ற அவரது நாவல்கள் மறக்கமுடியாதவை.
அசோகமித்திரனின் படைப்புகள் ஆங்கிலம் மற்றும் பல ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவரது அப்பாவின் சினேகிதர் சிறுகதைத் தொகுப்பு 1996ல் சாகித்திய விருதைப் பெற்றது. கணையாழி என்ற இலக்கியப் பத்திரிக்கையில் ஏறக்குறைய 25 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார் அசோகமித்திரன். தமிழக அரசின் இலக்கியச் சிந்தனை விருது, எம்.ஜிஆர். விருது, என்டிஆர் தேசிய இலக்கிய விருது, க.நா.சு விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றவர் அசோகமித்ரன். தமிழ் இலக்கிய உலகில் அசோகமித்திரன் விட்டுச் சென்ற வெற்றிடத்தை இன்னொருவர் நிரப்புவது கடினம்.