2,000 ரூபாய் நோட்டைத் திரும்பப் பெறுவது என ரிசர்வ் வங்கி திடீரென அறிவித்திருப்பதுதான் நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. ஏற்கெனவே கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பழைய 500 மற்றும் 1,000 ரூபாய்களுக்குத் தடை விதிக்கப்பட்டபோது, மக்கள் பல்வேறு துயரங்களை அடைந்தனர்.
இருப்பினும் தற்போது அதிக மக்களிடம் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இல்லாததால், இந்த முறை அதுபோல் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை எனக் கூறப்படும் நிலையில், மீண்டும் மீண்டும் பண மதிப்பிழப்பு செய்யப்படுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொதுவாக, குறிப்பிட்ட நாணயங்களின் மதிப்பை, சட்டப்பூர்வமாக செல்லாது என அறிவிப்பதே பண மதிப்பிழப்பு ஆகும். இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியா மட்டுமல்லாது, பல்வேறு நாடுகளும் சூடுபோட்டுக் கொண்டதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்கா, கானா, நிகரகுவா, மியான்மர், சோவியத் ரஷ்யா, சைர், வடகொரியா, ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகள் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் ஏமாற்றத்தையே கண்டன. இதனால் சில நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டன. இன்னும் சில நாடுகளில் கடுமையான பொருளாதாரச் சரிவுகள் ஏற்பட்டன. இந்தக் கடுமையான பாதிப்பிறக்குப் பிறகு பல நாடுகள் அதுகுறித்து வருத்தப்பட்டதுடன், அதிலிருந்தும் விலகவும் செய்தன. இதைவைத்தேதான் இந்தப் பட்டியலில்தான் இந்தியாவும் இணைந்துள்ளது என்கின்றனர், பொருளாதார வல்லுநர்கள்.
சரியாகத் திட்டமிடப்படாதனாலேயே இத்தகைய ஏமாற்றத்தைச் சந்தித்ததாகத் தெரிவிக்கும் அவர்கள், இதில் முழுமையாக வெற்றிபெற்றது ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள்தான் என்கின்றனர்.
பணமதிப்பு நீக்கத்தைச் சரியான தொலைநோக்கோடு பயன்படுத்தி, நல்ல பலன்களைப் பெற்ற நாடு ஆஸ்திரேலியா. தனது பழைய காகித நோட்டுகளுக்குப் பதிலாக புதிய பாலிமர் நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவதற்காக 1996இல் ஆஸ்திரேலிய அரசாங்கம் பணமதிப்பிழப்பைக் கொண்டுவந்தது. இதனால் சிறிது காலத்துக்கு பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும், கள்ளப்பணம் அச்சடிக்க முடியாத, எளிதில் கிழியாத பாலிமர் நோட்டுகளின் பலன் அற்புதமாக இருந்தது.
கள்ளப்பணம் இல்லாத நாடு - என்ற பெயரால், பல தோழமை நாடுகள் ஆஸ்திரேலிய வர்த்தக உறவுகளை வலுப்படுத்தின. மேலும் புழக்கத்தில் உள்ள நோட்டுகளின் மதிப்புக்கும் எண்ணிக்கைக்கும் இணையான பாலிமர் நோட்டுகளைத் துல்லியமாகத் திட்டமிட்டு புழக்கத்தில் விட்டதால் எந்த நீண்டகால பாதிப்புக்கும் ஆஸ்திரேலியா ஆளாகவில்லை.
அதேபோல், 2002 ஜனவரியில் உலகின் மிகப்பெரிய பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஐரோப்பாவின் 12 நாடுகள் ஒருங்கிணைந்து மேற்கொண்டன. அப்போது புதிய யூரோ நாணயங்கள் மற்றும் பணத் தாள்களுக்காக யூரோ வெளியீட்டில் உள்ள 12 நாடுகளின் நாணயங்கள் மற்றும் பணத்தாள்கள் திரும்பப் பெறப்பட்டன. 2,18,000 வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் மூலமும் 28 லட்சம் மையங்கள் மூலமும் இந்த அற்புதத்தைத் திட்டமிட்டு நிகழ்த்திக் காட்டின, ஐரோப்பிய நாடுகள். முன்னதாக, 1998இன் மத்தியில் இருந்தே இதுபற்றி தங்கள் மக்களுக்கு ஐரோப்பிய நாடுகள் விளக்கிவந்ததால் பெரிய பிரச்னைகள் எதுவும் ஏற்படவில்லை.
