இந்த காலத்து சிறுவர்களை விளையாட்டு என்றால் என்னவென கேட்டால், வாயில் நுழையாத பல பெயர்களை சொல்கின்றனர். அத்தனையும் கணினியிலோ மொபைலிலோ விளையாடும் விளையாட்டுகள். அப்படி INDOOR GAME விளையாடும் குழந்தைகளுக்குத்தான் இந்தத் தொகுப்பு!
நீங்கள் விளையாடும் இண்டோர் கேம் விளையாட்டுகள் எல்லாம் உங்களுக்கு முந்தைய தலைமுறையினர் உருவாக்கியது என நீங்கள் அறிவீர்கள். ஆனால் அந்த முந்தைய தலைமுறையினர் விளையாடியது என்ன தெரியுமா? எல்லாமே OUTDOOR GAMES!
பம்பரம், கண்ணாம்மூச்சி, கோலி, ஆடுபுலி ஆட்டம், எரிபந்து, தாயம், பல்லாங்குழி, பாண்டியாட்டம், கல்லா மண்ணா, இப்படி இன்னும் பல... விளையாட்டுகள். இதெல்லாம் இன்று மறைந்து போய் வருகிறது.
இதற்கு காரணம் என்னவாக இருக்கும்? வளர்ந்து வரும் கணிணியின் உபயோகம் ஒரு காரணம் என்று சொன்னாலும், மனநிலை மாற்றமும் முக்கிய காரணம்.
இக்காலத்தில் ஒவ்வொருவருக்கும் இணையத்தில் பல நண்பர்கள் உள்ளனர். ஆனால் நிஜத்தில்... யாருமே இருப்பதில்லை! பல நண்பர்கள் சந்திக்கும்போதுகூட மொபைலில்தான் மூழ்கியுள்ளனர். இதையும் தாண்டி அவர்கள் சந்தித்து நண்பர்களாக இருந்தாலும், ஒருவரை பற்றிய சரியான புரிதல் மற்றவர்களுக்கு இருப்பதில்லை.
ஆனால் சரியான நண்பர்கள்தான் நம் துக்கத்திற்கு ஸ்ட்ரெஸ்பஸ்டர். அவர்களிடம் துக்கத்தை பகிர்ந்துக்கொண்டாலே போதும், “கவலைப்படாதேடா... நாங்க இருக்கோம்” என்பார்கள். அந்த ஒரு வார்த்தை போதும், நமது மன அழுத்தம் நீங்குவதற்கு.!
இதெல்லாம் இக்கால சிறுவர்களுக்கு கிடைப்பதில்லை என்பது வருத்தமான விஷயமே. இதனால்தான் குழந்தைகள் பலர் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர். இப்படிப்பட்ட நிகழ்வு குறைவதற்கும், இல்லாமல் போவதற்கும் பள்ளிகளிலும், வீட்டிலும் OUTDOOR GAMES வகை விளையாட்டுக்கான நேரத்தை ஒதுக்கி அதை விளையாட சிறுவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
இப்படி நண்பர்கள் பலர் நெருங்கி விளையாடிய விளையாட்டுகள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்:
பச்சை குதிரை தாண்டுதல்
இதில் நண்பர்கள் பலரும் கூடி சா-பூ-த்ரீ முறையில் நண்பர் ஒருவரை குதிரையாக தேர்ந்தெடுத்து அவரை குனிய சொல்வார்கள். மற்ற நண்பர்கள் வரிசையாக வந்து குனிந்து, இருக்கின்ற நண்பனின் முதுகை தாண்டி ஓடுவர். இப்படி பல நண்பர்கள் ஒவ்வொருவராக தாண்டும் சமயம் முதலில் யார் தாண்டமுடியாமல் அவுட் ஆகிறார்களோ அவர்கள் அடுத்த குதிரையாக மாறுவர். இது உடலுக்கும் கால்களுக்கும் சிறந்த பயிற்சி.
பல்லாங்குழி
இது பெரும்பாலும் பெண்கள் விளையாடும் விளையாட்டு. அந்த காலத்தில் பெண்கள் அதிக நேரத்தை வீட்டில் செலவிடுவதால் இது பெண்களுக்கான விளையாட்டாக இருந்தது. சோழிகள், அல்லது புளியங்கொட்டைகளை சேகரித்து ஒவ்வொரு குழிகளிலும் எண்ணிக்கையின் அடிப்படையில் முத்துகளை இட்டு விளையாடுவர். இது கைக்கு நல்ல பயிற்சி மற்றும் மனக்கணக்கு பயிற்சியும்கூட.
