தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மீண்டும் தமிழ்நாட்டில் தன் பணியை தொடர உள்ளார். அதற்கான பணி உத்தரவை இந்திய தொல்லியல் துறை அவரிடம் கொடுத்துள்ளது. அடுத்த பத்து நாட்களில் அவர் கோவா சரகத்திலிருந்து சென்னை சரகத்தில் பணியாற்ற உள்ளார்.
தமிழ் சமூக படைப்பாளிகள், தமிழ் மொழி ஆர்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் அவரது வரவை கொண்டாடி வருகின்றனர்.
யார் இவர்?
அமர்நாத் ராமகிருஷ்ணன் தமிழ்நாட்டில் உள்ள கோவில் நகரமான பழனியில் பிறந்தவர். இந்திய தொல்லியல் துறையில் தொல்லியல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் பெங்களூரு சரகத்தில் கண்காணிப்பாளராக இருந்த போது 2014 - 15 வாக்கில் வைகை நதி கரையோர பண்டைய தமிழ் குடி மக்களின் நாகரிகத்தை ஆவண செய்யும் நோக்கில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். அந்த தேடலின் பலனாக தமிழரின் பழம்பெரும் நாகரிக அடையாளமாக போற்றப்படும் கீழடி அகழாய்வு பணிகளை மேற்கொண்டார். அவரது ஆய்வு மூலமாக உலகிற்கு கீழடி குறித்து தெரியவந்தது.
தொடர்ந்து ஆய்வு செய்ததில் அந்த பகுதியில் இருந்து தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டன. ‘தோண்ட.. தோண்ட.. பொன்’ என சொல்வதை போல கீழடி பகுதி முழுவதும் தமிழர்களின் நாகரிகம் மண்ணுக்குள் தன்னகத்தே புதைத்து வைத்துள்ளது. அங்கு அகழாய்வு பணிகள் தொடர்ந்து கொண்டே உள்ளன.
தற்போது ஏழாம் கட்ட அகழாய்வு பணி நடந்துக் கொண்டிருக்கிறது. இதில் கீழடியின் முதல் இரண்டு அகழாய்வு பணிகளை மேற்கொண்டவர் தான் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன்.
“அரிக்கமேடு மற்றும் காவிரிப்பூம்பட்டிணம் அகழாய்வு பணிகளை காட்டிலும் கீழடி மிகவும் தொன்மையானது. அதனால் இந்த பகுதியில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரையிலாவது அகழாய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என சொல்லி இருந்தார் அமர்நாத் ராமகிருஷ்ணன்.
கீழடி சர்வதேச அளவில் பேசு பொருளானது. அதை அடையாளம் கண்ட அமர்நாத் ராமகிருஷ்ணனை, மத்திய அரசு வேறு மாநிலத்திற்கு 2017-இல் பணியட மாற்றம் செய்தது. அதோடு மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்வதற்கான உத்தரவை கொடுக்கவும் தாமதம் செய்தது. அந்த பணியை தமிழ்நாடு அரசு முன்னெடுத்து செய்ய முனைந்ததும் குறிப்பிடத்தக்கது.
இது கீழடி நாகரிகத்தை உலகறிய செய்து விடக்கூடாது என மேற்கொள்ளப்பட்ட சதி வேலை என தமிழ் ஆர்வலர்கள் அப்போது கண்டனக் குரலை எழுப்பினர். தொடர்ந்து அமர்நாத்தை தமிழ்நாட்டில் பணி மாற்றம் செய்திடவும் வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக சட்டப் போராட்டமும் நடைபெற்றது.
இந்த சூழலில் தான் மீண்டும் அவர் தமிழ்நாட்டில் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த முறை சென்னை சரக ஆலய ஆய்வுப் பிரிவுக்கு கண்காணிப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை நாடாளுமன்ற எம்பி சு.வெங்கடேசன் தமது ட்விட்டர் பக்கத்தில், “மிக நீண்ட போராட்டத்துக்குப் பின் மீண்டும் தமிழகம் திரும்புகிறார் அமர்நாத் இராமகிருஷ்ணன். தென்னிந்திய கோயில் ஆய்வுத்துறையின் தொல்லியல் கண்காணிப்பளராக நியமிக்கப்பட்டுள்ள அவருக்கு எனது வாழ்த்துகள்” என தெரிவித்து இருந்தார்.
“அமர்நாத் ராமகிருஷ்ணன் தமிழ்நாட்டிற்கு திரும்பியுள்ளது நல்ல செய்தி. கீழடியில் கண்டெடுக்கப்பட்டு வரும் முதுமக்களின் அடையாளங்களை துரிதமாக ஆவணப்படுத்த அவர் முயற்சிகளை முன்னெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அவருக்கு அந்த பகுதி குறித்து உள்ள புரிதல் அடுத்தக்கட்ட அகழாய்வு பணிகளுக்கு உதவும்” என ஊடகம் ஒன்றுக்கு விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தன்னுடைய முதல் நாடாளுமன்ற உரையின் போது அமர்நாத் ராமகிருஷ்ணன் மீண்டும் தமிழகத்திற்கு வந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து இருந்தார். அவர் பேசிய வீடியோவும் சமூக வலைதளங்களில் நேற்று வைரல் ஆனது.
கீழடி வைகை நதிக்கரையோர நாகரிகம் என்றால் தாமிரபரணி நதிக்கரையோர நாகரிகம் சார்ந்த அகழாய்வு பணிகளும் தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்று வருகின்றன. இத்தகைய சூழலில் அமர்நாத் தமிழ்நாடு திரும்பி இருப்பது சாதகம் தான் என்ற ஆதரவு குரலும் அவருக்கு ஓங்கி வருகின்றன.