ஆனால், இன்றைய உலகமயமாக்கல் காலகட்டத்தில் இத்தகைய பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது தோல்வியே என்று சொல்லும் வல்லுநர்கள், “கடந்த முறை அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பால் கறுப்புப் பணம் ஒழிக்கப்படும் என்றனர். ஆனால், அதற்கான பதில் இதுவரை இல்லை. அதேநேரத்தில், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இத்தகைய நடவடிக்கை கொண்டு செல்லப்பட்டது.
என்றாலும் கடந்த முறை அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை, பொருளாதாரச் சிக்கலையே தந்தது. இந்த நிலையில், இரண்டாவது முறையாகவும் பண மதிப்பிழப்பை அறிவித்திருப்பது ஒரு நாட்டின் மீது இருக்கும் பணத்தின் மதிப்பை அழிப்பதாக இருக்கிறது. தவிர, பொருளாதாரச் சிக்கலுக்கும் வழிவகுக்கிறது” என்கின்றனர்.
மேலும் அவர்கள், “பண மதிப்பிழப்பின் அடிப்படை நோக்கம் எல்லா வணிக பணப் பரிமாற்றங்களும் அரசின் நேரடி பார்வையில் நடக்கும்படி செய்வதுதான். ஆனால், இன்றைய உலக மயமாக்கல் காலகட்டத்தில் உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை ஒழிப்பது என்பது தவிர்க்க இயலாதது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அரசின் கணக்கு வழக்குகளில் வராமல் இன்னொரு பொருளாதாரம் இயங்குகிறது. அதாவது சிறு வணிகம் மற்றும் சொந்த தொழில்கள் வரும் வருமானத்தைத் தடுக்கும் வகையிலேயே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதன்மூலம் அரசு நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வருவதுடன், கார்ப்பரேட் மயமாக்கல் போன்ற நடவடிக்கைகளும் நடைபெறும். வங்கிகளும் லாபம் அடையும். தவிர, பணம் மொத்தமும் வங்கியில் இருக்க, கார்டுகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்வது வங்கிகளுக்கு பணத்தையும் அதிகாரத்தையும் அளிக்கும். இன்னும் சொல்ல வேண்டுமானால், பெரிய பணப் பரிமாற்றம் வங்கி மூலமே அரசின் பார்வையில் நடைபெற வேண்டும் என்பதே அவர்களது திட்டம். இதனால், எப்போதும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும். பண முதலைகள் காப்பாற்றப் படுவார்கள்” என்கின்றனர், மிகத் தெளிவாக.
அதேநேரத்தில் இதுகுறித்து அரசியலாளர்கள், “கர்நாடக தேர்தலில் ஆளும் பாஜகவின் தோல்வியை மறைப்பதற்காகவே, இந்தப் பண மதிப்பிழப்பு அறிவிப்பைத் தொடங்கியிருக்கலாம். ஏனெனில், ஆளும் பாஜகவுக்கு கர்நாடக தேர்தல் தோல்வி, பலத்த அடியாக உள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள பாஜகவுக்கு எதிரான கட்சிகள் விமர்சனம் செய்துவருகின்றன.
இதை அவர்கள் பேசாதிருக்கவே இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம். ஒரு பிரச்னை கொழுந்துவிட்டு எரியும்போது, அதை அடக்க வேறொரு பிரச்னையை பாஜக தத்ரூபமாகச் செய்யும். அதைத்தான் தற்போது செய்திருக்கிறது, அதாவது கர்நாடக தேர்தல் தோல்வியை மறைக்க இதைச் செய்திருக்கிறது” என்கின்றனர்.