கோலிக்குண்டு
ஒரு வட்டத்துக்குள் பல கோலிகளை இட்டு, வட்டத்துக்கு வெளியே ஒரு கோலியினால் ஒரே அடியில் மற்ற கோலிகளை அடிக்க வேண்டும். இது கவன குவிப்பை அதிகரிக்கும் விளையாட்டு.
பம்பரம்
இதுவும் கோலிகுண்டு போலத்தான். ஒரு வட்டத்திற்குள் பல பம்பரங்களை சேர்த்து வைத்து, ஒரு பம்பரத்தை வெளியிலிருந்து சுழற்றி, சுழலும் பம்பரத்தை கையில் லாவகமாக எடுத்து வட்டத்திற்குள் இருக்கும் மற்ற பம்பரத்தின் மேல் எரிய வேண்டும். இச்சமயத்தில் வட்டத்திற்குள் இருக்கும் சில பம்பரம் உடைந்து விடும். ஆகையால் பம்பரம் தேர்வு சரியானதாக இருக்கவேண்டும்.
ஆடுபுலி ஆட்டம்
பெயருக்கு ஏற்றார்போல் புலி ஆட்டை வேட்டையாடுவதுதான் விளையாட்டு. ஒருவர் 3 புலி காய்களை வைத்தும் மற்றொருவர் 15 ஆடுகளை வைத்தும் விளையாடுவர். புலி ஆட்டை வேட்டையாட விடாமல் ஆடுகள் புலியை முடக்க வேண்டும். இந்த விளையாட்டு யோசிக்கும் திறனை அதிகரிக்கும். இது பெண்களும் ஆண்களும் இணைந்து விளையாடும் விளையாட்டு.
தாயம்
பெரும்பாலும் இதை வீட்டில் இருக்கும் வயதானவர்கள் விளையாடுவார்கள். இதில் பயன்படுத்தப்படும் தாயமானது பித்தளை அல்லது இரும்பினால் செய்யப்பட்டிருக்கும். கிராமங்களில் அந்த காலத்தில் எந்தவொரு வீட்டை தாண்டி சென்றாலும் தாய ஒலி கேட்கும். இது நால்வர்வரை இணைந்து விளையாடும் விளையாட்டு. இதில் எவர் மையப்புள்ளிக்கு செல்கிறாரோ அவரே வெற்றிபெற்றவராய் கருதப்படுவார்.
பாண்டி
சிறுமிகள் தெருக்களில் விளையாடும் விளையாட்டு இது. பெட்டி போன்ற சதுரத்தை வரைந்துக்கொண்டு, ஒற்றைக்காலை நொண்டிக்கொண்டு, காலால் சில்லை நகட்டியபடி, தாண்டி விளையாடுவர். இது காலுக்கு வலு சேர்க்கும்.
கண்ணாம்மூச்சி
சிறுவர்கள் குழுக்களாக சேர்ந்து ஒருவரை தேர்ந்தெடுப்பர். தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் கண்களை மூடிக்கொள்ள மற்றவர்கள் மறைந்துக்கொள்வர், மறைந்துக்கொண்டவர்களை தேடி கண்டுபிடிக்க வேண்டும். இந்த விளையாட்டில், புத்தியை உபயோகித்து ஒருவரின் இருப்பிடத்தை தெரிந்து கொள்வது, அவரைப்பற்றிய புரிதலை நமக்கு ஏற்படுத்தும். இருப்பினும் இது மிகச்சிறிய குழந்தைகளுக்கு ஏற்றதல்ல. ஏனெனில் அவர்கள் அபாயத்தை உணராமல் ஆபத்தான இடங்களில் ஒளிந்துக்கொள்ளலாம். ஓரளவு புரிதலும், நிதானமும் கொண்டவர்கள்மட்டுமே இதை விளையாடலாம்.
இப்படி பலப்பல விளையாட்டுக்களை விளையாடி வந்த நம் குழந்தைகள், இன்று அனைத்தையும் மறந்து மொபைல், வீடியோ கேம் என்றுள்ளனர். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாவதுடன், சரியான நண்பர் துணையும் இல்லாமல் தவிக்கின்றனர். சில நேர்ம், தவறான முடிவுகளையும் எடுக்கின்றனர். பாரம்பரிய விளையாட்டுகளை மீட்பது, நம் குழந்தைகளையும் மீட்பதற்கு தீர்வாக இருக்கலாம் என்பதால், மீட்போம்!
அதுசரி, மேற்குறிப்பிட்டவற்றில் நீங்கள் விளையாடிய விளையாட்டுகள் என்னென்ன என்பதை கமெண்டிட்டால், அதை பற்றியும் தெரிந்துக்கொள்ளலாம்.!