சம்பாதிக்கத் தொடங்கும் அல்லது சம்பாதித்துக் கொண்டிருக்கும் அனைவருக்குமே பலவிதமான ஆசைகள், திட்டங்கள், கனவுகள் இருக்கும். வீடு வாங்க வேண்டும், கார், ஆப்பிள் போன், வீட்டுக்கு உள் அலங்காரம் செய்ய வேண்டும், 55 இன்ச் டிவி வாங்க வேண்டும், கம்யூட்டர் வாங்க வேண்டும் என நாம் செய்ய வேண்டிய, வாங்க வேண்டிய பட்டியல் என எப்போதுமே நமக்கு இருக்கும். எதனை வாங்க வேண்டும் என்பது தனிப்பட்ட நபரின் தேவை, பண வசதியை பொறுத்தது. அதில் நாம் கருத்து சொல்ல ஏதும் இல்லை. ஆனால் ஒரு செலவினை செய்வதற்கு முன்பு அது என்ன வகையான செலவு, அந்தச் செலவுக்கு முன்னுரிமை கொடுக்கலாமா என்னும் புரிதலுடன் அந்தச் செலவினை செய்யலாம்.
மதிப்பு உயரும் சொத்துகள் (Appreciating assets) மற்றும் மதிப்புக் குறையும் சொத்துகள் (Depreciating assets) என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ளும்போது எது தேவை, எதற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என்பதும் புரிந்துவிடும்.
மதிப்பு உயரும் சொத்துகள் (Appreciating assets):
நாம் செய்யும் முதலீடுகள் உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறதா அல்லது தேய்வதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்னும் புரிதல் அவசியம். வீடு, பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட்கள், டெபாசிட்கள் உள்ளிட்ட முதலீடுகளை மதிப்பு உயரும் சொத்துகள் என குறிப்பிடுகிறோம். இதில் எந்த முதலீடு சிறந்தது என்பது வேறு டாபிக், அதேபோல இந்த முதலீடுகளில் குறுகிய காலத்தில் நஷ்டம் கூட கொடுக்கலாம். ஆனால் இவையெல்லாம் பொதுவாக மதிப்பு உயரும் சொத்துகள் என்றே நாம் எடுத்துக்கொள்ளலாம்.
மதிப்புக் குறையும் சொத்துகள் (Depreciating assets)
கார், இரு சக்கர வாகனங்கள், எலெக்ட்ரானிக்ஸ், (டிவி, மொபைல், லேப்டாப் உள்ளிட்டவை) ஃபர்னிச்சர் உள்ளிட்டவை மதிப்புக் குறையும் சொத்துகள். இந்தப் பொருள்களை சந்தை விலை வாங்க வேண்டி இருக்கும். ஆனால், நீங்கள் விற்க நினைத்தால் வாங்கிய விலையை விட மிக கடுமையாக விலை குறைத்த பிறகே விற்க முடியும்.
என்ன செய்யலாம்?
மதிப்புக் குறையும் பொருள்களை விற்றால் நஷ்டம் ஏற்படும் என்பதற்காக, அவற்றை வாங்காமல் இருக்க முடியுமா? - இந்த இடத்தில்தான் அந்தப் பொருள் தேவையா என்பதை ஆராய வேண்டியவது அவசியமாகிறது. வேலைக்கு சேர்ந்த சில ஆண்டுகளில் கார் வாங்கிவிட வேண்டும் என பலர் நினைக்கிறார்கள். இதில் தவறொன்றும் இல்லை. ஆனால் இதுவரை Appreciating assets சார்ந்த முதலீடு உங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதி செய்த பிறகு மதிப்புக் குறையும் சொத்துகளில் கவனம் செலுத்தலாம்.
கார், ஃபோன், லேப்டாப் போன்ற சில விஷயங்களை, சகாக்களின் அழுத்தம் (Peer pressure) காரணமாகவே நாம் வாங்குகிறோம். உங்கள் அலுவலகத்திலோ, உங்கள் நண்பனோ கார், எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களை வாங்கி இருக்க கூடும். ஆனால் அவர்கள் சொல்லாமல் விட்டது, அந்தப் பொருளை அவர்கள் அலுவலகத்தின் உதவியுடன் வாங்கினார்கள் என்பதை. கார், ஃபோன், லேப்டாப் போன்றவை நீங்கள்தான் பயன்படுத்துவீர்கள் என்றாலும், அதில் பெரும்பாலான முதலீடு அலுவலகம் சார்ந்ததாக இருக்கும். நண்பர்கள் அலுவலகத்தின் உதவியுடன் பொருள்களை வாங்கி இருப்பார்கள், ஆனால், நீங்கள் சொந்த காசில் வாங்க திட்டமிடுவீர்கள். உங்களுக்கு தேவை எனில் வாங்குவதில் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால், இதுபோன்ற சகாக்களின் அழுத்தம் காரணமாக மதிப்புக் குறையும் சொத்துகளில் கவனம் செலுத்த வேண்டாம்.
பொதுவாக அலுவலகங்கள் பணியாளர்களுக்கு கொடுக்கும் பெரும்பாலான சலுகைகள் இதுபோன்ற மதிப்புக் குறையும் சொத்துகளாகவே இருக்கும். பணியாளர்களுக்கு சலுகைகள் கொடுத்து போலவும் இருக்கும் அதேசமயத்தில் வரி செலுத்த வேண்டிய தொகையை குறைத்து காண்பித்தது மாதிரியும் இருக்கும் என்பதால் மதிப்புக் குறையும் சொத்துகளாகவே அலுவலக பரிசுகள் இருக்கும். புரிதலுக்காக கூறியிருக்கிறேன தவிர, இதில் சரி - தவறு என சொல்வதற்கு ஏதும் இல்லை.
நாம் புரிந்துகொள்ள வேண்டியது... நம் முன் இரு வாய்ப்புகள் இருக்கின்றன என வைத்துக்கொள்வோம். நீண்ட கால கடன் வாங்கி வீடு வாங்கலாம் அல்லது குறுகிய கால கடன் பெற்று கார் வாங்கலாம் என இரு வாய்ப்பு இருக்கிறது என்னும் பட்சத்தில் வீட்டுக்கு முதல் முக்கியத்துவம் கொடுப்பதே அவசியம் என்பதே நிதி ஆலோசகர்களின் கருத்து.
இ-காமர்ஸ் நிறுவனங்களின் முக்கியமான வருமானம் கொடுக்க கூடிய பிரிவு என்பது எலெக்ட்ரானிக்ஸ்தான். குறிப்பாக மொபைல்போன்கள். தற்போதை இளைஞர்கள் ஓர் ஆண்டுக்குள் ஃபோனை மாற்றுவதில் அதிக கவனத்துடன் இருக்கிறார்கள். ஃபோன் தேவை என்பதில் மறுக்க முடியாது. ஆனால், அடிக்கடி மாற்றுவதன் மூலம் இழக்கக் கூடிய தொகையை பரிசீலனை செய்வது நல்லது.
உங்கள் பணத்தை எப்படி வேண்டுமானாலும் செலவு செய்யலாம். ஆனால், அந்த செலவு பயனுள்ளதாக இருக்குமா அல்லது மதிப்பு குறையுமா என்னும் புரிதலுடன் இருந்தால், தேவையான செலவினை மட்டுமே நாம் செய்வோம்.