நம்மில் நிறையப்பேருக்கு பால் என்றால் மிகவும் பிடிக்கும். சிலர் பால் பொருட்களை விரும்பி சாப்பிடுவர். சிலர் சீஸ், பட்டர், மில்க்ஷேக் மற்றும் யோகர்ட் போன்றவற்றை விரும்பி சாப்பிடுவர். பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம், ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் வைட்டமின் பி12 என பல சத்துகள் இருக்கிறது. பால் என்றாலே பெரும்பாலும் நன்மை பயக்கக்கூடியது. இருப்பினும், பால் பொருட்கள் இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் என்கிறது ஓர் புதிய ஆய்வு.
பால் vs பால் பொருட்கள் - எதில் ஆபத்து?
ஐரோப்பிய ஜர்னல் ஆஃப் ப்ரிவென்டிவ் கார்டியாலஜி, 61.8 வயதிற்குட்பட்ட 1929 நோயாளிகளை ஆராய்ச்சிக்கு உட்படுத்தியது. அவர்களின் வாழ்க்கைமுறை, பயன்படுத்தும் மருந்துகள், டயட் மற்றும் பால் பொருட்கள் உட்கொள்ளுதல் போன்றவற்றை ஆராய்ச்சிக்கு உட்படுத்தியது. அதில் அதிக பால் பொருட்கள் பயன்படுத்தியவர்களுக்கு பக்கவாதம் மற்றும் இறப்பு போன்ற பிரச்னைகளின் அபாயம் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக வெண்ணெய் அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு கடுமையான மாரடைப்பு (acute myocardial infarction - AMI) வருவதற்காக வாய்ப்புகள் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் சீஸ் விரும்பிகள் இதிலிருந்து பாதுகாப்பாக உள்ளனர் என்பது சற்று ஆறுதலான தகவல்.
இந்த ஆய்வை நடத்திய நிபுணர்களுக்கே ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர். பால் பொருட்களில் செறிந்துள்ள அதிகப்படியாக கொழுப்புகள்தான் இதய பிரச்னைக்கு வழிவகுக்கின்றன என்றும் தெரிவித்துள்ளனர். அதிகளவில் பால் பொருட்களை உட்கொள்ளும்போது அது பயக்கும் நன்மைகளைவிட தீமைகள்தான் அதிகமாக இருக்கும் எனவும் எச்சரிக்கின்றனர். குறிப்பாக இதய நோயாளிகளுக்கு ஆரோக்கியத்தை மேலும் சீர்குலைத்து, தமனிகளில் அடைப்பை அதிகரிக்கும் என்கின்றனர்.
ஆரோக்கியமற்றவையா இவை?
வெண்ணெய் மற்றும் சீஸ் இரண்டுமே பெரும்பாலும் பிரச்னைக்குரியவைகளாக கூறப்பட்டாலும், பால் மற்றும் தயிர் இரண்டும் பெரும்பாலும் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியவை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். வெண்ணெய் மற்றும் சீஸ் இரண்டுமே கொழுப்பு நிறைந்தவை மற்றும் செறிவூட்டபப்ட்டவை. இவற்றிலுள்ள டிரான்ஸ் கொழுப்பானது இவற்றை மேலும் ஆரோக்கியமற்றதாக மாற்றுகிறது. ஏனெனில் 100 கிராம் வெண்ணெயில், 3 கிராம் ட்ரான்ஸ் கொழுப்பும், 215மி.கி கொழுப்பும், 51 மி.கி செறிவூட்டப்பட்ட கொழுப்புகளும் அடங்கியிருக்கிறது.
அதனால்தான் ஒவ்வொருவரும் அவர்களுடைய உடலின் தன்மைக்கு ஏற்றவாறு பால் பொருட்களை தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும்; குறிப்பாக இதய பிரச்னை உள்ளவர்கள், பால் பொருட்களை சாப்பிடும்போது மிகுந்த கவனம் செலுத்தவேண்டும் என அறிவுறுத்துகின்றனர். பால் மற்றும் பால் பொருட்கள் ஆரோக்கியமற்ற உணவு லிஸ்ட்டில் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் நாம் எந்த அளவிற்கு அவற்றை உட்கொள்கிறோம் என்பதில்தான் கவனம் செலுத்தவேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.