மேற்கு வங்க மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 30 தொகுதிகளில், 27 இடங்களில் கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி வாகை சூடியிருந்தது. இந்த முறையும் அது தொடருமா? - சற்றே விரிவான பார்வை.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது இதில் முதற்கட்ட வாக்குப் பதிவு வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதற்கான தேர்தல் பிரசாரங்கள் நிறைவடைந்துள்ளது.
நக்சல் பாதிப்பு அதிகம் இருந்த ஐந்து மாவட்டங்களான பூரிலா, ஜகர்கிராம், மேற்கு மெதினிபூர், கிழக்கு மெதினிபுர், பாங்குரா ஆகியவற்றின் 30 தொகுதிகளுக்கு இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த 30 தொகுதிகளில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது 27 இடங்களை கைப்பற்றிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 50% அதிகமான வாக்குகளை ஒட்டுமொத்தமாக அறுவடை செய்து இருந்தது.
வெறும் 6.1% வாக்குகளை பெற்றிருந்தாலும் காங்கிரஸ் கட்சி இரண்டு இடங்களையும், 1.2% வாக்குகளை பெற்றிருந்தாலும் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஓர் இடத்தையும் வென்றிருந்தது. ஆனால், இந்த இரண்டு கட்சிகளை விட பாரதிய ஜனதா கட்சி அதிக வாக்குகளை பெற்றிருந்தது. அதாவது மொத்த வாக்குகளில் 8.6 சதவிகித வாக்குகள் பாரதிய ஜனதா கட்சியின் வசம் சென்றிருந்தது. அதேநேரத்தில், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும், கம்யூனிஸ்ட் கட்சிக்கு சுமார் 19 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.
இந்தக் கணக்கீட்டை வைத்துப் பார்த்தால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கைகள் ஓங்கி உள்ளதாகத் தெரியும். அதேநேரத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் இந்த முறை கூட்டணி அமைத்து போட்டியிடுவதால் இந்தக் கட்சிகளின் வாக்கு வங்கி கணிசமாக உயரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் அவை மொத்தமாக பதிவாகி வெற்றியினை பெருமளவிற்கு கொடுக்குமா என்பது சந்தேகத்திற்குரிய விஷயம்தான்.
அதேவேளையில், பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை, வேகமாக வளர்ந்து வரும் கட்சி என்பதால் இந்த முறை சில இடங்களையும் கணிசமான வாக்கு வங்கிகளையும் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனென்றால், பூரிலா தொகுதியை பொறுத்தவரை தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரான சுதீப் முகர்ஜி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, தற்போது அக்கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். சென்றமுறை 44 சதவீத வாக்குகளை இந்தத் தொகுதியில் இவர் பெற்றிருந்தார் என்பதால், இந்த முறை இந்தத் தொகுதி பாஜக வசம் செல்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கணிக்கப்படுகிறது.
இப்படி ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு கட்சிக்கு சாதகமான விஷயங்கள் இருந்தாலும்கூட ஆளும் கட்சி என்ற முறையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு சற்று கூடுதலான பலம் இருக்கின்றது. காரணம், இந்த தொகுதிகளில் பழங்குடியினரின் வாக்குகள் கணிசம். இந்த வாக்குகள் அப்படியே திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மற்றும் கம்யூனிஸ்டுகள் வசம் செல்லும் என்பதால் போட்டி சற்று கடுமையாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
30 தொகுதிகளுக்கு மட்டும்தான் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது என்றாலும்கூட மம்தா பானர்ஜி 12-க்கும் அதிகமான தேர்தல் பரப்புரைகளில் இந்தப் பகுதிகளில் ஈடுபட்டிருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை, பிரதமர் நரேந்திர மோடி நான்கிற்கும் அதிகமான பேரணிகளிலும், அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் ஏராளமான பொதுக் கூட்டங்களையும் நடத்தி இருக்கின்றனர்.
இப்படி அனைத்து கட்சியினரின் தீவிரப் பிரசாரம், இந்தத் தேர்தல் களத்தை மேலும் கடினமாக்கி இருக்கிறது. வேட்பாளர்களை பொறுத்தவரை மொத்தம் 196 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் 48 பேர் தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர். இவர்களில் 42 பேர் பிணையில் வெளிவர முடியாத அல்லது ஐந்து வருடங்களுக்கும் அதிகமாக சிறை தண்டனை விதிப்பதற்கான வாய்ப்புள்ள மிகக் கடுமையான குற்றங்களை செய்தவர்கள்.
மொத்த வேட்பாளர்களில் 19 பேர் கோடீஸ்வரர்கள்; 4 பேர் எந்த சொத்தும் இல்லாத ஏழைகள் என தேர்தல் விண்ணப்பங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
இப்படி கலவையான, அதேநேரத்தில் மிகவும் கடினமான முதற்கட்ட வாக்குப் பதிவு மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள நிலையில், நாட்டின் ஒட்டுமொத்த பார்வையும் மேற்கு வங்கம் பக்கம் திரும்பியுள்ளது.
- நிரஞ்சன் குமார்