அதிரடியான மாற்றங்கள் அடைந்திருக்கிறது அண்ணா நூற்றாண்டு நூலகம். தினமும் இரண்டாயிரம் பேர்களுக்கு மேல் வருகை தருகிறார்கள் என்கிறது வருகைப்பேடு. காலை எட்டு மணிக்குதான் நூலகம் திறக்கப்படும். ஆனால் அதிகாலை ஐந்து மணிக்கே வந்து வரிசையில் நிற்கிறார்கள் மாணவர்கள். அந்தளவுக்கு அமோக வரவேற்பு.
இதுபோக சில வாரங்களாக வார விடுமுறை நாட்களில் ‘பொன்மாலைப் பொழுது’ இலக்கிய நிகழ்ச்சி வேறு. பல எழுத்தாளர்கள் வந்து பேசுகிறார்கள். இதை தவிர அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த கருத்தரங்கம் எனக் களைக்கட்டுகிறது நூலகம். சிறப்பான மாற்றங்களை எட்டியிருக்கும் இங்கு நாமும் கொஞ்சம் எட்டிப்பார்த்தோம்.
மொத்தம் ஒன்பது மாடி. இந்த நூலகத்தில் 5லட்சத்து 60 ஆயிரத்திற்கு மேலான விதவிதமான புத்தகங்கள் இருக்கின்றன. அதில் வெறும் இலக்கிய புத்தகங்கள் மட்டுமே இல்லை. ஆக்கிடெக்ச்சர், மருத்துவம், பொறியியல், உளவியல், ஃபேஷன் டெக்னாலஜி, ஃபுட் டெக்னாலஜி, ஃபைன் ஆர்ட்ஸ், போட்டோகிராஃபி, மியூசிக், ஸ்போர்ட்ஸ், ஃபிரிண்டிங் டெக்னாலஜி, வரலாறு, சமூகவியல் என அத்தனைக்கும் தனித்தனி மாடி. இந்தப் புத்தகங்களை நீங்கள் உட்கார்ந்து படிக்கலாம். சில புத்தகங்களை ஆடியோ வடிவில் அப்படியே கேட்கலாம். ராக் இசையில் இருந்து கர்நாடிக் இசை வரை உள்ள ஆல்பங்களுக்கு என்று தனிப் பகுதி இருக்கிறது. சிடியை வாங்கி சிஸ்டத்தில் போட்டுவிட்டு மனசார உட்கார்ந்தும் கேட்கலாம். அவ்வளவுக்கும் அசத்தனால வசதி.
இவை போக இ-புத்தகங்களுக்கு என ஒரு பகுதியை திறந்திருக்கிறார்கள். காலையில் இருந்து இரவு எட்டு மணி வரை இண்டர்நெட் வசதி செய்திருக்கிறார்கள். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உட்கார்ந்து இண்டர்நெட்டில் மேயலாம். இந்தப் பகுதிக்குதான் செம டிமாண்ட். டாக்டர், இஞ்ஜினியர், சிஏ, ஐ.ஏ.எஸ், குரூப் ஒன் என படிக்கும் மாணவர்கள் வந்து குவிந்துவிடுகிறார்கள். இங்கே இருக்கும் லட்சக்கணகான புத்தகங்களை படிக்க விரும்பம் இல்லையா? வீட்டில் இருந்தே உங்களுக்கு விருப்பமான பாடப் புத்தகங்களை கொண்டு வந்து ஏசியில் உட்கார்ந்து படிக்கலாம். ஆனால் அந்தப் பகுதியில் 200 பேர்களுக்கு மட்டும்தான் அனுமதி. இடம் கிடைக்காதவர்கள் பலர் தரையில் சாய்ந்தபடி படிக்கிறார்கள். பெரியவர்களை போலவே குழந்தைகளுக்கு என்று தனிப் பகுதி. அங்கே அவர்கள் உயரத்திற்கு தக்க புத்தக செல்ஃப். ஆடிப்பாட விஸ்தாரமான இடம் என மிரட்டலாக உள்ளது நூலகம்.
குழந்தைகள் பகுதியில் குழந்தைகளுக்கு மட்டுமே அனுமதி. அவர்களை பாதுகாப்பாக வழிநடத்த ஒருவர் மட்டும் உடன் அனுமதிக்கப்படுகிறார்கள். பிள்ளைகளுக்காக சம்மர் புரோகிராம் கூட நடத்தி முடித்திருக்கிறார்கள். இனியும் பல திட்டங்கள் காத்திருக்கின்றன. “இதற்குமுன் ஆன்லைன் புத்தகங்களை வாங்கவில்லை. இப்பொழுது அதற்கும் புதியதாக ஆர்டர் போட்டிருக்கிறது தமிழக அரசு. தமிழ் நூல்கள் மட்டுமே 1லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேல் உள்ளன. இன்னும்கூட வாங்க சொல்லியிருக்கிறார்கள். மெரினாவில் இருந்த ஓலைச்சுவடிகள் நூலகத்தை இங்கேயே கொண்டு வந்துவிட்டோம். ஒரே குடையின் கீழ் எல்லாவற்றையும் ஒருகிணைப்பதே எங்கள் நோக்கம்” என்கிறார் ஒரு அதிகாரி.
குறைகள் என்ன?
* பார்க்கிங் இலவசம் என்பதால் பலர் தங்களின் வாகனங்களை கொண்டு வந்து நிறுத்திவிட்டு வெளி வேலைக்கு சென்றுவிடுகிறார்கள்.
* இரண்டாயிரம் பேர்கள் மேல் வருகை தந்தாலும் அதில் நூலகத்தை பயன்படுத்துபவர்கள் மிக சொற்பம். பலர் இந்த நூலத்தை ஏதோ ஸ்டெடி செண்டர் போல பயன்படுத்துகிறார்கள்.
நிறைகள் என்ன?
* லேப் டாப்பை எடுத்து கொண்டு போய் நாம் மணிக்கணக்காக இண்டர்நெட்டை பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கான மின்சார வசதி, இருக்கைகள் வசதி சிறப்பாக உள்ளது.
* கண்பார்வை அற்றவர்களுக்கு என்றே ப்ரைல் மொழியில் நூல்கள் உள்ளன.
* கொளுத்தும் கோடையில் சிலுசிலுக்கும் ஏசி வசதி, லிப்ட் வசதி, எக்ஸ்டேட்டர் வசதி, உள்ளேயே ஆவின் பாலகம் வசதி.
* மூன்று அரங்கங்கள் உள்ளன. அதை வாடைகைக்கு விடுகிறார்கள்.