ஆறுமுகசாமி ஆணையத்தை எதிர்ப்பது ஏன்? - உச்ச நீதிமன்றத்திடம் காரணங்களை அடுக்கிய அப்போலோ

ஆறுமுகசாமி ஆணையத்தை எதிர்ப்பது ஏன்? - உச்ச நீதிமன்றத்திடம் காரணங்களை அடுக்கிய அப்போலோ
ஆறுமுகசாமி ஆணையத்தை எதிர்ப்பது ஏன்? - உச்ச நீதிமன்றத்திடம் காரணங்களை அடுக்கிய அப்போலோ
Published on

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்னும் என்னென்ன வாதங்களை முன்வைக்க இருக்கறார்களோ, அதனை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வந்தது. இன்றைய தினமும் வாதங்கள் தொடர்ந்த நிலையில், வாத - பிரதிவாதங்களில் முக்கியமான அம்சங்களைக் காணலாம்.

"நீதிமன்ற வரம்பு, இயற்கை நீதி, ஒரு தலைபட்சம், தகுதியின்மை ஆகிய நான்கு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டுதான் நாங்கள் விசாரணை ஆணையத்தை எதிர்க்கிறோம்" என அப்போலோ தரப்பு வழக்கறிஞர் வாதம் முன்வைத்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,
"ஆறுமுகசாமி ஆணைய விசாரணை ஆணையம் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தீர்கள். சின்ன தவறுகளைக் கூட கவனமாக கையாளுங்கள் என அறிவுரை வழங்கி இருக்கிறார்கள். அவர்கள் அதைக் கடைபிடிக்க கொஞ்சம் கால அவகாசம் வழங்க வேண்டியதுதானே" என கேள்வி எழுப்பினர்.

"மருத்துவர்களை விசாரிக்கும் ஆணையத்தில் ஒரு மருத்துவ நிபுணர் கூட இல்லை" என அப்போலோ நிர்வாகம் குற்றம்சாட்டியது. அதற்கு, "நீங்கள் ஏன் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை பெறக் கூடாது. ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி, நாம் அனைவருக்கும் அனைத்தும் தெரியாது, அப்படி இருக்க மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப் பெறுவதில் என்ன தவறு உள்ளது?" என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

ஆறுமுக சாமி ஆணையம் ஓர் உண்மை கண்டறியும் ஆணையம். அதன் வேலை உண்மைத் தகவல்களை திரட்டி வழங்குவது மட்டும்தான். இதுவரை அப்போலோவைச் சேர்ந்த 50 மருத்துவர்கள் விசாரிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்க எந்த மறுப்பும் இல்லை. உச்ச நீதிமன்றம் விரும்பினால் அதனை செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால், எய்ம்ஸ் போன்ற மருத்துவமனையில் இருந்து நாங்கள்தான் அந்த மருத்துவர்களைத் தேர்ந்தெடுப்போம். அதில் அப்போலோ தலையிடக் கூடாது" என தமிழக அரசு பதில் கூறியது.

தொடர்ந்து வாதங்களை முன்வைத்த அப்போலோ நிர்வாகம், "எங்களைப் பொறுத்தவரை, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு எவ்வாறு வந்தார் என்பது குறித்து விவாதிக்க தேவையில்லை. ஆனால், சிகிச்சை அவருக்கு எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என்பதைத்தான் பார்க்க வேண்டும். குறிப்பாக சிகிச்சை தொடர்பாக 10 ஆயிரம் பக்க விளக்கம் உள்ளது. ஆனால், அதை உரிய நிபுணர்கள் கொண்டு விசாரிக்க வேண்டும். அதை ஆணையம் செய்யவில்லை.

எனவே, ஆணையம் தொடக்கம் முதலே மருத்துவமனை நிர்வாகத்துக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது என்பது தெளிவாகிறது.
எனவே பாகுபாடுடன் செயல்படும் ஆணையம் முன்பு ஆஜராக மாட்டோம். மேலும் ஆணையமானது, ஒரு முடிவெடுத்துவிட்டு அந்த குறுகிய மனநிலையிலேயே மருத்துவமனை நிர்வாகத்தை அணுகுகிறது. எனவே, எவ்வாறு அந்த ஆணையம் நியாயமான விசாரணையை நடத்தி, நீதியை நிலை நாட்டும்?" என பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

அப்போது குறுக்கிட்ட தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், "ஆதாரமில்லாத இத்தகைய குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் முன்வைத்தால் இந்த வழக்கின் வாதங்கள் ஒருபொழுதும் நிறைவடையாது" என்றார். அப்போது, இவர்கள் எப்பொழுதுதான் முடிப்பார்கள் என திட்டவட்டமாக கூறுமாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதனை அடுத்து இதுவரை அப்போலோ நிர்வாகம் என்னென்ன வாதங்களை முன்வைத்தது, இனி என்னென்ன வாதங்களை முன்வைக்கப் போகிறது உள்ளிட்ட விஷயங்களை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டதோடு, வழக்கின் விசாரணையை நவம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com