மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர் பக்கம் முடக்கத்தின் பின்னணியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலின் பதிப்புரிமை விவகாரம் இருப்பது தெரியவந்துள்ளது.
மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர் பக்கம் வெள்ளிக்கிழமை ஒரு மணிநேரம் திடீரென முடக்கப்பட்டது. புதிய தொழில்நுட்ப விதியால் ஏற்கெனவே மத்திய அரசுக்கும், ட்விட்டர் நிறுவனத்துக்கும் மோதல் வலுத்துள்ள நிலையில், இந்த முடக்கம் பெரும் விவாதமாக மாறியது. எனினும், ஒரு மணி நேர முடக்கத்திற்கு பிறகு மீண்டும் வழக்கம்போல அவரது பக்கம் இயங்கியது.
ட்விட்டர் பக்கம் தொடர்பாக 'கூ' வலைதளத்தில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிடும்போது, ``நண்பர்களே, அமெரிக்காவின் டிஜிட்டல் மில்லினியம் பதிப்புரிமைச் சட்டத்தை மீறியதாக கூறி, என் ட்விட்டர் பக்கம் ஒரு மணி நேரம் முடக்கப்பட்டது. ட்விட்டர் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை தகவல் தொழில் நுட்ப விதிகளை முற்றிலும் மீறிய செயல் ஆகும். எனது கணக்கை முடக்கும் முன் முன்னறிவிப்பை செய்ய ட்விட்டர் நிர்வாகம் தவறிவிட்டது" என்று புகார் கூறியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர் பக்கம் முடக்கத்துக்கு என்ன காரணம் என்பதை அந்நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, 'காப்பிரைட் கிளைம்' எனப்படும் பதிப்புரிமை புகாரில் ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர் பக்கம் சிக்கியதால் முடக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இந்தப் பதிப்புரிமை சிக்கலுக்கு அமைச்சர் பயன்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் ஒன்றுதான் காரணமாக அமைந்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானின் புகழ்பெற்ற 'மா துஜே சலாம்' (தாய் மண்ணே வணக்கம்) பாடலை 2017-ல் பயன்படுத்தியிருக்கிறார் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.
2017-ம் ஆண்டிலேயே இந்தப் பாடலை அவர் பயன்படுத்தியிருந்தாலும், இதன் உரிமையை வைத்திருக்கும் சோனி நிறுவனம், மே 24-ம் தேதிதான் இந்தப் பாடலை ரவிசங்கர் பிரசாத் பயன்படுத்தியதை கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து, International Federation of the Phonographic நிறுவனம் மூலம் காப்பிரைட் தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்திடம் நேற்று புகார் அளித்திருக்கிறது. அந்த நிறுவனம்தான் சோனி நிறுவனத்திற்கான காப்பிரைட் கிளைம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தப் புகாரின் அடிப்படையில்தான் ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. பின்னர் வீடியோவை நீக்கிய பின்னர் மீண்டும் அவரின் கணக்கு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் 2017-ல் இந்திய ராணுவத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தப் பாடலை ட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.